Monday, June 18, 2012

நாம் பேதுவது....நினைப்பு.........
.


என்னடா உனக்குள்ள சிரிக்கிறாய்?

“இங்க பாரன் கூத்தை….மெலிந்த நீண்ட கூந்தல் உள்ள அழகான குடும்ப பாங்கான பெண்தேவை…..”


“ம்…..அதுக்கென்ன?சாதாரணம் தானே….”

“ஏன்டா….மண்டேக்க சரக்குதேவையில்லயோ…?”

“இதுகள வெளியில கூட்டிக்கொண்டு நாலு இடத்துக்கு பேறதில்லையே…?”

“ஓ…..உங்கட மனிசி எண்டு எல்லாருக்கும் உடம்ப காட்டி அறிமுகப்படுத்ததான் விருப்பம்…ம்….”

“டேய்….டேய்…பைத்தியம் மாதிரி கதைக்காத…

“.என்ர மனிசி….இவா இந்த ஒப்பீசில…இன்ன வேலையில இருக்கிறா இன்னது படிச்சிருக்கிறா.. எண்டு சொல்லுக்களன்டா…பெருமையா இருக்கும்…”

“பாக்கிறவன் வடிவான மனிசியா எண்டுதான் பாப்பான்...”

 “அடேய்…..நீங்கள் கறுப்பா குண்டா… இருந்தாலும் உங்களுக்கு மெலிஞ்ச வெள்ளையான பொம்பிள வேணுமே…?”

“ஓ…நாங்க ஆம்பிளயள்…..”

‘”ம்……உன்னையூம் ஒருத்தி என்ர மனுசன் எண்டு அறிமுகப்படுத்ததானே போறாள்…ஹ…..ஹ……ஹஹ.”


‘ஆனை கறுத்தாலும் ;ஆயிரம் பொன்’

இருக்கட்டும்...நான் சொல்லுறது ஆனைக்கு ஆனைய கட்டுங்கோ…பூனைக்கு பூனையக் கட்டுங்கோ எண்டுதான்…ஆனைக்கு பூனைய கட்டுற கதைதான் உங்கட கதை.

நடப்பு
.!!!
!

என்னடா..கோபமா இருக்கிறாய்….’’

இஞ்சபார்; விளம்பரம் போட்டிருக்குதுகள்..’’

ஓ…அழகான பெண்தேவை…அதுக்கென்ன?’’

சும்மா போட்டாக் காணுமே…மெலிந்த சிவந்த நீண்ட கூந்தல் உள்ள குடும்ப பாங்கான எண்டெல்லாம்; போடவேணும்.’’

ம்…;..சாரி அடுத்த முறை திருத்தி போடுவம்.’’

அடேய்…எனக்கு ஜஸ்வர்யா ராய் மாதிரி தேவையில்ல அற்லீஸ் மீரா ஜஸ்மின் மாதிரி இருந்தாலே போதும்.’’

நந்தனிற்ற மனிசிய  தெரியுமே  உனக்கு…சாரியா அசின் மாதிரி...

சரி... சரி…..உனக்கும் ஒரு அசினோ தமன்னாவோ கிடைக்கும்.


