Thursday, February 28, 2008

குடும்ப பங்காற்றறில் ஆண்..?



1928ஆம் ஆண்டு அரசாங்க சபையில் டொனமூர் யாப்பு தொடர்பான விவாதம் நடைபெற்றது. அதன்போது பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் விடயம் பெரும் வாதப்பிரதிவாதங்களுக்குட்பட்டது.அதன் பின்னர் டொனமூர் முன்னிலையில் பொன்னம்பலம் இராமநாதன் சாட்சியமளிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் எங்கள் பெண்களை அவர்பாட்டில் இருக்க விடுங்கள். கடவுளின் விருப்பப்படி அவர்கள் இந்த உலகத்தில் கீழானவர்களாக உள்ளனர் எதற்காக என்பது பற்றி நீங்கள் அறிய நியாயமில்லை. பெண்களின் முழு வாழ்க்கையும் அவர்களது கவனமும் வீட்டிலேயே இருக்க வேண்டும். அதற்கப்பாலான ஒரு உலகமில்லை. வீட்டுப் பொறுப்பிற்கப்பால் அவர்கள் செல்வதற்கு இடம் கொடுக்க வேண்டாம்.’
அந்த நேரத்தில் வெளிவந்த பத்திரிகைகளும் இது தொடர்பான செய்திகளை வெளியிட்டு வந்தன. 1930இல்ஈழகேசரிதனது ஆசிரியத் தலையங்கத்தில்தமக்கென்று ஓர் சொந்த அபிப்பிராயத்துடன் விஷயங்களைப் பூரணமாக ஆலோசனை செய்து சரி பிழை அறியும் ஆற்றலும் பெண்களிடத்திலிருக்கிறதா..?’ என்று எள்ளி நகையாடியுள்ளது.
இந்த தகவல்களையெல்லாம் என்.சரவணன் எழுதியஅரசியலில் பெண்களும் பெண்களின் அரசியலும்என்ற நூலில் பார்க்க முடியும்.
இந்தக் கருக்துக்களைப் பார்க்கும்போது பெண்களை அவர்களது ஆளுமைகளை கணிப்பிட்டிருந்த விதமும், குடும்பம் தொடர்பான விடயங்களை பெண்களுடன் மட்டும் இணைத்திருந்த விதமும் அதனூடாக குடும்ப பொறுப்புக்களை கீழ்ப்படுத்தியிருந்த விதமும் புரிகிறது. சொற்களின் கருத்தாக்கங்களினூடாக இவற்றை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.அதாவது சொல்லப்பட்ட கருத்துக்களினூடாக சொல்லப்படாத விடயங்கள் நிறையவே உள்ளன.
இன்று 75சதவீதமான பெண்கள் வெளியில் கருமமாற்றுபவர்களாக மாறிவிட்டனர். குடும்பம் என்கிற அலகும் மிகக்கவனமாக கையாளவேண்டிய தொன்றாக மாறிவிட்டது. அன்பு ஆதரவு போன்ற உணர்வுகளால் இளையோட பொருளாதாரரீதியாகவும் , நீதி நேர்மையான தனிநபர் உரிமகைளுடனும் ஆளுமை விருத்தியில் பங்கெடுக்கும் ஒரு அங்கமாகவும் குடும்ப அலகை கவனிக்கவேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.
ஆண்-பெண் இருவரும் இணைந்த குடும்ப அலகில் ஒரு ஆணின் பங்காற்றல் எத்தகையது.? ஆணுக்குஉலகமே வீடு, பெண்ணுக்கு வீடே உலகம்என்று இன்றும் நம்மால் கூறிக்கொண்டிருக்க முடியுமா? ‘தனிமனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஐகத்தினை அழித்திருவோம்என்று கூறிய பாரதி தன் குடும்பத்தினைஎப்படி கவனித்தான்? பக்கத்து வீட்டில் வேண்டிவைத்த அரிசியையும் காக்கை குருவிக்குப் போட்டு சுகம் கண்டதில் மனைவி பிள்ளைகளை பட்டினியாக்கினான்.
சமூக வாழ்வு, குடும்ப வாழ்வு இந்த இரண்டையும் எப்போதும் முரண்ணாகவே வைத்திருக்கிறோம். குடும்பத்தை எப்போதும் சுயநலத்தன்மை கொண்ட அலகாகவே காண்கிறோம். என் மனைவி, என் கணவன், என் பிள்ளை என சொத்துடைமையாக பார்க்கும் நாம் தனி மனித உரிமைகளுடனான பண்புகளை கொண்டு அதை நோக்கிறோமா?
குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் சமமான பங்காற்றல் இருக்கவேண்டும்சமமானஎன்பதைவேறுபட்டபங்காற்றல் என்று அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. ஒருவர் இல்லையென்றால் அடுத்தவர் அந்தப் பங்காற்றலை பூரணப்படுத்தக் கூடியளவுக்கு இருக்க வேண்டும்.
ஒரு கிழமை, இரண்டு கிழமை கணவன் வீட்டில் இல்லையென்றால் வெளியில் கருமமாற்றும் ஒரு மனைவியால் குடும்பத்தை பூரணமாக நிர்வகிக்க முடியும். அதேபோல் மனைவி இல்லையென்றால் கணவனால் அந்த குடும்பத்தை பூரணமாக நிர்வகிக்க முடியுமா? உதவிக்கு அம்மாவோ, சகோதரியோ மைத்துணியோ இல்லாமல் தன்குடும்பத்தை கவனிக்க எத்தனை பேரால் முடிகிறது?

