Friday, May 27, 2011

ஊடகவியலாளர் (எம் )முன் இருக்கும் பாரிய சவால்.




“உங்கள் பொழுது போக்கு என்ன?”

“பத்திரிகை வாசித்தல் ரிவி பார்த்தல் வானொலி கேட்டல்”

‘வெறும் பொழுது போக்குக்காகவா நாம் இவ்வவளவு கஸ்ரப்பட்டு - உயிரையும் விலையாக கொடுத்து – ஊடகத்துறையில் வேலை செய்கிறோம்!?’

ஏன்னதான் பொழுதைப்போக்க மக்கள் ஊடகங்களை நாடினாலும் அவர்களிடையே –அவர்களின் சிந்தனைகளில்- எதைப்பற்றி வேண்டுமானாலும் கருத்துருவாக்கம் செய்வது ஊடகவியலாளர்கள்தான்.அதனால் தான் இக்கட்டான கால கட்டங்களில் அரசு தணிக்கையை நடைமுறைப்படுத்துகிறது.மக்கள் வாழ்க்கையில் எடுக்கும் எந்த முடிவிலும் ஊடகங்களின் வாயிலாக வரும் கருத்துக்களின் ஆதிக்கம் இல்லாமல் இல்லை.

இத்தகைய ஒரு பொறுப்புவாய்ந்த தொழில்துறை ஆத்மாவுடன் தொடர்புபட்டது – பொதுமக்கள் மீது அக்கறை கொண்டு பொது விடயங்கள் தொடர்பாக ஆர்வம் கொண்டவர்கள் இத்தொழிலில் மிளிர்வார்கள்.எமது வாழ்விற்காக ஒரு தொழில் செய்கிறோம் என்ற உணர்வற்று அதுவாகவே வாழ்தல் அல்லது அதனுடன் இரண்டறக்கலத்தலே நடக்கிறது.இது இந்த தொழில்துறைக்கு மிகப்பெரிய பலம்.ஆனால் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இது ஒரு பலவீனமாக - வேலைக்கு அடிமை workaholic)--என இத்தொழில் துறைக்கு அப்பால் இருப்போரின் விமர்சனமாக இருக்கிறது. இந்நிலையில் தான் 1997இல் தினக்குரலில் எனது பிரவேசம்.
ம்…இன்று 15 வருடங்கள்!
மறைந்த திரு இராஜகோபால் அவர்களின் வழிகாட்டலில் ஞாயிறு தினக்குரலின் பதிலாசிரியராக இருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள் அதிகம்.நீச்சல் தெரியாதவளை கடலுக்குள் போட்டது போல் 1993இல் நான் வீரகேசரியில் இணைந்த எனது பத்திரிகைத்துறைப் பிரவேசம்.

ஊடகத்தொழில் வரையறுக்கப்பட்ட மணித்தியாலத்தில் செய்து முடிக்கும் வேலையல்ல.ஒவ்வொரு செக்கனும் முக்கியமாவது போல் (செல்லிடைபேசியில் வரும் குறுஞ் செய்திகள்)24 மணித்தியாலமும் இயங்கவேண்டிய தேவையுள்ளது.

தமது வருமானத்தை விட குரலற்றவர்களின் குரலாக ஒலிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இத்துறையில் நுழைந்தவர்கள்தான் இன்று நம்மிடையே இருக்கும் -மற்றும் மறைந்த- மூத்த ஊடகவியலாளர்கள். இவர்கள் அமைத்த பாதைதான் இன்றைய இலங்கைத் தமிழ் ஊடகவியல்.