Monday, June 11, 2012

கிளிநொச்சி பிடித்திருக்கிறது

1998 காலப் பகுதியில் என்னால் எடுக்கப் பட்டு பத்திரிகையில் வெளியானது.
'என் கருத்தியலுக்கான நடைமுறை வடிவத்தை இங்கு தான் காண்கிறேன்" முதல் முதல் இலங்கை வந்து சில இடங்களைப் பார்வையிட்ட அப்பெண்ணிடம் 'உங்களுக்கு எந்த இடம் பிடித்திருக்கிறது? என்று கேட்டபோது, கிளிநொச்சி என்று கூறினார் அப்பெண். இலங்கையில் இயற்கை வளம் கொஞ்சம் இத்தனை இடங்களிலிருதும், போரில் சிதைவுற்று முழுக்க முழுக்க செயற்கைத்தனங்களால் கட்டியெழுப்பப்படும் அந்த இடமா பிடித்திருக்கிறது என்ற கேள்வி, கேட்டவரிடம் அந்த அழிவும் அந்த அழிவுக்குப் பக்கத்திலேயே ஓர் உயிர்ப்பும் தோன்றிக் கொண்டிருக்கின்ற, வாழ்வின் மீது இன்னும் நம்பிக்கை இழந்துவிடாத அந்த மக்களைக் கொண்ட இடம்தான் பிடித்திருக்கிறது என்ற பதில் பெண்ணின் உடலை அல்ல ஆளுமையை வைத்து அவளைப் பார் என்பது போல் இருந்தது. ஆம்! ஊடகவியலாளாரன ரேவதி 'அண்மையில் இலங்கை வந்திருந்தார். இவரைச் சந்திக்கத் தூண்டியே இந்தப் பதிலும் அந்தப் பதிலை அவர் கூறிய விதமும்தான். ஆறு வருடங்களாக 'சன்" தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணி புரிந்தவர். பின்னர் 'Pioner'பத்திரிகையின் தமிழ்நாட்டு செய்தியாளராகப் பணிபுரிந்தவர். அதன் பின் தேசிய மாதர் சம்மேளத்தில் நான்கு வருடங்கள் இணைந்து பணியாற்றியவர். 'கதையல்ல நிஐம்" என்ற லட்சுமியின் நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராகவும் சிறிது காலம் பணியாற்றியவர். தற்போது விவரண படம் தயாரிப்பதில் தன்னை ஈடுபடுத்தத் தொடங்கியுள்ளார். அவர் இலங்கை வந்ததன் நோக்கம் பற்றிக் கேட்டபோது.
ரேவதி :- போராளிப் பெண்கள் பற்றிய விவரணப்படம் ஒன்றைத் தயாரிப்பதற்கான முன்னோடி விஜயம்தான் இது.
கேள்வி :-ஏற்கனவே விவரணப் படம் தயாரித்த அனுபவம்?
ரேவதி :- திரைபட விழா ஒன்றிற்குப் போயிருந்தபோதுதான் விவரணப் படம் தயாரிப்பில் என் கவனம் திரும்பியது. இதற்காக திரைப்பட அனுபவத்தைப் பெறுவதற்காக மனிரத்தினத்தை நாடினேன். திரைப்பட விழாவில் வைத்தே அவரைச் சந்தித்தேன். அலுவலகத்தில் வந்து சந்திக்குபடி கூறினார். உடனடியாக பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு அங்கு போனேன். மூன்றுமாதம் கழித்து வரச்சொன்னார். என்னால் அவ்வளவு காலம் பொறுக்க முடியவில்லை. கௌதமைச் சந்தித்தேன். அவர் மூலம் 'காக்க காக்க" திரைப்படத்திற்கு அவருடன் சேர்ந்து பணியாற்றினேன். அதன்பின் நானே எனது சொந்த முயற்சியால் உங்களில் ஒருத்தி என்ற விவரணப்படத்தை எடுத்தேன். பலராலும் அழைக்கழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதை இது. மும்பை திரைப்பட விழாவிற்கு இது தெரிவாகி தற்போது (2004)அமெரிக்காவில் நடக்கவிருக்கும் திரைவிடவிழாவிற்கும் தெரிவாகியுள்ளது. அக்டோபர் 1 இலிருந்து 7 வரைக்கும் இத்திரைப்பட விழா நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது.
கேள்வி :- ஈழத்துப் பெண் போராளிகள் பற்றிய விவரணப்படத்தை எடுக்க வேண்டும் எனத் தோன்றியது ஏன்?