ஏன் இந்த நிலைமை? குடும்பத்தின் தலைவன் என்று கூறிக்கொள்ளும் ஆண் ஏன் குடும்பத்தை நிர்வகிக்க முடியாதுள்ளது? உண்மையில் உளவியல் ரீதியாக ஒரு ஆண் குடும்பத்துடன் பிணைந்திருப்பது, புற நடத்தைகளில் தன்னை குடும்பத்துடன் பிணைத்திருப்பது பூரணமானதாக இல்லை.
இன்று வெளிநாடுகளில் வீட்டு பணிப்பெண்களாக பணிபுரியும் பெண்களின் குடும்பங்களுக்கு என்ன நடக்கிறது? அந்தக் குடும்பங்கள் சீரழிகின்றன. ஏன்? ஒரு ஆண் தன் குழந்தைகள் தன் குடும்பம் என்று உளவியல்ரீதியாகவும், புற நடத்தைகள் ரீதியாகவும் தன்னை குடும்பத்துடன் பிணைத்திருப்பானேயானால் இந்த நிலைமை வராது. மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்துவது அல்லது வேறு பெண்களை மனைவியாக்குவது என்ற நிலைகளே பெரும்பாலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.குடும்பத்தில் இருக்கக்கூடிய ஆணின் முற்றுமுழுதான குடும்ப பொறுப்பு எத்தகையது?பொருளாதாரத்தை ஈட்டிக் கொடுப்பதுடன் மட்டும் நின்று விடக்கூடியதா?

அதையும் பெண்கள் திறம்பட செய்யத் தொடங்கி நீண்ட காலங்களாகிவிட்டன.கூலித் தொழில் செய்யும் பெண்கள் முதல் தொழில் வல்லுனர்கள் வரை பெண்களும் அதிக பொருளாதாரம் ஈட்டக்கூடியவர்களாக மாறிவிட்டனர்.ஆனால் ஆண்களின் குடும்பப் பங்காற்றலில் எந்த மாற்றமும் இல்லை.தனக்கு பிறந்த குழந்தையை சரியாக தூக்கத் தெரியாதவர்களாகதான் இனம் காட்டிக் கொள்கின்றனர்.ஒரு தாயின் புது அனுபவத்தைப் போன்று ஒவ்வொரு தந்தையும் தம்மூடாக அனுபவத்தைப் பெறவேண்டும்.குடும்ப பங்காற்றல் என்பது இலகுவான விடயமுமல்ல..பெண்களுக்கான பிரத்தியேகமான விடயமுமல்ல...குடும்ப பங்காற்றலின் பண்புகளை விளங்கிக் கொண்டு ஒவ்வவொரு ஆணும் குடும்ப அலகிற்குள் நுழைந்தால் பலபிரச்சினைகள் தீர வழியுண்டு.