Friday, May 30, 2014

நாம் பேசுவது இப்படி இருக்கிறது...


ராணி :இஞ்ச...அவள் சுதாவைப் பாத்தியே புருசன் இல்லாம இரண்டு பிள்ளைகளையும் எப்பிடி வளர்க்கிறாள் எண்டு?

ரூபா: ஓம்..ஓம்..எங்கமாய் எப்பிடி காசு சம்பாதிக்கிறாளோ தெரியாது..

ஏய்..இப்பிடி கதைக்காத.. அவள் தான் படிச்ச படிப்புக்கு ஏத்த மாதிரி கடையில 'சேல்ஸ் கேளா' வேல செய்யுறாள்
ரூபா: ஓம்..ஓம்.. என்னத்த விக்கிறாவெண்டு ஆருக்குத் தெரியும்?
பொத்து வாயை இப்பிடிக் கதைக்க உனக்கு வாய் கூசுறது இல்லையா?
ஏன் இப்ப இப்பிடி கத்துறாய்.. ஊரில எல்லாரும்தான் அவளப்பத்தி கதைகதையா சொல்லீனம்..உலவாயை மூடினாலும் ஊர் வாயை மூடேலுமே?
சும்மா.. போ..தரங்கெட்ட ஊர்.. வாழ்ந்தலும் பேசும். தாழ்ந்தாலும் பேசும். அவள் புருசனைப் பறிகொடுத்துவிட்டு இரண்டு பிள்ளையளோடை றோட்டில நிக்கேக்க எந்த ஊர் அவளுக்கு உதவினது. இப்ப அவள் வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதித்து பிள்ளையளை வளக்கத் தொடங்க ஊராம் ஊர்..
சரி அதுக்கு அவள் ஏன் இப்பிடி பொட்டு வைச்சு கலர் கலரா பொட்டு வச்சுக் கொண்டு போக வேணும்
இஞ்சே.. உந்தக் கதையை விடு.. அவளுக்கு வயது 28. அவள் பார்க்கிறது 'சேல்ஸ் கேள்' வேலை. கடையளுக்கு ஆக்கள் வந்து சாமான்கள் வேண்ட வேணும். அவள் அழகா மலர்ந்த முகத்துடன் இருக்க வேணும். பொட்டு முகத்த அழகாக்கத்தான். அது ஒண்டும் புருசன் கொடுத்தது இல்ல..
ம்..ம்...நீயும் உன்ர கதையும் விதவை விதவைதான். அது 28டோ 58டோ.. விதவையெண்டா அதுக்கேத்த மாதிரி நடக்க வேணும்
இங்கே..உன்னைப்போல ஆக்களோட கதைச்சு வேலையில்ல..நீபோ.. உந்த மாதிரி கதையளோட இங்க என்னட்டை வராத. நீங்க அவளை வாழவும் விடமாட்டீங்கள். சாகவும் விடமாட்டீங்கள்.
இஞ்சே..அவள் சுதாவைப் பாத்தியே.. புருசன் இல்லாம இரண்டு பிள்ளையளையும் எப்பிடி வளர்க்கிறாள் எண்டு..
ஓம்..ஓம்.. எங்கபோய் காசு சம்பாதிக்கிறாளோ தெரியாது..
ஓமடி..கடையில சேல்ஸ் கேளாம்..
ஓ.. என்னத்த சேல்ஸ் பண்றாளோ தெரியாது..
ஹி..ஹி..ஓமடி பின்னேரம் நேரஞ் செல்லதான் வீட்டுக்கு வந்தாள்
ஓ கடையில வேலை எண்டு சொல்லுறாள். அதுக்க மினுக்கி கொண்டு வித விதமா உடுப்புகளும் பொட்டும் ஆளப் பாத்தியே..
பின்ன.. கடைக்கு எத்தனைபேர் வருவினம். ஹ..ஹ..
புருசன் இல்லையெண்ட கவலை கொஞ்சம் கூட முகத்தில தெரிய இல்ல.. புருசனை இழந்தவள் மாதிரியா தெரியுது..
ஓமடி.. இப்பிடியான பொம்பிளையளாலை எங்களைப் போல குடும்ப பெண்களுக்கு கெட்ட பெயர்
ஓமடி 'பொம்பிளயள் இப்பிடித்தான்..' எண்டுதானே வெளியில கதைக்கினம். இவளுக்கென்ன இரண்டு பிள்ளையள் இருக்கு அதுகள வளத்து விட்டா காணும் தானே? அதுக்கு இப்பிடி மினுக்கிக் கொண்டு போக வேணுமே..
ஆர் கண்டது வயது அப்பிடி
இது நல்ல கதை..18 வயசெண்டாலும், விதவை விதவை தானே..பிள்ளைகளும் இருக்கு..
ம்..இது கலி காலம்