ரேவதி :- ஈழப்பிரச்சினைப் பற்றி அல்லது போராளிகள் பற்றி 'ரெரோறிஸ்' என்ற படம் பார்த்தேன். அத்துடன் 'உயிரே' என்ற படத்தையும் பார்த்தேன். இவற்றில் ஒரு ஆண் தான் கொண்ட கொள்கைக்காக இதுவரை போராட முடிகிறபோது, ஒரு பெண் குழந்தை, காதல் என்பனவற்றுக்காக அதை நிராகரிக்கும் போக்கைக் காட்டுகின்றனர். 'ரெரோறிஸ்ற்" என்ற படத்தில் கர்ப்பமாகும் பெண் தன் குழந்தைக்காக தன் கொள்கையை விடுவது காட்டப்படுகிறது. ஒரு ஆணுக்குத் தன் குழந்தை மேல் இருக்கும் இணைவுதான் பெண்ணுக்குப் தன் குழந்தை மேல் இருக்கிறது. ஆனால், அதையே முக்கிய காரணமாக காட்டிக்கொண்டு கொள்கையை விடுவது என்பது குறைபாடுடையதோ எனவே உண்மையில் பெண் இத்தகைய குறைபாட்டுடத்தான் போராட்டத்தில் இயங்குகின்றாளா? என்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்குத் தோன்றியது. அதுதான் என்னை இப்படியான ஒரு விவரணப்படத்தை எடுக்கத் தூண்டியது.
கேள்வி :- இப்பொழுது நீங்கள் இங்கு வந்து பதினைந்து நாட்களுக்கு மேலாகிறது. இதுவரையான உங்கள் கணிப்பில் தமிழ்ச் சமூகப் பெண்கள் பற்றி?
ரேவதி :- ம்.. எனக்குப் புரிந்து கொள்ள மூடியாத ஒரு விடயமாக, இருப்பது, போராளிப் பெண்களுக்கும் சமூகத்திற்குமான இடைவெளி. அதாவது எமது சமூகத்தை விட மரபு ரீதியான ஒரு சமூக அமைப்பை ஆண் - பெண் ஊடட்டத்தை இந்த தமிழ் சமூகம் கொண்டுள்ளது. உதாரணமாக ஒரு பையனும், பெண்னும் நின்று தெருவில் சாதாரணமாக கதைப்பதைக் காண முடியவில்லை. நான் கதைத்தபோதும் அது அசௌகரியமாக உணரப்படுகின்றது. இந்ந நிலையில், பெண்கள் போர்க்களத்தில் நிற்பது ஒரு பெரும் பாச்சல்தான். இதை ஆயிரக்கணக்கான பெண்களுக்கு சர்வசாதாரணமாக இந்தச் துணிச்சல் கை வந்திருக்கிறது. இந்த ஆளுமை உணரப்பட்டு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், சமூகம் இன்னும் 6 மணிக்குப் பிறகு எங்குபோறாய் என்று சாதாரண, பெண்களைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அவர்களுக்கிடையேயான மாற்றம் அவர்கள் பதிலில் ஓரளவு தெரிகிறது. அவர்கள் கூறுவார்கள் அங்கு இரவிரவா போர்க்களத்தில் நிற்கிறார்கள். பெண்கள் நீங்கள் என்ன இப்படிப் பயப்படுறீங்க...? என்று கேட்கிறாள் பெற்றோரை பார்த்து! ஆனாலும் இந்த இடைவெளி எப்படி இவ்வளவு காலமும் நிலைத்து இருக்கிறது? இந்தத் தமிழ் சமூகப் பெண்களின் உருவாக்கம் இனி எப்படி இருக்கப்போகிறது என்ற கேள்வி என்னுள் இருக்கிறது. அதேவேளை, கொள்கை மேல் பற்றுக் கொண்ட ஒரு பெண்ணாலும் ஆணைப் போல் இயங்க முடியும் என்ற எனது கருத்தியல் ரீதியான நம்பிக்கை இங்கே இயல்பாகி இருப்பதைக் காண முடிந்தது. அதாவது என் கருத்தியலுக்கான நடைமுறை வடிவத்தை இங்கு நான் காண்கின்றேன்.
கேள்வி :- இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தில் இணைந்து பணியாற்றியிருக்கிறீர்கள். அரசியல் சார்ந்த பெண்களுக்கான இயங்கங்களால் எதையாவது சாதிக்க முடிந்ததா?
ரேவதி :- அரசியல் சார்ந்த இயங்கங்களாக திராவிட இயக்கத்தின் பெண்கள் அமைப்பையும், இடதுசாரிக் கட்சியின் பெண்கள் அமைப்பையும் நோக்கலாம். இதிலே இடதுசாரி இயக்கம் பெருமளவில் பெண்களின் அன்றாடப் பிரச்சினைகளை அதாவது தொழிற்பிரச்சினை, கல்வி, சுகாதாரம் எனத் தீர்வை நோக்கி நகர்ந்தன. ஆனால், திராவிட இயக்கம் கருத்தியல் ரீதியாக தாலி, கற்பு, விழாக்கள், நம்பிக்கைகள் பற்றியதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் நேரத்தைச் செலவழித்தது. இந்த இரண்டு இயங்கங்களுமே மிகுந்த தாக்கத்தை விளைவிக்க முடியாமலே இருந்தது. காரணம், ஒன்று அன்றாடப் பிரச்சினையுடன் நின்றுவிட, மற்றது கருத்தியலுடன் மட்டும் நின்றது. அதிலும் திராவிட