எனது சொந்த அனுபவத்தில்:- பல தகவல்களை இணைத்து இலகு மொழிநடையில் வளமாக எழுத என்னால் முடியுமென்றால் அது தினக்குரல் ஆசிரியர் வீ தனபாலசிங்கத்தின் ஆசிரியர் தலையங்கத்தினால் வந்த பாதிப்பு.இன்று ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழி பெயர்புகளை செய்யும் அளவிற்கு ஆவலை தூண்டியது திரு பிரணதார்திகரனின் (தினகுரல் செய்தி ஆசிரியர்-கரன்) அருந்ததி ரோயின் இரத்தத்தீவு.தினக்குரலில் தொடராக வந்தது.எந்த ஆண்டில் என்ன நடந்தது முக்கியமானவற்றையாவது நினைவில் வைத்திருகட் வேண்டும் என்று உறுத்திக் கொண்டே இருப்பது திரு ஆர் பாரதியின் நினைவாற்றல்.இத்தகையவர்களின் வழிநடத்தலில் எம்; சக நண்பர்களின் ஆற்றல் ஆளுமைகள் இன்று தினக்குரலை 15ஆவது வருடத்தில் தூக்கி நிறுத்தியுள்ளது என எண்ணுகையில் பெருமிதமாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.!

வருமானத்தை விட, குரலற்றவர்களின் குரலாக ஒலிக்க வேண்டும் என்ற அக விழுமியங்களுக்குள்ளால் ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களும்,இன்றைய புதிய தொழில் நுட்பத்தின் கவர்ச்சியுடன் முறைசார் தொழிலாக இதை மேற்கொண்டு வருமானமீட்டவும் கருத்துக்களை பரப்பவும் வரும் இளம் ஊடகவியலாளர்களும் இன்றைய ஊடகத்துறையை திட்டமிடுபவர்களாக இருக்கின்றனர்.இந்த நிலைமை ஊடகத்துறையின் பலமாக அமையவேண்டுமேயொழிய பலவீனமாக அமையக்கூடாது. தொழில் வாண்மை மிக்க ஊடகவியலாளர்களும் தொழில் திறனும் இணைந்து ஒரு புதிய ஊடக கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டும்.

இன்று தகவலைப் பெற்றுக்கொள்ள நமக்கிருக்கும் நவீன தொழில் நுட்ப வசதிகள்(இணையம்) நவீன ஊடகங்களைத் தோற்றுவித்துள்ளன.எமது செல்லிடைபேசியில் செக்கனுக்கு செக்கன் நிமிடத்துக்கு நிமிடம் செய்திகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறோம்.பொதுவாக இலத்திரனியல் ஊடகங்கள் மிக கவர்சிமிக்கதாக செய்திகளை கணத்துக்குக் கணம் வெளியிட்ட வண்ணம் உள்ளன.இந்த நிலையுடன் போட்டியிட்டு ஒரு பத்திரிகை வெளிவரவேண்டியுள்ளது.எனவே பத்திரிகையில் வேலை செய்யும் ஊடகவியலாளர்களுக்கு பணி மேலதிகமானது.இலத்திரனியல் ஊடகங்களில் வெளிவந்ததற்கு மேலதிகமாக புதிய கோணத்தில் செய்தியை தேடவேண்டியுள்ளது.இதற்காக புதிய தொழில்நுட்ப அறிவும் ஊடகவியல் ஆளுமையும் ஆழமாகவும் சிறப்பாகவும் தேவைப்படுகிறது.

ஆனால் இலங்கையைப் பொறுத்தளவில் அதுவும் தமிழ் அச்சு ஊடகத்துறையைப் பொறுத்தளவில் வரையறுக்கப்பட்ட வருமானம், தொழில்நுட்பவசதிகள், பௌதீக வளங்கள்; மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பது,ஊடகவியலாளர்களுக்கான தொழில் தகைமையை வளர்க்க உதவவில்லை.சமூகத்திற்காக சேவை செய்பவராக அல்லது மற்றவர்களின் செய்திகளைச்சுமக்கும் சுமை கூலிகளாகவே கணிக்கப்படுகின்றனர்.இந்த நிலை மாறி ஒரு தொழில்வாண்மை மிக்க தொழிலாக இது மாறவேண்டும்.