‘ஔவை’.....................வயதானவர் என்ற கட்டமைப்பு ஏன் உருவாயிற்று?

‘ஔவை’ என்ற பெயரின் பின்னால் உள்ள பெண்பற்றிய படிமம்.
(11/05/2014 அன்று கொழும்பு, இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்ற ஔவை விழா – 2014 இல் வாசிக்கப்பட்ட கட்டுரை.)
 இன்று ‘ஔவை’ என தேடுதல் பொறியில் பதிவிட்டால்,  ‘ஒளவை என்பது மூதாட்டி அல்லது தவப்பெண் என்ற கருத்தை உடையது என்று பழந்தமிழ் அகராதி கூறும்’.என்று பதில் வரும்.அதே நேரம் ஔ" எனும் எழுத்தில துவங்கும் ஒளவை என்ற பெயர் ‘அவ்வா’ என்ற சொல்லின் திரிபாக கருதப்படுகிறது.என்றும் அது குறிப்பிடும். அத்துடன் பிந்தையகாலத்தில் ஒளவை எனும் சொல், வயது அல்லது அறிவாற்றல் ஆகியவற்றில் முதிர்ச்சி பெற்றவர்க்கு வழங்கப்படும் குறியீடாகவும் அமைந்துள்ளது.

எனவே பொதுவாக ஔவையார் எப்போதும் எமது மனக்கண்ணில் வயதான மூதாட்டியாகவே படிமமாகிறரர்.
ஔவை யரர்?
வரலாற்றாய்வாளர்களின்  கருத்துப்படி ஔவை என்ற பெயர்கொண்டு பல்வேறு காலகட்டங்களிலும் பலர் வாழ்ந்திருக்கின்றனர்.அந்த ஔவைகளை வரிசைப்படுத்தும்போது,
12ம் நூற்றாண்டுக்கு முன் ஒள‌வை எனும் பெயருடனும் ஒருமித்த குணாதிசயங்களோடும், புலமையோடும் வெவ்வேறு காலக்கட்டங்களில் மூன்று பெண்புலவர்கள் தமிழகத்தில் வாழ்ந்தனர், கவி பாடிச் சென்றுள்ளனர் என்றும் தெரிவிக்கின்றனர். அதில் முதலாம் ஒள‌வை கடைச்சங்க காலத்தில் வள்ளுவர், நக்கீரர் போன்றோரின் காலக்கட்டத்தில் வாழந்ததாகவும், இரண்டாம் ஒள‌வை பக்தி இலக்கியப் புலவர்களாகிய சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோர் காலத்திலும் மூன்றாமவர் கம்பர், புகழேந்தி, செயங்கொண்டார், சேக்கிழார், ஒட்டக்கூத்தர் போன்றோர் வாழ்ந்த காலத்திலும் வாழ்ந்தார் என்றும் சான்று பகர்கின்றனர்.
14ஆம் நூற்றாண்டிலிருந்து 18ஆம் நூற்றாண்டுக்கு மத்தியிலான காலக்கட்டத்தில் மேலும் இரண்டு ஔவைகள் வாழ்ந்தனர் என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். எனினும் இந்த இரு ஒளவைகளின் வாழ்க்கைக் குறிப்புக்கள் முழுமையாகக் பெறப்படவில்லை.என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இங்கே காலக்கிரமத்தை விடுத்து இந்த ஔவை என்ற பெயரின் பின்னாலுள்ள பெண் பற்றிய படிமத்தை அறிய விழைகிறேன்.
