Tuesday, July 27, 2021

50களில் இருந்து இறுதிவரை 'புதுமைப்பிரியை' ஆகவே வாழ்ந்தவர்!

 

"எழுத விரும்புகிற எல்லோருக்கும் எழுதுகோல் வசப்படுவதில்லை. ”எனக்குச் சொந்தமான எழுதுகோல்கொண்டுஇ எதையும் எழுதுவேன்“ என்று கிறுக்குகிறவர்களைஇ எழுத்துலகம் தன் நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்திவிடுகிறது. தடை அகன்று அதற்குள் நுழையவேண்டின்இ மானுடம் புரிந்திருப்பதும் மற்றெல்லாம் அறிந்திருப்பதும் அவசியம். இத்தகைமைகளை தன்னியல்பாய்க் கொண்டிருந்த “பத்மா அம்மையாரை“ வசப்படுத்தஇ உண்மையில் எழுதுகோல்தான் காத்துக் கிடந்திருக்கும்போல!" என்று திருமதி பத்மா சோமாகந்தனுடன் பழகிய ராஜாமகள் குறிப்பிட்டிருந்தார்.

1950களில்'புதுமைப்பிரியை' ஆகி இலக்கிய சமூகத்தை பெண்கள் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவர் திருமதி பத்மா சோமகாந்தன்! 2020 வரைக்கும் புதுமைகளை உள்வாங்கி எழுத்தை ஆண்டுகொண்டு இருந்தவர். 1954இல் நடந்த சுதந்திரன் வாரப் பத்திரிகையின் சிறுகதைப்போட்டியில் முதல்பரிசு பெற்ற முற்போக்கு பெண்மணி இவர். காணும்போதெல்லாம் அந்த நாட்களை கதைகதையாகக் கூறக்கேட்டிருக்கிறோம். பெண்களெல்லாம் கண்ணீர் இழுப்பிகள் என்று எண்ணிக்கொண்டிருந்த காலத்தில் சமூகம்இ அரசியல்இ தனிமனித உணர்வுகள் என கதையும்இ மேடைப்பேச்சுமாக இருந்த காலத்தில் தான்னால் தன்குடும்பம் எதிர்கொண்ட மனத்துயர்களையும் பகிர்ந்துள்ளார். ஒரு பெண்ணாக அதிலும் ஒரு பிராமணப்பெண்ணாக அரசியல் மேடையில் அரசியல்பேசிஇ சமூகக் களத்தில் அரசியலும் முற்போக்கும் எல்லாருக்கும் ஆனது அதில் ஆண்பெண் பேதம் இல்லை என துருத்திக்கொண்டு எழுந்து நின்றவர். தமிழுக்காக பெண்களுக்காக என எந்தஇடத்திலும் தன் எழுத்தாலும்இ பேச்சாலும் சலசலப்பை ஏற்படுத்திவிடுவார். 

சமூகத்திற்காக தமது நேரத்தை ஒதுக்குவதில் திருமதி பத்மா சோமகாந்தனும் திரு சோமகாந்தனும் போட்டிபோட்டுக்கொண்டு முன்னின்றவர்கள். இலக்கியத்திற்காகஇ பெண்களுக்காக மாகாநாடுகள்இ பட்டறைகள் என அவற்றை ஒழுங்கமைப்பதிலும் கொண்டு நடத்துவதிலும் வல்லவர்களாக இருந்தனர். அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் நாவலர் விழாஇ பாராதியார் விழா என தமிழுக்கு விழா எடுத்தபோது சோமகாந்தன் அவர்களுடன் இணைந்து இவரும் தனது பணிகள்பற்றி கூறியிருக்கிறார். அன்றில் இருந்து அவரது இறுதிக்காலம் வரை பொது அமைப்புகளுக்கு சந்திக்க இடம் தேவையென்றால்இ தனது வீட்டை அதற்கு பயன்படுத்த முழுமனதுடன் உவந்தளிப்பவர். எந்நேரமும் உற்சாகத்துடன் வாசிப்பும் எழுத்தும் என இயங்கும் இவர் மற்றவர்களையும் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துவதில் பின்நிற்பதில்லை. எழுத முடிந்தும் எழுத முடியாத வேலைப்பழுவில் இருக்கும்பெண்களுக்கு தலைப்பைக் கொடுத்து இரண்டு கிழமைக்குள் கட்டுரை வேண்டும். என கறாராக நின்று எழுதுவித்து  பல பெண்களை உற்சாகப்படுத்தியுள்ளார். கொழும்பு தமிழ் சங்கத்தில் நடக்கும் பெண்கள்தின நிகழ்வில் அதை வடிவமைத்து கொண்டு நடத்துபவர் இவராக இருப்பார். இந்த வயதிலும் பெண்ணிய கருத்துக்களை செவ்வனவே உள்ளவாங்கி அதைப் புரிந்துகொண்டு அதற்கான களங்களையும்இகாலங்களையும் உருவாக்கி கருத்தியலை சமூகத்துள் கொண்டு சேர்ப்பதில் சளைக்காமல் இயங்கினார்.

