Wednesday, October 14, 2009

போரில் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த பெண் குழந்தைகளில் சில...

வவுனியா சிறுவர் இல்லத்தில்.....

'போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடிக் கவனத்துக்குரியவர்கள்"

கவிஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர், பெண்ணிய செயற்பாட்டாளர் எனப் பன்முகப்பட்ட ஆளுமை கொண்டவர் எஸ். தேவகெளரி. தினக்குரல் வாரவெளியீட்டின் துணை ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றிய அவர், தற்போது இதழியல் கல்லூரியின் விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார். ஆண்டாண்டுகாலமாக பெண் இரண்டாம் தரப் பிரஜையாக நடத்தப்படுவதை எதிர்த்து தன் எழுத்தின் ஊடாகக் குரல் கொடுத்து வரும் தேவாகெளரி தினகரன் வாரமஞ்சரி வாசகர்களுக்காக தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்

பெண்கள் மீதான அடக்குமுறை காலத்துக்குக் காலம் வெவ்வேறு வடிவம் பெறுகின்றது. எம் நாட்டைப் பொறுத்தவரை உடனடிக் கவனம் செலுத்தப்படவேண்டிய பிரச்சினையாக எதைக் கருதுகிaர்கள்.

நாங்கள் இப்போது கூடுதலாகக் கேள்விப் படுவதும், கவலைப்படுவதும் போரால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றித் தான். போரால் பாதிக்கப்பட்ட பெண்களை தனிமைப்படுத்தப்பட்ட பெண்கள், திருமணமாகாத பெண்கள், துணையை இழந்த பெண்கள் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். இவர்களில் ஊனமுற்ற பெண்கள் அதிகம். இவர்களைப் பற்றி நாம் அறிந்துகொண்டது மிகக் குறைந்தளவே.

பெண்களுக்கு இதுதான் பிரச்சினை என்று பொத்தம் பொதுவாகக் கூறிவிட முடியாது. பிரதேச ரீதியாக ஒவ்வொரு பெண்ணினது பிரச்சினையும் வேறுபாடானது. ஆனாலும், போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பில், ஏனைய பகுதியைச் சேர்ந்த பெண்களும் கவனம் செலுத்தவேண்டிய அவசரத் தேவையிருக்கின்றது.

மலையகப் பெண்களின் பிரச்சினை வித்தியாசமானது. மலையகப் பெண்கள் பொதுவாகவே சுயமாக ஆளுமைமிக்கவர்களாக இல்லை. மலையகப் பெண் இன்றும் ஆணைச் (தந்தை, கணவன், சகோதரன்) சார்ந்தவளாகவேயி ருக்கிறாள்.

நகர்ப்புறங்களில் 90 வீதமான பெண்கள், வேலை பார்க்கின்றனர். அலுவலக தலைமைப் பதவியில் இருந்து கூலித்தொழில் வரை இது வேறுபட்டாலும். அனைவரும் பாதுகாப்பு ரீதியான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.

பொருளாதார ரீதியில் எல்லாரும் தங்களுடைய தொழிலை 2nd supportive ஆகத்தான் நினைக்கின்றனர். தான் என்ன வேலை செய்தாலும், அதில் முழு ஈடுபாட்டுடன், தன் முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணும் பெண்கள் மிக மிகக் குறைவு. செய்யும் தொழிலில் தமது முழுத் திறமையையும் வெளிப்படுத்த முடியாமல் போவதற்கு அவர்களது இரட்டைச் சுமையும் ஒருகாரணமாக இருக்கலாம்.

இவ்வாறு பிரதேச ரீதியில் பார்க்கையில் பெண்ணுக்கான பிரச்சினை வேறுப்படுகின்றது. ஆனால் அந்தப் பெண்கள் எல்லோரும் சேர்ந்து யுத்ததத்தால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய காலகட்ட மீது என்று நினைக்கிறோம்.

ஏனெனில் போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடிக் கவனிப்புக்குள்ளாக்கப்பட வேண்டியவர்கள். இல்லாவிட்டால் அது எதிர்காலச் சந்ததியையே பாதிக்கும்.

இன்றும் வெளிநாட்டில் இருக்கும் பெண்கள் சிலரிடம் இப்பெண்களுக்கு உதவவேண்டும் என்ற ஆர்வமிருக்கின்றது. ஆனால் எவ்வாறு உதவுவது என்பது, அவர்களுக்குத் தெரியவில்லை. போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதற்கான வழியேதும் இருப்பதாகத் தெரியவில்லை.

எமது நாட்டில் உள்ள பெண்கள் அமைப்புகள் என்ன செய்துகொண்டிருக்கின்றன?

சில அமைப்புகள், கல்வி தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கின்றன. மலையகப் பெண்களின் ஆளுமை விருத்திக்கான கூடுதல் முயற்சிகள் இடம்பெறுகின்றன.

ஆனால் போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான வேலைத் திட்டங்கள் எவையுமே இவர்களது நிகழ்ச்சித் திட்டங்களில் இருப்பதாகத் தெரியவில்லை.

சில பெண்கள் அமைப்புகள் பெண்களின் ஆளுமை விருத்தி தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபடுகின்றன. ஆனால் பெண்கள் எவ்வளவு தூரம் இக்கலந்துரையா டல்கள் பற்றிக் கவனம் செலுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை.

கொழும்பில் உள்ள பெண்கள், வடக்கு, கிழக்கோடு ஏதோவொரு வகையில் தொடர்புபட்டவர்கள். ஆனால் அவர்கள் கூட வடக்கு, கிழக்கு பெண்கள் பற்றி குறிப்பாகப் போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றிக் கவனம் செலுத்தக்கூடிய நிலையில் இல்லை. போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் பெண்கள் அனைவரும ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

பொதுவாகவே பெண்களை ஒன்றிணைத்துச் செயற்படுவதென்பது மிகவும் கடினமானது.

அவர்கள் அந்தத் தடைகளைத் தாண்டும்போதுதான் என்ன செய்யலாம் என்பது பற்றிக் கதைக்கலாம்.

ஆளுமை நிறைந்த பெண்கள், தொழிற் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த பெண்கள் தலைமைப் பதவிகளில் இருக்கும் பெண்கள் இது தொடர்பில் நேரத்தை ஒதுக்கிச் செயற்படுவது மிகக் குறைவாக உள்ளது. இன்னோர் பெண்ணுக்கு நேரும் அவலம் குறித்துச் சிந்திக்கவே அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.

அதற்காக நேரம் ஒதுக்கவும் அவர்கள் தயாராக இல்லை. அவர்கள் எல்லோரையும் ஒன்றிணைக்கும் போதுதான் ஆக்கபூர்வமான செயற்திட்டங்களை முன்னெடுக்கலாம்.