ஔவையின் வாழ்க்கை வரலாற்றைக் கூற விழைந்தவர்கள், ஆதி ,பகவன் ஆகிய இருவருக்குப் பிறந்து,பிறந்தவுடனேயே  பெற்றோராலால் கைவிடப்பட்டு, பாணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டதாகஅவ்வரலாறு கூறும்..எனவே இவர் விறலியாகவே வளர்க்கப்பட்டுள்ளார்.
விறலி என்போர் யரர்?
‘,உள்ளக் குறிப்பினைத் தம் உடம்பில் தோன்றும் மெய்ப்பாடுகளால் புலப்படுத்தும்முறை நாடகத்தின் பாற்பட்டதாகும். இம்முறையினை ‘விறல்’ என்ற சொல்லால் குறிப்பிடுவர். விறல்பட ஆடுந்திறம் மகளிர்க்கே உரியதாகும் என்பர். ‘விறல்பட ஆட வல்லவள் விறலி’ என வழங்கப் பெற்றாள் என்று பொதுவாக விறலியை வரையறைப்படுத்துவர்.  சங்க இலக்கியங்களில் விறலியர் என்று பொதுப்படையில் பதிவுகள் இருந்த போதிலும் தனிப்பட்ட பெண் ஆளுமைகள் விறலியராக நேரடி பதிவினைச் செய்துள்ளனரா என்று ஆராய்வோமேயானால் ஔவையார், அப்படிப் பதிவு செய்துள்ளார்.அத்துடன் ஆதிமந்தி பாடல்களிலும் விறலியாக அவர் தம்மை பதிவு செய்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்துரைக்கின்றனர்.தென்னிந்திய வரலாறு எழுதிய நீலகண்ட சாஸ்திரி அவர்கள் அதியமான; நெடுமான் அஞ்சி பற்றிக் குறிப்பிடும் போது,’ஏழு வள்ளல்களுள் ஒருவனும் ,ஔவை என்ற பெரும் புகழ் படைத்த பாடினியை ஆதரிதவனுமாவான்.’என்கிறார். பாடினியர் என்போர் யரர்?இனிய குரல்வளம் கொண்டவர்கள். மென்மையான அழகுள்ளவர்கள்.  மயில் போன்ற சாயல் கொண்டவர்கள். அறிவுக்கூர்மை மிக்கவர்கள்.என்பதும் சங்கப்பாடல்களுடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.எனவே ஔவை இளமையும், அழகும், மதிநுட்பமும் கொண்டவராக இருந்திருக்கிறார்.ஆடல் பாடலில் வல்லவராக இருந்திருக்கிறரர்.

ஒருமுறை, அதியமானின் சிறப்பை பாடவந்த ஔவை,
        ‘இழையணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்
         மடவரல் உண்கண் வாள் நுதல் விறலி” என்று விழித்து,
பொருநரும் உளரோ, நும் அகன்றலை நாட்டு? என,
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!
(புறம் 89)