இலக்கியத்தில் உலாவரும் பலருக்கு விழா எடுக்கும் கலாசாரம் இருக்கின்றபோது ஏன் அவர்கள் பெண் இல்கியவாதிகளுக்கு எடுப்பதில்லை என்ற கேள்வியை எழுப்பி ஒளவைக்கு தான் விழா எடுக்கவேண்டும் என மனதார இயங்கி அதை செய்தும் காட்டினார். கொழும்பில் 2014இல் ஒளவைக்கு விழா எடுத்து பல தலைப்புகளில் பலரையும் ஆய்வுசெய்யவைத்து சிறப்புற நடத்தினார்.  

திருமதி பத்மா  சோமகாந்தன் இலக்கியம்இ பெண்ணியம்இ ஊடகம்இ ஆன்மீகம் பற்றி அந்த அந்த காலத்தில் ஆழமான பார்வையைக் கொண்டிருந்தார். ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் முன்னரைவிடவும் உற்சாகத்துடன் எழுத்துலகில் பிரகாசித்தார். ஒவ்வொரு மனிதரையும் கூர்ந்து நோக்கும் பண்பும் ஆழ ஊடுருவும் அறிவும் வாய்க்கப்பெற்றவராக தன் கதைகளைக் கட்டுரைகளை முன்வைப்பவர் இவர். அந்த வகையில் தான் கண்ட பெண்களில் 24பேரைப்பற்றி தொகுத்து எழுதிய நூல் 'ஈழத்து மாண்புறு மகளிர்'. பெண்களின்இ இளைஞர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைத்த கேள்விபதில் 'நெஞ்சுக்கு நிம்மதி" என்ற தலைப்பில் நூலக வந்தது. ஒவ்வொரு தனிமனிதர்களையும் உற்றுநோக்கும் இவரது கூருணர்வுக்கு சான்றாக இவரது சிறுகதைத் தொகுப்புகள் உள்ளன.

இலக்கிய இணையர்களாக வலம் வந்தவர்கள் 2006இல் திரு சோமகாந்தனின் இழப்பிற்கு பின் உறவுகள் குறித்த பார்வையில் போலிகளையும் வெறுமையையும் உணர்ந்தவராக மீண்டும் சமூக வெளிக்குள் தன்னை முன்னிறுத்தினார். முன்னரைவிடவும் வீறுகொண்டு எழுத்துப் பணிசெய்தார். ”எழுத்து ஒன்றுதான் என்துயர் தீர்க்கும்” என்றவர்இ தன் படைப்புகளுக்காகவும்  பத்திரிகைகளுக்காகவும் எழுதினார். எண்ணற்ற சந்திப்புகளில் கலந்துகொண்டு நல் உரையாற்றினார். “ஓய்வுக்குப் பின்னரும் ஓய்வின்றி இருக்கிறீர்களே!” என்றால்இ ”அதுவே எனக்கான டொனிக்“ என்று சிரிப்பார். 

