Tuesday, December 26, 2006

தொலைபேசி கமராவுக்குள் அடக்கியவை

குளிர் களி சுவையில்.... அல்ல...அல்ல....
குளிரில் தடுமாறும் சிறுவன்.
கிறிஸ்மஸ் ஆடைத் தெரிவில்.....குழந்தை.

தொலைபேசி கமராவுக்குள் அடக்கியவை
வேப்பிலை,பூக்கள் கொண்டு தம்புள்ள 'அமையா'உல்லாச விடுதியில் படுக்கைமீது செய்யப்பட்ட அலங்காரம்.

Thursday, December 07, 2006

அம்பாந்தோட்டை கடற்கரையில்....


ஊரைச் சுருட்டி
உலையிலிட்ட அலையை
யார்தான் வெறுத்தார்?

கலைவண்ணம் பனிக்கட்டியில்,பூசினிக்காயில்....இயற்கையை இயல்பாக விட்டுவிட்டால்
மனிதனுக்கு மவுசு ஏது?
இல்லை, இயற்கைக்குத்தான்
மாற்றம் ஏது?

ஞாபகத்துக்காக ஒரு தயார்படுத்தல்


இங்கு இருந்தோம்
இவர்கள் நண்பர்கள்
நினைத்துப்பார்க்க
ஒரு 'செட்டப்'

Thursday, November 16, 2006

பெண்களை அதிகமாக கொண்ட சமூகமாக தமிழ்ச்சமூகம்


போரில் ஒரு பெண் பாதிப்படைகின்ற போது, அதில் அவள் மட்டுமல்ல, அந்தக் குடும்பம், உறவுகள் சார்ந்த குடும்பங்கள், கிராமம், சமூகம் என்று அது பல தளங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்குக் காரணம், மறு உற்பத்தித் திறன் அவளிடம் இருப்பதேயாகும். ஒரு சமூக உற்பத்தி அவளூடாகத்தான் நிகழ்கிறது. இந்த நிலையில், சர்வதே மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஐரீன் கான்;"பெண்கள் ஒரு சமூகத்தின் கௌரவத்தை உருவகப்படுத்தி நிற்பவர்களாகவும் எதிரியின் இனப்பெருக்க இயந்திரமாகவும் நோக்கப்படுவதன் காரணத்தினாலேயே அவர்கள் போரின் போது பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; பாலியல் ரீதியிலான சித்திரவதைகளையும் அனுபவிக்க வேண்டியேற்படுகிறது' என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், "ஒரு குறித்த சமூகத்தின் ஆண்களை வலுவிழக்கச் செய்யும் இராணுவ ரீதியான தந்திரோபாயமே இது என்பதும் அவரது கருத்து. உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இத்தகு தந்திரோபாயங்கள் ஒருபுறம் இருக்க, நீண்டகாலத் தாக்கம் கொண்ட நிகழ்வு ஒன்று தமிழ்ச் சமூகத்தில் நடந்தேறியுள்ளது. அதாவது, ஆண்களை அழித்து, பெண்களிடம் இருந்து பிரித்ததன் மூலம் சமூகச் சமநிலை குழப்பப்பட்டு, பெண்களை அதிகமாகக் கொண்ட ஒரு சமூகமாக தமிழ் மக்கள் மாறியுள்ளனர். இத்தகு மாற்றத்தைப் புரிந்து கொண்டு செயற்படுவது தான் எதிர்கால தமிழ்ச் சமூகத்தின் கட்டமைப்புக்கு உதவும்.
இந்த உள்நாட்டுப் போர் இதுவரை 50,000 இற்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்றொழித்துள்ளது. இதன்போது பெண்கள் தம் பிள்ளைகளை (பெரும்பாலும் ஆண்கள்), கணவனை இழந்துள்ளனர். (மட்டக்களப்பில் மட்டும் இன்று 10,000 விதவைகள் உள்ளனர்) அதேநேரம், மேற்கு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த சுமார் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமானோரில் இளைஞர்கள் பெரும்பான்மையினர். அப்போது கொழும்பு, இந்தியா எனப் புலம் பெயர்ந்தவர்களிலும் ஆண்களே அதிகம். ஆரம்பத்தில் போராளிகளாக இணைந்தவர்களிலும் ஆண்களே அநேகர். 2004 நவம்பர் 21 ஆம் திகதி வரை புலிகள் இயக்கத்தில் மட்டும் 13,992 பேர் இறந்துள்ளனர். அவசர காலச் சட்டத்தின் போது கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டவர்களில் (2002 இல் 18,000 பேர்) அநேகர் தமிழ் சமூக ஆண்களே. இவர்களில் திரும்பி வராதோர், வந்தும் மனநோயால் பாதிக்கப்பட்டோர், இன்றுவரை சிறைக்குள் இருப்போர் எனப் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். இத்தகு நிலைமையால் தமிழ் சமூகத்தில் ஆண் பெண் எண்ணிக்கையில் இயற்கை சமநிலை குலைந்துள்ளது. இதன்போது மரபு ரீதியான, இதுவரை இருந்து வந்த சமூகக் கட்டமைப்பில் பெருமாற்றம் நிகழ்ந்தது.