என்று அதியமானின் பகைவருள் ஓருவன் தன்னைக் கேட்டதாகவும் தான் அதற்கு கொடுத்த பதிலையும் பாடிச் செல்கிறார். இங்கு முதல் இரு வரிகள் ஔவையின் உடலை வர்ணித்து விளிப்பது கவனிக்கத்தக்கது.எனவே இளமையான ஔவையாக இங்கே பதிவாகிறார்.பெரும் புலமையுடன் பேரழகியாகவும் ஔவை பதிவாகியுள்ளார்.இதனால்தான் வயோதிபத்தை ஔவை முருகனிடம் கேட்டு வாங்கினார் என்ற வரலாற்று கதையும் ஔவையின் வாழ்க்கை வராற்றில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஊர்ஊராக திரிந்து வெற்றி பெற்ற மன்னர்களையும் கூழ் ஊத்தும் மக்களையும் பாடுவதற்கு இளம் உடல் ஒரு தடையாக இருந்திருக்கலாம்.யாருக்கு? வரலாற்றை எழுதுபவர்களுக்கு.
காரைக்கால் அம்மையாரைக்கூட இந்த இடத்தில் நினைத்து பார்க்கலாம்.அவர் பேய் வடிவை வேண்டிய பின்தான் சிவனைப்பாடி அடைந்ததாக வரலாறு கட்டமைக்கப்பட்டுள்ளது.எனவே புலமையுடனான பெண்கள் தனித்தவழி போதல் என்றைக்கும் சாத்தியமே இல்லை என்பது இன்றுவரை நிறுவப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
.இன்னொரு இடத்தில்
உணர்ச்சிப் பிளம்பாக ஔவை நிற்கிறார்.
முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்ப என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே.
இது பாலை நிலத்தில் தலைவனைப்பிரிந்த தோழி பாடுவது போல் அமைந்தது. காதல் மேலீட்டால் காமம் பற்றி எரிய பாடுவது. இதைவிட, இன்னும் அதிக விரகதாபங்களுடன்  இக்காலத்தில் ஆண்புலவர்களால் எழுதப்பட்டிருந்தாலும் கூட,ஒரு பெண்புலவர் இப்படி எழுதியிருப்பது கவனிக்கத்தக்கது.,

விறலி ,பாடினி என்ற குழும அடையாளம் இத்தகைய சுதந்திரத்தை அவருக்கு கொடுத்திருக்கலாம்.மறுபுறம் இத்தகைய பாடல்களும் ,தேசாந்தரமாய் திரிந்த அவரது நடவடிக்ககைகளும் அவரை விறலி பாடினியாகவும் அடையாளப்படுத்தப்ப;டிருக்கலாம்.எப்படி இருப்பினும்,ஔவையாரால் இந்த உணர்வு வெளிப்படுத்தப்பட்டிருப்பது அன்றைய சமூகத்தின் பெண்ணின் குரலாகத்தான் நான் பார்க்கிறேன்.
இன்றைய ‘பெண்மொழி’ எழுப்பியிருக்கும் அதிர்வுகள் இலக்கியத்தளத்தில் இன்னும் குறைந்தபாடில்லை. பெண் குரல், பெண் உடல், உடலரசியல் போன்ற தளங்களில் ஏக்கம், நிராசை,காமம், மரணம் போன்றனவற்றை பெண்ணிடமிருந்து விலக்கப்பட்ட சொற்களினூடாக  இன்று துணிந்து  முன்வைத்து வருகின்றனர் பெண்கவிஞர்கள். எனவே ஔவை என்ற இந்த பெண் படிமத்தை இளமையும் துணிவும் கொண்ட பெண்ணாக எமக்கு காட்சிப்படுத்தமுடியும்.

அண்மையில் ‘சங்க காலப் பெண்கவிஞர்கள்: சமூகக் கட்டமைப்பு உருவாக்கமும் அதற்கான எதிர்வினைகளும்’என்ற தலைப்பில்  - செ.ரவீந்திரன்:-அவர்கள் எழுதிய கட்டுரையில் ஔவையார் பற்றி இப்படிக் கூறுகிறரர்.