திருமதி பத்மா சோமாகாந்தன் தான் அங்கம் வகித்த பல்வேறு இலக்கிய குழுக்களில் நடைபெறும் ஆதிக்க செயற்பாடுகளை மனம்நொந்து கூறுபவர் அல்ல. அந்த அந்த இடத்திலேயே அதற்கு பதிலிறுத்து தன்னை ஒரு தமிழ்ப்பெண் ஆளுமையாக அடையாளப்படுத்திவிடுவார். விவாதங்களின்போது தன் கருத்தை அவர் நியாயமாகப் பதிவு செய்ததை பலமுறை கண்டிருக்கிறேன். அது பலருக்கு ஒவ்வாமையைக் கொடுத்திருக்கலாம். அவரின் சொந்த விளம்பரத்திற்காகதான் அப்படிச் செய்கிறார் என ஒவ்வாமைக்காரர் புலம்புவதுண்டு. ஆனாலும் பெண்களுக்கான இடத்தை ஏற்படுத்துவதற்கும் அதைத் தக்கவைப்பதற்காகவும் தான் அவ்வாறு செய்ததாக அவர் கூறும்போது பெருமிதம் பொங்கும். 1950களில் எவ்வாறு தன்னை ஒரு புதுமைப்பிரியையாக கண்டெடுத்தாரோ அதையே அவர் இறுதிவரை கடைப்பிடித்து வாழ்ந்தார். இளவயதினரிடம் வெகு இயல்பாய் தானாகவே இறங்கிவந்து பழகும் பக்குவமும் உற்சாகப்படுத்தும் பண்பும் இவரின் முத்திரையாகும். பல ஊடகங்களில் எழுத்தாளராக இயங்கிக்கொண்டிருந்தபோது ஊடகங்களில் வேலைசெய்யும் தமிழ் பெண்களுக்கு ஒரு அமைப்பை நிறுவுவதற்கும் அதற்காக தனது இல்லத்தில் இடம் தந்து கூட்டங்களைக் கூட்டுவதற்கும் உதவியாக இருந்தார். அப்போது வேலைசெய்யும் ஊடகப்பெண்களுக்கு நேர நெருக்கடியாக இருந்தபோது தானே எல்லா பொறுப்பையும் எடுத்து தலைவராக நின்று 'ஊடறு' என்று பெயர் சூட்டி அந்த பெயரை பேராசிரியர் சிவத்தம்பியிடம் விவாதித்து முன்னிறுத்தினார். பல கூட்டங்களைஇ பயிற்சிப்பட்டறைகளைஇ சர்வதேச பெண்கள் தினத்தை பெரு நிகழ்வுகளாக நிகழ்த்தி காட்டடினார். இதற்கு உறுதுணையாக நின்ற காலம் சென்ற சாந்தி சச்சிதானந்தனும் இந்த இடத்தில் நினைவுகூரத்தக்கவர்கள்.பிற்காலங்களில் என்ற பெயரில் புலம்பெயர் நாட்டில் பெண்கள் அமைப்பு ஒன்று இருந்ததால் அந்த பெயர் கைவிடப்பட்டது. இவ்வாறு பெண்கள் முன்னேற்றம் என்றால் முன்னிற்கு நிற்பவர் பத்மா சோமாகாந்தன் அவர்கள்.

புரட்சிக்காரராக இருந்தாலும் கால மாற்றங்கள் பலரை காலத்தோடும் சமூகத்தோடு ஒத்தோட வைத்து புரட்சிக்கருத்துக்களை நீர்த்துப்போகச் செய்துவிடும். பத்மா அம்மையாரிடம் அதைக் காணமுடியாது. இறுதிக்காலங்களில் கூட 'என்னால் அதிகம் சிந்திக்க முடியாமல் இருக்கிறது. என்னிடம் கட்டுரை கேட்டிருக்கிறார்கள். புதிய கருத்துக்கள் இருந்தால் சொல்லுங்கள்...என்று கூறி ஒ;வ்வொரு விடயத்தையும் எப்படிப்பார்க்கலாம்? எப்படி சிந்திக்கலாம்? என பல்வேறு கோணங்களையும் விபரிக்கும்படி கேட்பார். உண்மையில் அதைப்பார்த்து வியந்திருக்கிறோம். அதற்காக இறுதிக்காலங்களில் ஒருமுறை அவரைச் சந்தித்து உரையாடினோம். 

