Friday, September 19, 2014

மதமும் பெண்களும்.

‘கரு’விற்குள்ள கர்வம் பெண்களிடம் இல்லாமல் போனது ஏன்?

வீரியம் உள்ள விந்தணு ஒன்றை மட்டுமே இணைத்துக்கொள்ளும் அதிகாரம்!

மதம் என்பது என்ன?
பலரும் பல வியாக்கியானங்கள் இதற்கு சொன்னாலும் சகல மதங்களும் ‘மனித உயிரி, பாவங்கள் ஒழித்து ,அன்பு செலுத்தும் மன உணர்வையும் அதனூடான மன அமைதியையும் எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதற்கான  வழிகளை முன்வைப்பதிலில் இருந்துதான் கட்டமைக்கப்பட்டுள்ளது.இந்த மூலக்கருவினூடாகத்தான் வாழ்க்கை முறைகளை விளக்கிச் செல்கிறது என நம்புகிறோம்.நம்பவைக்கப்படுகிறோம்.மதங்கள் என்பவை தோற்றுவிக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட ஒருஅமைப்பாதல் முறைமை.எனவே மனித உயிரி மனம் சம்பந்தப்பட்டு ஒரு அமைப்பாதல் முறைமைக்குள் உள்வாங்கப்படுகின்றபோது ஆண்பெண் பேதமற்ற ஒரு நிலை உருவாக்கப்பட்டிரு;கவேண்டும் அல்லது அங்கு ,ஆண் பெண்சமத்துவமாக நிலைநிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் அது நடைபெறவில்லை.அனைத்து மதங்களும் தம்மை நிலை நிறுத்திக்கொள்வதற்காக வன்முறையை வழியாகக் கொள்வதும் இன்று வரை குறையவில்லை.இன்று வன்முறையும் பெண் எதிர்ப்பும் மதங்களின் அச்சாணியாகிவிட்டன.
இயற்கைக்கு பயந்து இயற்கையை வழிபட்ட காலம் தாய்வழிச் சமூகமாக இருந்த காலம் பெண் பெரும் கடவுளாக போற்றிய காலம் ஒன்றிருந்தது.சிந்து வெளி நாகரிகத்தில் ‘ஒரு பெண்ணின் வயிற்றில் இருது மரம் ஒன்று முளைப்பது போன்ற உருவம் கண்டறியப்பட்து என வரலாற்றாசிரியர்கள் கூறுவர்.அந்த குறியீடு பெண் படைப்புடன் தொடர்பட்ட நிலையை சித்தரிப்பதும் அதனூடாக பெண்ணின் மாபெரும் சக்தியை காட்டுவதுமாகும்.அன்று படைப்பின் ‘மூலமாக’ பெண் கண்டறியப்பட்டாள்.
‘மானிட இனத்தின் கதை பெண்ணினூடன் தொடங்குகிறது.மூலமனித இனமரபு நுட்பஅணுக்களைக் கொண்ட இனக் கீற்றைப் பெண்தான் தாங்கியிருந்தாள்.இன்று வரையிலும் அவள்தான் அதைத்தாங்கியிருக்கிறாள்.பரிணாம வளர்ச்சிக்கேற்ப அவள்  தன்னை இசைவாக்கிக் கொள்ளும் தன்மை மனித இனம் தொடர்ந்து உயிர்வாழ்வைதையும் வெற்றியடைவதையும் உறுதிப்படுத்தியது.’
என்ற கூற்று கவனிப்புக்குரியது.ராதா கிருஸ்ணன் மொழிபெயர்த்த ‘உலக வரலாற்றில் பெண்கள்’ என்ற நூலில் உள்ள குறிப்பு இது.( Rosalind Miles எழுதிய The women’s history of the world’  )ஆனால் எந்த ஒரு மதமும் உயிரின் உருவாக்கத்தில் பெண்ணை முதன்மைப்படுத்தியதே இல்லை.