ஆணினுடைய பொருளாதாரப் பலம் சார்ந்த "குடும்பம்'' என்ற கண்ணோட்டம் சிதைந்தது. பொருளாதார ரீதியில் பெண்ணே குடும்பத்தைப் பாதுகாக்கும் நிலை உருவாகியது. இதனால் "பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தோன்றியுள்ளன.' தற்போது வடக்கு, கிழக்கு பகுதிகளில் 30,000 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலைமையானது, சமூக, பொருளாதார நெருக்கடிக்கும், ஆண் துணையற்ற ஒரு சமூகத் தனிமைக்கும் பெண்களை உள்ளாக்கியுள்ளது. இதனால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி தனியொரு பெண்ணுக்குரியதல்ல, தமிழ்ச் சமூகத்திற்குரியது.இதில் விதவைகள், கணவனைப் பிரிந்து வாழ்வோர் (வெளிநாட்டில் கணவன்), ஒத்துவராத திருமண முறிவு என்பவற்றை சமூக விளைவாக நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், வயது வந்தும் திருமணம் ஆகாத பெண்கள் விடயத்தில் சமூகப் பின்புலத்தைக் கவனிக்க மறந்து, அது ஒரு தனிப்பட்ட பெண்ணின் பிரச்சினையாகவும் அல்லது அந்தக் குடும்பத்தின் பிரச்சினையாகவும் எடுத்துக் கொள்கிறோம்.

பெண்கள் தம்மிலும் பார்க்க எல்லா விதத்திலும் உயர்வான துணையை நாடுவதால் தான் திருமண வாய்ப்புகள் இழக்கப்படுகின்றன என்பதும், பெண் தன் தேர்வை அதிகரித்துள்ளாள் என்பதும் (பெற்றோர் பேசி வந்தாலும் அதை நிராகரித்து தன் விருப்பை முன்வைத்தல்) குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்படுகின்றன. என்னதான் உயர்கல்வி வாய்ப்பை அதிக பெண்கள் பெற்றிருந்தாலும் உயர் பதவிகளுக்குச் செல்லும் பெண்கள் மிகமிகக் குறைவே.திருமண பந்தத்துக்குள் தம்மை இணைக்க வேண்டிய கட்டாய வயது வந்து விட்ட நிலையில், உயர் பதவிகள் பற்றியோ அல்லது உயர் பதவிகளில் தொடர்ந்து நீடித்தல் பற்றியோ அவர்களால் சிந்திக்க முடிவதில்லை. (பல உயர் பதவிகளைத் துறந்து, திருமணத்திற்காக வெளிநாடு சென்றவர்கள் பலர் உள்ளனர்.) இந்த தமிழ்ச் சமூகக் கட்டமைப்பில் 'திருமணம்' வாழ்வதன் அர்த்தமாகியுள்ளது. அதாவது, பெண்ணை நோக்கிய 'வாழ வைத்தல்', 'வாழ்வு கொடுத்தல்' என்பன எல்லாம் திருமண உறவைக் குறிப்பன. எனவே, வயதாகியும் திருமணம் ஆகாத பெண்கள் 'வாழாத' பெண்கள் என்ற கருத்தமைவே உள்ளது. இதனால் அப்பெண்களின் இயங்கு நிலை ஒரு வளர்ச்சி நோக்கிப் போவது தடைப்படுகிறது. ஏற்கனவே தமிழ்ச் சமூகத்தில் இருக்கின்ற மரபார்ந்த சிந்தனைகள் (பெண்ணைத் திருமண பந்தத்துக்குள் தான் முழுமையாக்குகின்றது.) "யாரையாவது கட்டித் தொலைச்சால் நிம்மதி" என்ற அளவுக்குக் கொண்டு வந்துள்ளன.