இலக்கியகாரர் இ சமூகத்திற்காக இயங்கியவர்களின் வயது மூப்பின் இறுதிக்காலங்கள் எல்லோரையும் போல் உற்சாகம் அற்றவைதான். ஆனால் இவர்கள் சந்திக்கவும் கதைக்கவும் காணவும் விரும்புவது தமது இலக்கிய சொந்தங்களையே. அதற்கு இவரும் விதிவிலக்கல்ல. அதற்கு இந்த கொரோனா என்ற பெரும் தொற்றுக்காலம் அனுமதிக்கவில்லை. அந்த துயர் இன்னும் உள்ளது. 2020 ஜூலை 15ஆம் திகதி அவரின் இறப்பிலும் பலராலும் பங்கேற்க முடியாது போனது. தமிழுக்கு பெண்களுக்கு என துடித்துக்கொண்டிருந்த ஒரு இதயமும் மூளையும் துடிப்பதை நிறுத்திக்கொண்டாலும் விதைத்த சிந்தனைப்பொறிகள் ஆங்காங்கே எரிந்துகொண்டிருக்கின்றன.

எம்.எஸ்.தேவகௌரி

(எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் அவர்கள் இறந்த ஒரு வருட நினைவையொட்டி 2021  July - தமிழ் மிரர் , ஈழநாடு பத்திரிகைகளில் வெளியானது)


Tuesday, June 15, 2021

தொடர்பூடகங்களும் பெண்களும் - பெண்களை ஆர்வப்படுத்தலும் ஆளுமைப் படுத்தலும்


                                                                                               source :https://safejournalists.net/

எம்.தேவகௌரி
பதில் ஆசிரியர்,
ஞாயிறு தினக்குரல்.
2004


ஊடகங்கள் சமூகத்தில் கருத்து நிலையை உருவாக்குவதிலும் பிரதிபலிப்பதிலும்
பரப்புவதிலும் மிக முக்கிய பங்கு வகிப்பன. எனவே இந்த ஊடகங்கள் பெண்கள்
பற்றிய விடயங்களை கையாளும் முறைமை சமூக முக்கியத்துவம் வாய்ந்தது.
அனேகமாக பிரதான ஊடகங்கள் ஆண்களை மையமாக வைத்தே தகவல்களை வெளியிட்டு
வருபவை. அதாவது அந்த ஊடகங்களுக்கான வாடிக்கையாளர்கள் (கேட்பவர்கள்,
பார்ப்பவர்கள், வாசிப்பவர்கள்) ஆண்களே என்ற கருத்தாக்கம் தான்
முதன்மையானதாக இருக்கிறது. ஒரு தினப் பத்திரிக்கையை எத்தனை பெண்கள்
வாசிக்கிறார்கள் ? அதிலும் அவர்கள் வாசிப்பது என்ன? ஞாயிறு பத்திரிகையில்
பெண்கள் வாசிப்பது என்ன இவையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்.

பத்திரிகையாயின் பெண்களுக்கு ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்தப்
பக்கத்தில் பெண்கள் பற்றிய விடயங்கள், பெண்களுக்கான விடயங்கள், குடும்ப
தளத்தில் இருந்து கட்டமைக்கப்பட்டிருக்கும். குழந்தை, சமையல், அழகு
முக்கியமானவையாக இருக்கும். அத்துடன் பெண்களுக்கான ஒழுக்கம் கணவனை,
உறவினர்களை, வயோதிபர்களை கவனித்தல், பராமரித்தல் பற்றிய விடயங்களும்
கொடுக்கப்படும். இவை பெண்களுக்கு.