‘சங்கப் பெண்கவிஞர்களின் பாடல்களில் காதல், காமம் என்னும் இருசொற்களின் வேறுபாட்டினை ஓட்டிக் காமம் என்னும் சொல்லையே கவிதைமொழியாக்கியுள்ளனர்….ஔவையாரின் ‘மெய்ம்மலி காமம்’ என்னும் நற்றிணைப் பாடலின் (187) தொடர் இங்கு நினைவு கொள்ளவேண்டும். இது ஓர் அரசியல் என்றாலும் தமிழ் சமஸ்கிருத மொழிகளில் வழக்கில் உள்ள ‘காமம்’ என்னும் சொல்லின் மூலமொழி என்ன என்பதே நம் கேள்வி. காதல் என்னும் சொல்லை விட காமம் என்னும் சொல் சங்கப் பெண்கவிஞர்களின் பாசாங்கு அற்ற மொழி வழி அறியலாகும் பாலியல் உலகமாகும்.’என்று அவர் கூறிச் செல்கிறார்.
தலைவனை நினைக்கும் தேறும் வானளவாக வளரும் காமம் பற்றியும்,மாலையாக ஆக தலைவன் வராதபோது உடலிலில் மிகுதியாகும் காமத்துடனேயே கழிக்கவேண்டியுள்ள நிலை பற்றியும் எடுத்துக்கூறும் ஔவையின் பாடல்கள் கவனிக்கத்தக்கன.

சங்ககாலம் காதலும் வீரமும் போற்றப்பட்ட இயற்கையுடன் இணைந்த வாழ்வாக .இருந்ததும் ஔவைக்கு இதை சாத்தியமாக்கியிருக்கலாம். ஆனாலும் எமது வரலாறு இவற்றையெல்லாம் கதைப்பதற்கு வயதான பெண்ணுக்குதான் அனுமதி அளித்துள்ளது போலும்.இளமை பொங்கும் ஆண்டாளின் பாடல் வரிகளில் இவற்றை விட அதிகமாகவே காதல் காமம் பாடப்பட்டுள்ளது.ஆனால் அது இறைவன்மேல் கொண்ட காதலாகத்தான் வரலாற்றில் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அ.மங்கை அவர்கள் எழுதிய ஔவை நாடகம் பற்றி அறிந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.அந்த நாடகம் பற்றிய  குறிப்பையும் முன்வைக்கலாம் என எண்ணுகிறேன்.
மங்கை இயக்கிய ஔவை எனும் நாடகம் கவிஞர் இன்குலாப் அவர்களால் எழுதப்பட்டது. இன்குலாம் ஔவை குறித்து ஆய்வு செய்தே அந்த நாடக நூலை எழுதியிருந்தார். அவரது ஆய்வின் முடிவின்படி குறைந்தபட்சம் மூன்று ஔவைகள் வாழ்ந்துள்ளனர் என்கிறார். முதல் ஔவை அதியமானிடம் நட்பு கொண்ட சங்கத்து ஔவை இவர் இளமைத் துள்ளலுடன் இருக்கிறார். தன் நண்பன் அதியமானுடன் கள் குடித்து தன் அன்பை கொண்டாடுகிறார். ஆணாதிக்கப்பிடியிலிருந்து சுதந்திரமாகச் சுற்றித்திரிகிறார்.என்பவை அந்த நாடகத்தின் ஔவை என்ற படிமம் எமக்கு உணர்த்தியவை.அதியமான் இறந்தபின் ஔவை நெஞ்சுருகிப்பாடியது.இது.
‘சிறிய கள் பெறின் எமக்கு ஈயும் மன்னே!
பெரிய கள் பெறின்
யாம் பாடத் தாம் மகிழ்ந்து உண்ணும் மன்னே……’
என்று வரும் வரிகளில்,அதியமானுடன் மகிழ்ந்துண்ட காலங்கள் மீட்டப்பட்டுள்ளன.
 காதலை ,காமத்தை, நட்பை பாடும் ஔவை என்ற பெண்படிமம் நுண்ணறிவு மிக்கது.பெண்ணாக காதலையும் காமத்தையும் நட்பையும் உணர்வதற்கும் வெளிப்படுத்துவதற்கும் அவளுக்கு முடிந்திருக்கிறது. உணர்ந்ததை உணர்தபடியாக முன்வைத்த ஔவையின் மெல்லுணர்வுக்கவிதைகள் இரத்தமும் சதையும் அதில் மானிடப் பெண் உணர்வும் கொண்ட ஒரு பெண்ணாக அவரை எம்முன் நிறுத்தியிருக்கிறது.
அதே நேரம் ,அகத்திணை பாடியதைவிட ஔவை புறத்திணை பாடியதே அதிகம்.அதிக பாடல்கள் புறத்திணையில் உள்ளன.(மொத்தம் 56இல் 33 புறத்திணைப் படல்கள் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது) புறத்தில் வீரத்தை போரைப் பாடும் ,போற்றும் ,வீரத்தை உருவேற்றும் திறனும் வாய்க்கப்பெற்றவராக இருந்திருக்கிறார்