‘இயற்கை சார்ந்த உயிரியல் அமைப்பில் (இங்கு பால் ரீதியில் பிரிந்த ஆண் பெண் பிரிந்த உயிரியல் தொகுதியில்) பெண்கள் மறு உற்பத்தியில் விதிவிலக்கின்றி அனைத்து உயிரினங்களும் ஈடுபடுவது எதார்த்தமான உயிரியல் விதியாக இருக்கின்றது.ஆனால் உலகில் உள்ள அனைத்து மதங்களும் உலகத்தைப்படைத்தது முதல் உயிரினங்களைப்படைந்தது வரை ஆண் கடவுள்கள் என்பதில் முரண்பாடின்றி கூறும்போது,ஆணாதிக்க அமைப்பதின் இடைச்செருகல் திட்டவட்டமாக இயற்கைக்கு எதிராக அம்பலமாகிறது.ஆணாதிக்க சமுதாயத்தின் ஆணாதிக்க விளைவுகளே இன்றுள்ள மதங்கள் என்பது இதைத் தெளிவாக அம்பலப்படுத்துகிறது.’
என்று ‘ஆணாதிக்கமும் பெண்ணியமும்’ என்ற நூலில் திரு.பி.இரயாகரன் குறிப்பிட்டுச் செல்வார். இந்த நுலில் ‘மதங்களும் பெண்ணும்’ என்ற தலைப்பில் ஒவ்வொரு மதமும் எவ்வாறு பெண்ணை இரண்டாம் பிரயையாக்கியது பற்றி காரண காரியங்களுடன் வரலாற்று தகவல்களை முன்னிறுத்தி விளக்கிச் செல்கிறார்.உண்மைதான் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு குழந்தைகள் உருவானதும்,ஆணின் விலா எலும்பில் இருந்து பெண் படைக்கப்பட்டதும் ,பெண்களை விளைநிலங்களாக பார்ப்பதும் ஒவ’வொரு மதங்களும் தம;கென எழுதிக்கொண்ட உயிரின் படைப்புவழியாககிறது.இன்றைய நவீன யுகத்தில் கூட ஒரு ஆணின் ஊடாக மறு உற்பத்தியை நிகழ்துவது என்பது எவ்வகையிலும் சாத்தியம் இல்லை.பதிய முறை இனப்பெருக்கமுறையில் ஒரு ஆணின் விந்தணு இல்லாமல் பெண்ணின் கருவில் இருந்தே அவளைப்போல் இன்னொரு பெண்ணை உருவாக்கிவிட முயும் என்பது கண்டறிப்பட்டது.இதனூடாக ஒரு ஆணை உருவாக்குவதை பெண் மறுதலிக்க முடியும் சாத்தியங்களும் உண்டு.இந்நிலையில்உயிரின் படைப்பு வழியை ஆண் தனதாக்கிய மதக் கதைகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை.வரலாற்று இயங்கியலில் பெண்ணுக்கான இடம் பின்தள்ளப்பட்ட காலத்தில்கட்டமைக்கப்பட்டவை.ஆணாதிக்கத்தை மையப்படுத்திய சமூக இயக்கத்திற்கு அரசியல், பொருளாதார, மத, பண்பாட்டு கூறுகள் அனைத்தும் துணைநிற்கவேண்டிய கட்டாயத்தில் மதம் விதிவிலக்காகிவிட முடியாது.அதனால்தான் மதங்கள் பெண் ஒடுக்குமுறையை மிக லாவகமாக நிகழ்த்தியுள்ளன.மேற்குறித்த நுலில் இராயகரன் அவர்கள்
‘மறுஉற்பத்தியை இயற்கை சார்ந்து எப்படி ஆண் ஈடுபடுவது சாத்தியம்? என்ற அடிப்படையான கேள்வியே மதத்தின் ஆணாதிக்கக் கற்பனைகளைத்தகர்க்க போதுமானது’ 
என்று கூறிச்செல்வதும் கவனிக்கத்தக்கது.

ஆணின் விந்தணு இல்லாமலே ஒரு உயிரை உருவாக்க முடியும்.என்பது இன்றைய விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பு.ஆனால் ஒரு பெண்ணின் கர்ப்பபை இல்லாமல் உயிர் உற்பத்தியாகும் சாத்தியம் விஞ்ஞானத்தில் இதுவரை இல்லை.எனவே மறு உற்பத்தி என்பது எப்போதும் பெண்ணின்மூலமேசாத்தியமாகிறது.உண்மையில் இயற்கையாகவே பெண்ணினால்தான் உலகம் இயங்குகிறது.இந்த இயற்கை உண்மையை மறுதலிக்க புற உலகில் காத்தலும் அழித்தலும் ஆணிடமே இருக்கும்படி எல்லா நிறுவனங்களும் வடிவமைக்கப்பட்டன.அதில் ஒன்றுதான் மதம் என்ற நிறுவனம்.ஒரு பெண் சுதந்திரமாக இருப்பது இயங்குவது ஆபத்து.இன்று சிறு பெண்குழந்தைகள; கூட ஆபத்துக்குள்ளாகியுள்ளனர்.
.யாரால்?
ஆணினால்.!
பாதுகாப்பும் அந்த ஆணின் கையில்தான்.(அப்பா,அண்ணா,கணவன்,)
ஆனால் இன்று இந்த உறவுகளாலேயே பெருந் துன்பங்களை அனுபவிக்கும் குழந்தைகளும் பெண்களும் இன்று இருப்பதையும் மறுத்துவிடடுடியாது. உற்பத்தியின் மூலாதரமான பெண்ணிடம் இருந்து அதிகாரம் பறிக்கப்பட வேண்டும் என்பதற்காக கட்டமைக்கப்பட்ட சமூக ஒழுங்குவிதிகளில் ஆண் முதன்மைப்படுத்தப்பட்டது வரலாற்று உண்மை.