அடுத்து பெண்பற்றிய விடயங்களை, உதாரணமாக சினிமாவில், சினிமாவை
பத்திரிகையில் கொண்டுவரல் - இவற்றில் பெண்களை காட்சிப்படுத்தல் ஆண்களை
வாசகர்களாக, பார்வையாளர்களாக வரித்துக் கொண்டதன் விளைவு.  அது இன்றுவரை
தொடர்வதுதான் அபத்தம். பெரிய திரை ஆண்களுக்கு, சின்னத்திரை
(வீட்டுக்குள்) பெண்களுக்கு. இத்தகு பிரிப்பைத்தான் சகல ஊடகங்களும்
கருத்தியல் ரீதியாக செய்கின்றன. இதனால், ஆண் - பெண் நோக்கு, தேவை வேறு
வேறாகி அவர்கள்  இரு துருவங்களாக வளர்த்தெடுக்கப் படுகின்றார்கள். ஆனால்
இவர்கள் ஒன்றாக ஒரே கூரையின் கீழ் வாழவேண்டியவர்கள். இன்னும்
சொல்லப்போனால், ஆணுக்கு உலகமே வீடாகவும், பெண்களுக்கு வீடே உலகமாகவும்
இவர்களை வளர்த்தெடுக்கும் பணியை நன்றாகவே தொடர்பூடகங்கள்
செய்துவருகின்றன. இதை நாம் விளங்கிக் கொண்டால்தான், தொடர்பூடகங்களில்
கொண்டுவரக் கூடிய மாற்றங்கள் பற்றியும் மரபில் சேர்க்க வேண்டிய விடயங்கள்
பற்றியும் தெளிய முடியும்.

தொடர்பூடகங்கள் பெண்களை எப்படி கருத்துருவாக்கம் செய்கின்றன என்பதை ஆழமான
புரிதலுடன் விளங்கிக் கொள்கின்ற போது, பெண்களின் முழு ஆளுமையும்
குடும்பவட்டத்திற்குள் கட்டமைக்கப்படுவது புரியும். அது கூட எதிர்மறையாக
இருப்பது தான் இன்று பெரிய சவால்.

அதாவது எம்மில் 70% ஆன பெண்கள் சமூகத்தில் தொழிற் துறைகளில் இறங்கியுள்ள
நிலையில் குடும்பம் சார்ந்த கருத்துகள் இரட்டைச் சுமையை
ஏற்படுத்துகின்றதேயொழிய, நடந்த மாற்றங்களுக்கு அமைய அவை
கட்டமைக்கப்படவில்லை.

உதாரணமாக, சமையலை இலகு படுத்த இரவில் காய்கறி வெட்டுதல், பாத்திரம்
கழுவுதல் போன்ற வேலைகளைச் செய்து வையுங்கள் என்ற தகவல் பெண்களுக்காக
தரப்படும்..

அலுவலகம் சென்று வரும் பெண் (இன்று அனேகர் அப்படியானவர்கள்) ஐந்து
மணிக்குப் பின் வீட்டுக்கு வந்து வீட்டு வேலைகள், சிலருக்கு தன்னார்வ
விருப்புகள், (வாசித்தல், ரீ.வி. பார்த்தல், எழுதுதல்) குடும்பத்தினருடன்
உரையாடல் எல்லாம் முடித்து படுக்க பத்து மணிக்கு மேலாகின்றபோது அடுத்த
நாள் சமையலுக்கு தயார் படுத்த முடியுமா? இந்த விடயங்களை பிள்ளைகளுடன்
கணவருடன் பங்கீடு செய்வது பற்றி யாரும் பேசுவதில்லை.
இந்த நிலை,  ஒட்டுமொத்த குடும்பச்சுமையைப் பெண் ஏற்றுக்
கொள்ளவைக்கப்படுவதால் அவள் சிந்தனையும் விரிவுபட வழியில்லை. இதனால்,
விரைவில் சலிப்படையும் பெண் பல பிரச்சினைகளையும் உருவாக்க காரணமாகிறாள்.

இதனால் தான் பல வருடங்களுக்கு முன் பெண் எழுத்தாளர்கள் பற்றி
குறிப்பிடும் போது அவர்கள் வெறும் கண்ணீர் இழுப்பிகள் என்ற விமர்சனம்
முன்வைக்கப்பட்டது. (இன்று சின்னத்திரை நாடகங்கள் பெண்களை வைத்து அதைச்
செய்வது வேறு விடயம்).