அரசியல் மந்த நிலையானது இந்தப் பெண்கள் அமைப்புக்களையும் பாதித்தது. எனவே, அரசியல்கட்சி சார்ந்து நின்று இயங்குகின்ற போது பெரிதாக சாதிக்க முடிவதில்லை. கட்சியின் பாதிப்பு மாதர் இயங்கங்களையும் பெருமளவில் பாதிக்கும். அதேவேளை, இடதுசாரிகள் அமைப்பானது இன்னும் இயங்குகிற நிலையில் அன்றாடப் பிரச்சினைகளத் தீர்க்கிறது. ஆனால், கருத்தியல் ரீதியான மாற்றங்களை உருவாக்கும் நிலை இங்கு இல்லாததால் பெருமளவு தாக்கம் விளைவிப்பதாக அது இல்லை. எனவே, ஒரு பெரும் அரசியல் மாற்றுத்தினூடாகத் தான் பால் சமத்துவத்தை உருவாக்க முடியும். அதாவது, ஒரு சமூக அடிப்படை மாற்றத்துடன் தான் இதை உருவாக்க முடியும். ஒரு புரட்சி அரசியல் மாற்றத்துடன்தான் இது வரவேண்டும். ஏற்கனவே கூறப்பட்ட இந்த கட்சி அரசியல், பெண்கள் அமைப்புக்களால் சட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தமட்டுமே முடிந்தது. பெண்களுக்கான 33வீத இட ஒதுக்கீடும் அந்த வகைதான்.
கேள்வி :- பெண் விடுதலை அல்லது பெண்னிலைவாதம் குடும்ப அலகை சிதைக்கிறது என்ற குற்றச்சாட்டு பற்றி...?
ரேவதி :- ஏற்கனவே இருக்கக் கூடிய குடும்ப அலகு சிதைவடைகிறது என்றால் அதைவிட நல்லது ஒன்று உருவாகும் வாய்ப்பு உள்ளது. குடும்பங்கள் என்றும் இருந்து கொண்டுதானிருக்கும். ஏற்கனவே இருந்த அமைப்பில்தான் சிதைவு ஏற்படும். புதிய குடும்ப அலகில் ஐனநாயகப் பண்பும் இருவருக்குமே சமனான கடமைகளும் இருக்கும்போது சிறந்ததான ஒரு குடும்ப முறைமையை அந்தச் சிதைவு எட்டுகிறது. அதற்கான முயற்சியாக இது அமைகிறது எனக் கொள்ளலாம். முதலாளிக்கு எப்பவுமே தொழிலாளி அடங்கி இருக்கும்போதுதான் சந்தோஷம் சுமுகமான ஒரு உறவு அவர்களுக்குள் இருப்பதாக முதலாளி எண்ணுவார். சிலவேளைகளில் தொழிலாளியும் எண்ணிக் கொள்வார். ஆனால், தொழிலாளியின் உரிமை பற்றி அவருக்குத் தெரிந்த பின் அதைக் கேட்டுப் போராடத் தொடங்கும்போது, உறவு நிலை சீர்குலைவது இயல்பானதே. அதுபோல்தான் பெண்களின் ஆளுமை ஒத்துக் கொள்ளப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். ஆனால், உடலை மட்டுமே வைத்து பலம், பலவீனம் கணிப்பிட்டல்தான் இங்கு நடக்கிறது. குழந்தையைச் சுமத்தல் என்பது பெண்ணின் பலமாகப் பார்க்கப்படுகின்ற நேரத்தில் அதுவே தான் கொண்ட கொள்கையை சிதறடிக்கும் பலவீனமாகவும் வருகிறது. குடும்பத்தளத்தில் பெண்ணுக்கு முழுமை தருவது என்பது போற்றப்படுகின்ற தாய்மை, சமூகதளத்தில் இயங்கும் போது கொண்ட கொள்கைக்கு, இயங்குநிலைக்குத் தடையாய் இருப்பது தாய்மை. இந்த இரட்டைத் தன்மை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இது 'அதிஉச்ச' அளவீடுகள் பற்றிய மதிப்பீடு எப்படியானவை என்பது பற்றிய அறிவு எம்மிடம் இருக்க வேண்டும். இவைதான் சரியான குடும்ப அலகைத் தீர்மானிக்கும்..
கேள்வி :- இப்பொழுது இந்த 'பெண்மொழி' பற்றிய சர்ச்சை எழுந்துள்ளது. இது சார்ந்து இந்தியாவில் பெண் கவிஞர்கள் மீதான தாக்குதல் பற்றி கூறுங்கள்?
 ரேவதி :- காலங்காலமாக பெண்ணை, உடலாகத்தான் பார்த்தார்கள். அதாவது பெண்னுடலை வைத்துத்தான் பெண் பேசப்பட்டாள். அதே பெண்ணுடலை வைத்து பென் தன் பிரச்சினைகளை இப்போது கூறுகிறாள். புரிந்த மொழியில் தெரியாத விடயத்தைக் கூறுகிறாள். தெரிந்து கொள்ளலாமே! அதைவிடுத்து இவர்கள் பார்வைக் கோணத்தை மாற்றிப் பார்க்கிறார்கள். அதற்கு என்ன செய்வது.?