.அதிகமானின் போர்முனைச் சாதனைகள் பற்றிப் பாடிய ஔவை அவனது நம்பிக்கைக்கு பாத்திரமாகிறார். இதன்போது ,தொண்டைமானிடம் தூது அனுப்பும் அளவுக்கு நம்பிக்கைக்கும் நட்புக்கும் மதிநுட்பத்திற்கும் உரியவராகிறார். இங்கே ஔவை என்ற பெண் படிமம் அளுமையின் அடையாளமாகவும் திகழ்கிறது.உள வலிமையும் உடல் வலிமையும் வாய்க்கப்பெற்ற நங்கையாக எமக்குள் படிமமாகிறார்.

தொண்டைமானிடம் தூது சென்ற ஔவை, மதிநுட்பத்துடன் வஞ்சப்புகழ்ச்சியில் பாடல்பாடி போரை நிறுத்தியது அவரது ஆளுமையின் பாற்பட்டது.இந்த ஆளுமை வயதான பாட்டியாக இருக்கவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.இன்றைய வெளிவிவகார அமைச்சு பதவியிலுள்ளோர் கடமையை ஒத்தது இது.

மரணத்தை வெல்லும் நெல்லிக்கனியை அதியமான் ஔவைக்கு கொடுத்தது நட்பின் உச்சம் என்று கொள்ளப்படுகிறது.ஔவை என்ற தனிப்பெண்ணுக்கு வழக்ங்கியதல்ல அது,அந்த புலமையும் மதிநுட்பமும் தன்நாட்டுக்கு எப்போதும் தேவை எனக் கருதி வழங்கிய வெகுமதி.ஔவை அதியமானின; மகனுக்கும் ஒரு பாடல் பாடியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.(பொருட்டெழினி)எனவே அரசியல் ஆளுமையுள்ள ஒரு ‘இரும்புப்’ பெண்ணாக ஔவை இங்கே நிற்கிறார்.

. நவீன இலக்கியத்தில் ;பெண்கள் தடம் பதித்தபோது ‘பெண்கள் எழுதுவது வெறும் கண்ணீர் இழுப்பி கதைகள்தான் ‘ என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. சகலருக்கும் நினைவிருக்கும்.இன்றும் உடகவியலாளர்களிடையே மென்மையான செய்திகளை (soft News)கையாள்பவர்கள்தான் அதிகமாக உள்ளனர்.வன்செய்திகளை (Hard News))கையாள்வோர் குறைவு என்கிறது ஆய்வு.இதில் என்ன முக்கியமான விடயமென்றால், வன்செய்தி என்று சொல்லப்படுகின்ற செய்திகள்தான் அதிகளவான மக்களிடம் தாக்கம் விளைவிக்கக் கூடியது. அதிகளவான மக்கள் சம்பந்தப்பட்டது. (அரசியல்,பொருளாதாரம்..) மென் செய்திகள் சில குழுவினர்க்கானது. எனவே இந்த ஔவை என்ற பெண் படிமம் போரையும் வீரத்தையும் பாடி அக்கால சமூகத்தின் பிரதான நீரோட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது வீர மகளிருக்கு ஒப்பானதுதான்.விறலி ,பாண்மகளிர் என்ற படிமத்தை கடந்து அறிவுக் கூர்மையுள்ள வீர மங்கையாகிறார்.உடலளவிலும் மனதளவிலும் அவரை வீரமங்கையாக காண்போம்.கிழவியாக அல்ல.