இந்த நிலையில் தொடர்பூடகங்களில் பெண்கள் ஆர்வம் கொண்டு அதில் தம்மை
இணைத்துக் கொள்வது பல யதார்த்தங்களை வெளிக்கொணர உதவும். அதிலும் பெண்
பற்றிய அக்கறை கொண்ட பெண்களால்தான் இது ஏற்பட முடியும். எப்படி
ஆளுமையுள்ள பத்திரிகையாளர்களால் ஒரு சமூக கருத்தியலை கட்டமைக்க,
மாற்றியமைக்க முடியுமோ அப்படித்தான் பெண்பற்றிய யதார்த்தங்களை உணர்ந்த
பெண்ணால் தான் தொடர்பூடகங்களில் கருத்துகளை முன்வைக்க முடியும். நம்மில்
பலர் நம் சமூக யதார்த்தத்தை எமது சிந்தனையில் எடுக்காமலே
கதைபண்ணிக்கொண்டும், கவிதை வடித்துக்கொண்டும், ஏற்கனவே எழுதிய பழமொழிகளை
தூசி தட்டிக் கொண்டும் இருக்கிறோம்.

பெண்ணுக்குரிய பிரச்சினைகளை குடும்பமட்டத்தில் மட்டுமே வைத்துப்பார்த்து
தீர்ப்பிடும் நிலையைத்தான் நாம் கொண்டியங்குகிறோம். இன்று நம் சமூகப்
பெண்கள் சமூக தளத்திற்கு இழுத்து வரப்பட்டிருக்கிறார்கள். போர் தந்த
மாற்றம் இது. இப்போது அதுதான் வாழ்வாகிவிட்டது. இந்த நிலையில்
குடும்பத்தை மட்டும் பிரதானமாகக் கொண்டு பெண் இப்படி இருக்கவேண்டும் இது
இது செய்ய வேண்டும் என்று கூறி ஒரு கருத்துரு வாக்கத்தை மேற்கொள்வது
முரணானது. சாதாரணமா `அழகு' பற்றி கூறும் நாம் இன்று எமக்குத் தேவைப்படும்
உடல் உறுதி, உடல் உற்சாகம் பற்றி கதைக்கிறோமா? அதற்கு என்ன செய்யவேண்டும்
என்பதை முக்கியப் படுத்துகிறோமா? முடி நீளமும் முக அழகும் எந்தக்
கருத்தாக்கத்தில் எமக்குத் தேவை? இந்தக் கேள்விகளை நாம் கேட்டுப் பார்க்க
வேண்டும்.

எனவே ஒரு சின்ன விடயமானாலும் அது இன்றைய யாதார்த்த பெண்ணுக்கு ஏற்புடையது
தானா? என்ற சிந்தனை வேண்டும். அத்துடன் கீழ்மைப்படுத்தல்,
பலவீனப்படுத்தல் எந்தவிதத்திலும் பெண்ணின் இயற்கையான விடயம் என்ற தொனி
இல்லாதவாறு கருத்துருவாக்கம் செய்தல் முக்கியமானது. பத்துப்பேரை ஒன்றாக
அடிக்க முடியும் என்று திரைப்படத்தில் ஆணை கதாநாயகனாக காட்ட
முடிந்திருக்கிறது. ஆனாலும் பலம் பொருந்தியவனாக ஆகமுடியும் என்ற
நம்பிக்கை எவ்வளவு தூரம் பதிந்திருக்கிறது! இல்லாத ஒன்றையே நடக்க முடியாத
ஒன்றையே இவ்வளவு தூரம் காட்டமுடியும் என்றால், யதார்த்தத்தை, உண்மை
விடயங்களை எமது வாழ்வாதாரங்களை ஏன் காட்டமுடியாது? ஏன் வெளிக்கொணர
முடியாது?

வெளியில் இருந்து ஏதோ ஒருவகையில் தொடர்பூடகங்களுடன் தொடர்பு கொள்ளும்
பெண்களின் சிந்தனைக்காக மேற்கூறிய விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