Tuesday, May 29, 2012

மார்ச் 8


 இந்த வருட(2012) பெண்கள் தினத்தில் தினக்குரல் பத்திரிகைக்காக என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள்.தினக்குரலில் இது பிரசுரமானது.
1.மகளிர் தினத்தில் பெண்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய சபதம் ?
மகளிர்தினம் என்பது பெண்களுக்கெதிரான சுரண்டல்கள் ஒடுக்குதல்களுக்கு எதிரான நாள்.பெண்களின் உரிமைகளை நினைவுபடுத்துவதற்கான அடையாள நாள்.இந்த வருடம் (2012 )'கிராமிய பெண்களை வலுவ+ட்டல் - பட்டினி வறுமை ஒமிப்பு”என்பதை கருப்பொருளாகக் கொண்டு இந்நாள் நினைவுகூரப்படுகிறது.இங்கு எமது பெண்களல்ல எமது சமூகம் எடுத்துக்கொளளவேண்டிய சபதம் - போரால் பாதிக்கப்பட்ட மற்றும் தோட்டப்புற பெண்களை வலுவ+ட்ட நாம் ஒவ்வொருவரும் ஏதாவது செய்யவேண்டும்.குறைந்த பட்சம் சமூக பெருளாதார கலாசார விழுமியங்களை அளவுகோலாக்கி அவர்களை அளவீடு செய்வதையாவது தவிர்க்கவேண்டும்.

2. பெண்ணைப் பற்றி சமூகத்தினால் உருவாக்கப்பட்டுள்ள படிமங்கள் எவ்வாறு உடைக்கப்பட்டு வருகின்றன ?
பெண்களின் கல்வியும் வேலைவாய்ப்பும் ஓரளவுக்கு பெண்பற்றிய பண்டைய படிமத்தை உடைத்தாலும் குடும்ப அலகு சார்ந்த பெண்பற்றிய படிமங்கள் அதனால் உடைவதாய் இல்லை.ஆனாலும் குடும்ப அலகில்ஆண்டான் அடிமை பண்பை விரும்பாத ஜனநாயக பண்பை விரும்பும் ஆளுமையுள்ள ஆண்களால் பெண் பற்றிய படிமங்கள்  உடைகின்றன என்று சொல்லலாம்.
3. பெண்கள் எவற்றில் இருந்து விடுபட்டு எதனை நோக்கி பயணிக்க வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள் ?
பொதுவாக பெண்கள் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு இவற்றிலிருந்து விடுபட்டு சுயசிந்தனைவளர்த்தல், புதியவற்றைஅறிதல், ஆளுமைவளர்த்தல், முடிவெடுத்தல் ஆகியவற்றை நோக்கி பயணிக்க வேண்டும்.
4. தற்போது பெண்களின் முன்னேற்றம் எந் நிலையில் காணப்படுகிறது ?
போதுவாக இலங்கை பெண்கள் கல்விநிலையில் முன்னேற்றம் உள்ளது.சில பகுதிப் பெண்கள் பதவிநிலை ஆளுமை நிலைகளில் முன்னேற்றம் உள்ளது.உயர் பதவிகள் முடிவெடுக்கும் திறன் கொண்ட பதவிநிலைகளில் உள்ளனர் ஆயினும ;சில பகுதியினர் மட்டுமே.இவர்களும் முடிவெடுக்கும் தருணங்களில் ஆண்ஆதிக்கஃஆண்அதிகாரத்திற்கு கட்டுப்பட்டவர்களாகவே இயங்குகின்றனர்.அதைத்தான் நாம் வெளிப்படையாக விமர்சிக்க வேண்டும்.அதை விடுத்து அந்த பெண்ணின் குடும்ப அலகுசார்ந்த பண்புகள் ஓழுக்கங்களே விமர்சிக்கப்படுகின்றன.அதை முற்றாக எதிர்க்கவேண்டும்.