எனவே சங்கத்து ஔவை ஒரு வீரமும் அழகும் நெஞ்சுறுதியும் கொண்ட மங்கையாக இருந்துள்ளார்.

இன்னொரு இடத்தில் சகபாடிகள் இடத்து கோபம் கொண்ட ஒரு ஔவையைக் காண்கிறோம்.
 எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டிற் பெரியம்மை வாகனமே முட்டமேற்
கூரையில்லா விடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது.

கம்பரைப்பார்த்து பாடியதாக கூறப்படுகிறது.’ "ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ" என கம்பரின் நையாண்டி விடுகதைக்கு விடையாக ஔவையார் கூறியது.இதில் ஔவை என்ற பெண் படிமம் ;கோபக்கனல் பொங்க கூறியதாக கருதப்படுகிறது. உண்மையில் ஞானச் செருக்குடனும் கர்வத்துடனும் தழிழ் அறிவாலே தழிழை வென்ற கனல் பொங்கும் கண்களுடன் அவளை தரிசிக்கலாம்.

அடுத்து,அறம் செய விரும்பு, ஆறுவது சினம் எனத்துவங்கி ஓரம் சொல்லேல் என முடித்த 109 ஆத்தி சூடி வரிகளாகட்டும் சரி அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் எனத்துவங்கி முடித்த  ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம் 91 வரிகள் படைத்த கொன்றை வேந்தனாகட்டும், தனிமனித ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, வீரம், அறிவு, திறமை ஆகியவை மாந்தரிடையே மலர உன்னதமான கவிப்பணி ஆற்றியுள்ளார் ஓளவை பிராட்டியார் என்று பெருமை கொள்வர்.
உண்மையில் போதனைகள் அறிவுரைகள் வாழ்க்கையின் தத்ததுவங்கள் என ஔவையின் பெயரில் வந்தவை மதம் பற்றிநின்ற ஔவையால் உருவாக்கப்பட்டவை.மதம் வாழ்வை எப்போது நன்னெறிப்படுத்த விழைந்ததோ அன்றே பெண் இரண்டாம்பட்சம்தான்.அனைத்து மதங்களினதும் அடிப்படையே ஆணை மையப்படுத்தி பெண்ணை துணைப்பொருளாக்கியமைதான்.பெண்ணின் பெயரால் பெண்ணைப்பற்றிக்கூறும் கருத்துக்கள் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக மாறும் என்றதன் அடிப்படையில் உருகவாக்கப்பட்;டவையாககூட இவை இருக்கலாம்.ஆத்திசூடி,கொன்றை வேந்தன் என்பவை பொதுவாக மானிடர்க்கு வைக்கப்பட்ட நெறிகளாக இருந்தாலும் ஆணை மையப்படுதத்தியே உருவாக்கப்பட்டவை.பெண்ணுக்கும் ஆணுக்கும் பொதுவாக வைக்கப்பட்டிருந்தால்