இன்று நவீன ஊடகங்கள் என்று சொல்லப்படும் ருவிற்றர்(twitter)முகப்புத்தகம்(Facebook)புளொக்(bloggers)போன்றவை சமூக ஊடகங்கள்(ளழஉயைட அநனயைள)இவற்றினூடாக செய்திகளை எவரும் வெளியிட முடியும்.சாதாரண மக்களும் ஊடகவியலாளராக செயற்பட முடியும்.இந்த நிலையில் அவர்களுக்கும் ஊடகத் தொழில் துறையில் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்குமான பிரிகோடு எப்படி அமையப்போகிறது?இது இன்று உலகெங்கும் உள்ள பெரிய சவால்.

ஆனாலும் அனேகமான நாடுகளில் ஊடகவியலாளர்களை தொழில் வாண்மை மிக்கவர்களாக(Professionals) ஏற்றுக்கொண்டுள்ளனர்.அதற்காக அவர்களுக்கு ஊடக ஒழுக்க நியமக்கள்(Ethics) கூறப்பட்டுள்ளன. இந்த இந்த நியமங்களைப் பின்பற்றுபவர்கள் ஊடகவியலாளர்கள் என்ற வரையறையை இதனால் ஏற்படுத்த முடியும். சட்டத்தரணி என்பவர் யார்?வைத்தியர் என்பவர் யார்?என தீர்மானிக்கின்றபோது அவர்களுக்கான ஒழுக்க நியமங்களை ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் எடுத்த பின்தான் அவர்களை அந்த அந்த தொழில் துறைக்குரியோராக ஏற்றுக்கொள்கின்றனர்.

இலங்கையைப் பொறுத்தளவில் ஊடகவியலாளர்களுக்கான ஒழுக் நியமம் இருந்தாலும் அதை முறைமைப்படுத்தப்பட்ட ஒன்றாக சகல ஊடகவியலாளர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஊடகவியலாளர்கள் என்ற தொழில் துறையினரை ஒரு குடைக்குள் கொண்டுவருவதோ, தரம் பேணுவதோ சிரமமாக இருக்கிறது.
இந்நிலையில் இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கான சம்பள நிர்ணயம் கூலி நிர்ணய சபையின்கீழ்தான் (wages board)தீர்மானிக்கப்படுகிறது.அலுவலக தொழில் புரிவோர் (white collar jobs)என்ற பிரிவின் கீழ் அல்ல என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் தொழில் தரத்தை பேணி தொழில் வாண்மையை ஊடகவியலாளர்கள் பெறவேண்டுமென்றால் முறைமைப்படுத்தப்பட்ட பாடசாலைக்கல்வியினூடாக ஊடகவியல் முன்வைக்ப்படவேண்டும்.அதற்கான அடித்தளமாக தரம் 10,தரம் 11 ற்கு தொடர்பாடல் மற்றும் ஊடகவியற் கற்கை அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அத்துடன் பல்கலைக்கழகங்களிலும் கலைப்பிரிவுக்கு ஒரு பாடநெறியாக ஊடகக்கற்கை நெறியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.ஆயினும் ஊடகத் தொழிலைச் செய்வதற்கு இது போதுமானதாக இல்லை என்பதும் பயிற்சி அவசியம் என்பதும் வலியுறுத்தப்படுகிறது.

ஆந்த வகையில் ஊடகக் கல்வியையும் பயிற்சியையும் அளித்துவரும் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பினூடாக ஊடகத்துறைக்கு புதியவர்களை உள்ளீர்க்கிறோம்.அவர்களுக்கான நவீன தொழில் நுட்பத் தொடர்பாடல்களையும் பல்திறத்திறனையும் விருத்தி செய்யயும் வாய்ப்புகளையும் வழங்குகிறோம்.அதாவது ஒரு ஊடகவியலாளராக வருவதற்கான அடிப்படை அறிவையும் திறனையும் வழங்குகிறோம்.ஊடக நிறுவனங்களில்தான் இவர்கள் தம்மை பட்டை தீட்டிக் கொள்ளவேண்டும்.

இன்றைய பத்திரிகை நாளைய குப்பை.ஆனால் இன்றைய செய்தி நாளைய வரலாறு.வரலாற்றை எழுதும் பத்திரிகைகளின் வரலாறு என்றும் பதியப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

(தினக்குரலின் 15ஆவது ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்ட மலருக்காக எழுதப்பட்டது.)