அடுத்த விடயம் ஊடகங்களில்  பணிபுரிவது! இது ஒரு பெரிய சவால் தான்.
மூன்றாம் உலக நாடுகளிலேயே முதல்முதல் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய
நாடு, முதல் பெண் பிரதமரைக் கொண்ட நாடு என்ற பெருமையை வைத்திருக்கிறோம்
நாம். பெண்கள் அதிலும் தமிழ் பெண்கள், சமூகத்தில் பொதுமக்களுடன் தொடர்பு
கொள்வதென்பது பெரிய விசயம். பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் விடயத்தில்
ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களில் ஜி.ஜி.யால் சொல்லப்பட்ட ஒரு விடயம்.
`ஆங்கிலேயரின் நாகரிகத்திற்கு ஆட்பட்டு எமது குடும்பப் பெண்களை `பொது
மகளிர்' ஆக்கப்பார்க்கிறார்கள்' என்பது. இப்படி சமூக சிந்தனையை பெண்கள்
ஏற்படுத்திக் கொள்வதே பெரும் சிரமமாக இருந்த வரலாற்றில் வந்த நாம், இன்று
போராளிப் பெண்களைக் கொண்டியங்குகிறோம்; பெண் தலைமைத்துவ குடும்ப மரபைக்
கொண்டிருக்கிறோம். ஆனால் தொடர்பூடகங்களில் பணிபுரிவதற்கு
முடியாதிருக்கிறது. தொலைக்காட்சிகளில் செய்தி வாசிக்க பெண் தேவை, கணீர்
என்ற குரலில் நேயர்களைச் சொக்கவைக்க பெண் தேவை. பத்திரிகையை
கவர்ச்சியாக்க பெண் தேவை; ஆனால், ஆழமான கருத்தியல்களை சமூக அபிவிருத்தி,
அரசியல், பொருளாதாரம் பற்றிய அக்கறைகளை கொண்டு தொடர்பூடகங்களில் இயங்க
பெண் `இல்லை'
ஏன்?
பெண்ணுக்குக் கொடுக்கப்படும் வாய்ப்புகள் இவை சார்ந்து பெண் ஆர்வப்படல்
என்பன இல்லாமல் இருக்கின்றது. இதற்குக் காரணம் சமூகம் பெண், தொடர்பூடகம்
பற்றி வைத்திருக்கும்
விழுமியங்கள். போருக்குள்ளால் புடம் போடப்பட்ட நாங்கள் எங்கள் பலத்தை
சரியாக இனம் காணவில்லை. சமூகத்தளத்தில் எம்மால் ஆளுமையாக இயங்கமுடிகிற
போது ஏன் தொடர்பூடகங்களில் அதை வெளிக்கொணர முடியாது?
பெண் ஏமாற்றப்பட்ட
செய்தி, பெண் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்ட செய்தி சுவாரஸ்யமான
செய்திகளாக மட்டும் போடப்படும் நிலைதான் உள்ளது. இதுவே பெண்கள்
ஊடகங்களுக்குள் வேலை செய்கின்றபோது, இயல்பாகவே அடுத்து என்ன நடந்தது,
குற்றம் புரிந்த நபர் யார்? அவருக்கு கிடைத்த தண்டனை என்ன? அல்லது தண்டனை
கிடைக்கவில்லையா? இது எல்லாம் செய்தியாகும். இதுவே அக்குற்றத்தை
குறைப்பதற்குமான வழியுமாகும்.

அபிவிருத்தி, மீள்குடியேற்றம் பற்றியெல்லாம் சிந்திக்கும் போது, பெண்ணைப்
பற்றி யார் சிந்திக்கிறார்கள்? சமூக மறு உற்பத்தி பண்பைக் கொண்டுள்ள
பெண், குடும்பங்களை பராமரிக்கும் பெண், சமூகத்தில் முக்கிய கடமைகளை
நிறைவேற்றும் பெண் கவனிக்கப்படுவதில்லை. அவளது போசாக்குப் பற்றியோ,
சுகாதாரம் பற்றியோ யாருக்கு அக்கறை? இது பற்றி பெண்களால்தான் கேள்வி
எழுப்ப முடியும். பெண்கள் சமூகத்தின் முக்கிய பங்காளிகள் என்பது
எல்லாவிதத்திலும் முன்னிலைப் படுத்தப்பட வேண்டும். பெண்களின் ஒவ்வொரு
செயலும் ஆளுமை மிக்கதாக மிளிர வேண்டும். இதற்கு பெண் தான் தன்குடும்பம்,
தன்சமூகம், தன் நாடு ஆகியவற்றில் கொண்டிருக்கக்கூடிய தொடர்பு முக்கியம்.