மெல்லினல்லாள் தோள்சேர்-
தையல்சொல் கேளேல்
மைவிழியார் மனையகல்

என்பவை வந்திருக்க வாய்ப்பில்லை.இந்த நீதிபோதனை கூறும் ஔவை என்ற படிமம் வயோதிப பெண்ணாய் அல்லது ஆணாய்கூட இருந்திருக்க வாய்ப்புள்ளது. பெண்களின் பெயரில் இலக்கியம் படைக்கும் ஆண்கள் இன்றும் உளர்.
இங்கே நல்லது எது கெட்டது எது என கூறும் ஔவை,விலைமாது குலமாது என .இரு அந்தங்களில் பெண்ணை வைத்து நல்ல பெண் கெட்டபெண் என தீர்மானிப்பதும்,’ஆண்களாலேயே’ உருவாக்கப்பட்ட .இந்த இரு அந்தங்களையும் அவர்களுக்கே காட்டி இது நல்லது இது கூடாது என உரைப்பது நகைப்புக்கிடமானது.எந்த ஒரு இடத்திலாவது இந்த ‘மைவிழியாருக்கு’ (மைவிழியார் மனையகல்)
நல்வழி காட்டியிருக்க கூடாதா இந்த ஔவை?
‘உண்டி சுருங்குதல் பெண்டிர்கழகு’ உண்மையிலேயே இப்படி ஒருவர் சொல்லியிருக்கும் சாத்தியம் இருக்குமா,?மைவிழி கூடாது,நூலிடை வேண்டுமா,?எத்தகைய முரண்கள்?இவற்றுக்கெல்லாம் எப்படித்தான் வேறு வேறு அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டாலும்.இதில் ஏதும் பாடபேதம் இருந்திருக்குமோ என்ற ஜயமும் எழுகிறது.அல்லது ஆண் போட்ட பாதையில் நடந்தால் தன்பெயரும் பதிவாகும் என்ற நம்பிக்கையில் ‘ஔவை’ பெயரில் யாரும் முயன்றிருக்கலாம்.எனவே இந்த  ஔவை பற்றிய படிமத்தை நாம் முன்னதுடன்(சங்கத்து ஔவை) இணைக்க முடியாது.ஔவை என்ற பெயரில் எப்போதும் ஒரு படிமத்தை கட்டமைக்க முடியாது.

சங்கம் வைத்து புலவர்களை ஊக்குவித்து தம்மைப் பாடச்சொன்ன அரச அதிகாரமும், பின்னாளில் இலக்கியங்களைத் தொகுப்பித்த தேர்வு முறைமைகளும் எம்மிடம் கொண்டு சேர்திருக்கும் பெண்கவிஞர்களின் தொகையில் தாக்கம் செலுத்துவன.
473 சங்கப் புலவர்களில் 44 பேர் பெண்பாற் புலவர்கள் என்பது ஔவை துரைசாமிப்பிள்ளை அவர்களின் முடிபு. ஆனால் ,ஔவை நடராசன் 41 என்கிறார் இதை விட குறைவாகவும் பலர் கணக்கு காட்டியள்ளனர். எனவே இந்த தொகுப்பித்த தொகுத்த முறைமைகளும் பெண்ணை படிமப்படுத்துவதில் தாக்கம்  செலுத்தும் காரணியாகத்தான் பார்க்கவேண்டியுள்ளது..பெரும்பாலும் ஆண் கவிஞர்களை ஒத்த முறையில் பாடல்களைப்பாடியவர்கள் மட்டும் உள்வாங்க்ப்பட்டிருக்கலாம்.அந்த காலகட்டத்தில் எது தேவை என அரசு கருதுகிறதோ அதைப் பாடியவர்கள் உள்ளவாங்கப்பட்டிருக்கலாம்.


நல்வழிய காட்டிய இந்த ஔவை ‘பெண்’ படிமத்தை ஒரு பொருட்டாகவே கணிக்கவில்லை என்பதும் ஆண்வழிப்பட்ட சிந்தனையை புடம்போட்டு தந்துள்ளார் என்பதும் மனவருத்தத்திற்குரிய செய்தி. உண்மையில் எமது வரலாற்று கட்டமைப்புகளில் மையங்கள் மட்டுமே கோலோச்சும் என்பது எமக்கு புதிதல்ல.ஆனால் இன்று சமூக ஊடகங்களின் விரிவு பராக்கிரமம் மையங்களுக்கு மேலாக விழிம்புகளின் குரலையும் உயர்த்தும் காலத்தை உருவாக்கி விட்டுள்ளது. யாரையும் எதையும் யாரும் இருட்டடிப்பு செய்துவிட முடியாது. சங்கத்தை விஞ்சிய ஔவையர்கள் இன்னும் இன்னும் உதிக்கட்டும்.இன்று கனடாவிலும் ஒரு ஔவை இருக்கிறார். பெண்களின் குரலாக அடக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கிறார்.எனவே ஔவை என்ற பெயரில் ஒற்றைப்படிமத்தை காண்பதை மாற்றுவோம்.