ஆயிரம் கோடி விந்தணுக்களில் வீரியம் உள்ள ஒன்றை மட்டுமே தேர்தெடுக்கும் பெண்ணின் ‘கருவிற்குள்ள கர்வம் பெண்களிடமிருந்து திட்டமிட்டு அழிக்கப்பட்டது.இந்த அழிப்பினூடாக ஆண் சமத்துவத்தை நிலைநிறுத்தியிருக்கலாம்.ஆனால் ஆண் அதிகாரத்தை நிலை நிறுத்தியதுதான் திட்டமிட்ட செயல். தீர்மானிக்கும் சக்தியாக பெண் உருவாகி விடக்கூடாது என்பதில்தான் அனைத்து நிறுவனங்களினதும் கவனம் இருக்கிறது.ஒவ்வொரு மதமும் தமது கோட்பாடுகளை விளக்கும் நூல்களில் பெண்களுக்கு புத்திசொல்வதிலும் ஆண்களுக்கு பெண்களைப்பற்றியும் அவர்களை எப்படி கையாள வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைக்கின்றபோது ஆண் - பெண் பாலுறவு அடிப்படையிலேயே அவற்றை உருவாக்கியுள்ளமை தெளிவாகிறது.மதங்களில் பெண்கள் மதகுருமாராக உருவாக முடியாத நிலையும்,மதகுருமாருக்கான பாலுறவு மறுப்பும் பெண்வெறுப்பை அல்லது பெண் விலக்கலை முன்னிறுத்துகிறது.

மக்களுக்குள் பயத்தை உருவாக்கிவிட்டிருக்கும் மத நம்பிக்கைகள் எப்பேதும் கேள்விகளுக்குட்படாதவை.அந்த பலம்தான் மதத்திற்குள் பெண் ஒடுக்குமுறையை புகுத்தவதற்கும் இன்றளவும் அதை வளர்த்துச் செல்வதற்கும் சாதகமாக சூழலை உருவாக்கியுள்ளது.

இன்று மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகளும் பாலியல்வல்லுறவுகளும் அதிகரித்தமைக்கும் இந்த கேள்விகேட்க முடியாத நிலைகளும் ஒரு காரணம்.மதத்ததை மத தலைவர்களை கேள்விக்குட்படுத்த முடியாத நிலையை ஆணாதிக்க சமூகம் தமது பிற அரசியல் பொருளாதார தேவைக்காக நன்கு பயன்படுத்திக்கொள்கின்றன.பெண் எங்கும் விலக்கப்பட்டவளாகிவிட்டாள்.குற்றத்திற்கு ஆட்படுபவளாகிவிட்டாள்.சமூகத்தின் சரிபாதியினரான பெண்களுக்கு அரசியலில் பொருளாதாரத்தில் எத்தகைய இடம்உள்ளது?
இவற்றில் அவளது பங்காற்றல் எத்தகையாதாக உள்ளது?
இப்படி பெண்ணின் இடத்ததை தீர்மானதிப்பதில் மதத்தின் பங்கு மிகமுக்கியமானதகவுள்ளது.சமூகத்தின் அடிப்படை அலகான குடுப்ப அலகை கட்டமைப்பதில் மதத்தின் பங்கு கணிசமானது.மதசடங்குகளுடாக திருமணபந்தத்தில் ஆண்பெண் இணைக்கபடுகின்றனர்.அதன்போது சொல்லபபடுகின்ற மந்திரங்களாகட்டும் சடங்குகள் சம்பிரதாயங்களாகட்டும் எல்லாமே ஆணை முதன்மைப்படுத்தியவையே.வாழ்க்கையில் ஆணுக்கு துணையாக பெண் போவது பற்றியும் அவள் அங்கு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியுமே அவை முன்னிறுத்துகின்றன.பெண் பாதுகாக்கப்படவேண்டிய ஒரு பொருளாக அவனிடம் அவள் ஒப்படைப்படுகிறாள்.
அனைத்து மதங்களினதும் மத நூல்களில் பெண்கள் பற்றிய நோக்கு,அவர்களுக்கான இடம் என்பன பற்றி பல்வேறு கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.அவற்றில் மிக விரிவாக பெண்ணின் இரண்டாம் பட்ச நிலை விபரிக்கப்பட்டுள்ளது.ஆனால் மதம் சார் கொள்கைகளில்  யாருக்கும் கேள்வி எழுப்பப்டமுடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ்.தேவகெளரி