தொடர்பூடகங்களிலும் முடிவெடுக்கும் தகுதியைப் பெற்ற பெண்கள் இலங்கையில்
இல்லை. அதிலும் தமிழ்ப் பெண்கள் அறவே இல்லை. பெரும்பாலும் ஊடகங்களில்
வேலை செய்யும் பெண்கள் அலுவலகத்தினுள்ளே வேலை செய்பவர்களாகவே உள்ளனர்.
இன்றைய எமது ஊடகத்துறைகூட  குறிப்பாக தமிழ் ஊடகத்துறை பெரியளவில்
வளர்ச்சியடைந்ததாக இல்லை. ஒரு விவரணக் கட்டுரை எழுதுவதற்கான தகவலை திரட்ட
வெளியில் சென்று வருதல், புலனாய்வு கட்டுரைக்கான தகவல் சேகரிப்பு
என்பவற்றைக் கூட நாம் செய்ய முடிவதில்லை. ஆளணி பற்றாக்குறை மற்றும்
பாதுகாப்பின்மை என்பன முக்கிய காரணங்களாகும். அத்துடன் தொடர்பூடகத்துறை
கல்வியியல் ரீதியாக வளர்த்தெடுக்கப்படாததும் ஒரு குறைபாடு. இன்று அந்த
வாய்ப்பு உள்ளது. அதில் பெண்களையும் உள்வாங்கி பயிற்சி அளித்தால்
நம்பிக்கை தரக்கூடிய யதார்த்த சமூகத்தை கட்டியெழுப்பலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு ஓரளவுக்காவது
அந்தந்த நிறுவனங்களிலாவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஊடகத் தொழில்
என்பது எனக்குப் பிடித்ததையும் உங்களில் ஒருவருக்கு பிடித்ததையும்
எழுதுவதல்ல.

சமூக யதார்த்தத்தில் இருந்து பல்வேறு கோணங்களிலும் பிரச்சினைகள்
அணுகப்பட்டு ஆழமான சிந்தனையில் வளமான சமூகத்தை எதிர்பார்த்து
கட்டமைக்கப்படுவது, அல்லது முன்வைக்கப்படுவது.

இதில் சமூகத்தில் சரிபாதிக்கும் மேலிருக்கும் பெண்களும் பங்கெடுத்துக்
கொள்வது ஒரு சமநிலைச் சமூகத்தை உருவாக்க, பிரச்சினைகளை தெளிவாக அணுக
வழிகோலும்.

உலகெங்கும் இன்று பெண்கள் தொடர்பூடகங்களில் மிகுந்த தாக்கம் மிக்கவர்களாக
இயங்குகிறார்கள். அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பெண் ஊடகவியலாளர்கள் 40
வீதத்தினர் உள்ளனர். போர் காவு கொண்ட எம் சமூகத்திலும் பெண்கள் அரிய பல
பணிகளை ஆற்றி வருகின்றனர். ஆனால், அவை சரியாக இனம் காணப்பட்டு
வளர்த்தெடுக்கப்படவில்லை. இவற்றை செய்யக்கூடியவர்கள் பெண்கள் தான்
அதிலும் சமூகம், பெண்  பற்றிய சிந்தனைகளைக் கொண்டவர்கள். அவர்களை
ஊடகங்கள் வரவேற்கவேண்டும்.

அத்துடன் சமூகத்தளங்களில் அகலக்கால் வைத்திருக்கும் நம் பெண்கள் தம்
சிந்தனையிலும் சமூக தளத்திலிருந்தும் தம் இயங்கியலுக்கான மரபுகளைக்
கட்டியெழுப்பவேண்டும்
. அதற்கு இந்த உணர்வு உள்ள பெண்கள், ஊடகங்களில்
உள்வாங்கப்படவேண்டும் அல்லது உள்வாங்கப்பட்ட பெண்கள் இத்தகு சிந்தனையை
வளர்த்துக் கொள்ள வேண்டும்.

(2004 ஊடறு பெண்கள் அமைப்புக்கு எழுதப்பட்டது )