இந்த நிலைமைகள் அதிக பெண்கள் தொகையைக் கொண்டுள்ள தமிழ்ச் சமூகம் மீள் கட்டமைக்கப்படவேண்டிய கட்டாயங்களைச் சிந்திக்கத் தூண்டுகின்றன.இன்று யாழ். சமூகத்தில் திருமணம் ஒரு சமூக நிர்ப்பந்தமாக இருக்கிறதேயொழிய, பெண் தன் விருப்புடனான துணையைத் தானே தேர்வு செய்வதோ, பாலுறவு நாட்டங்களுக்கான பாதுகாப்பான துணை தேடலோ இல்லை. இவற்றையெல்லாம் மீறி குலைந்து போயுள்ள இயற்கை சமநிலை பற்றிய எண்ணங்களும் இல்லாமலே உள்ளது. இந்த நிலையில் யாழ். சமூகத்தில் திருமணம் ஆகாத பெண்களின் நிலையை ஆய்வு செய்ய முயன்ற போது முதலில் கவனத்தை ஈர்த்தவை திருமண விளம்பரங்கள்.

இன்றும் சாதி, வர்க்கம், சாதகம் என்பன மிக நுணுக்கமாகவே பார்க்கப்படுகின்றன என்பதற்கு அவை சான்று. அத்துடன், திருமண பொருத்துநராக பத்து வருடங்களுக்கு மேல் சேவையாற்றி வரும் வேல். அமுதன் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில்;"தற்போது சராசரியாக மூன்று ஆண்கள் பெண் கேட்டு விண்ணப்பிக்கும் அதேநேரம், ஏழு பெண்கள் மாப்பிள்ளை கேட்டு விண்ணப்பிக்கும் நிலை உள்ளது. அதேநேரம், தற்போது வயதாகியும் திருமணம் செய்ய முடியாத நிலை பல பெண்களுக்குத் தோன்றியுள்ளது.போரினால் பெண்களின் திருமணக் காலம் தள்ளிப்போனதும், பின்னர் மாப்பிள்ளை தேடியபோது ஏற்ற வயதில் இல்லாமல் இருந்ததும் முக்கிய காரணங்கள். ஆனாலும் இன்று இருக்கக் கூடிய வயது கூடிய ஆண்கள் கூட, தமக்கு 30 வயதுக்குள் தான் பெண் கேட்கிறார்கள். பலர் 5 வயது வித்தியசத்திற்குள் தான் திருமணம் செய்ய விரும்புகிறார்கள். (பெண்ணுக்குத் தன்னிலும் விட 5 வயது குறைவாக.) அத்துடன் சாதி,சீதனம், சாதகம் இவற்றில் மிக இறுக்கமாகவே இன்றும் யாழ். சமூகம் உள்ளது. நல்ல வரன்கள் பொருத்தமாக வந்தாலும் யாரோ ஒரு உறவினர் வேறு சாதியில் செய்திருக்கிறார் என்பதற்காக அதை நிராகரித்தவர்களும் உள்ளனர். சீதனத்தைப் பொறுத்த வரை, பிரச்சினையான காலகட்டங்களில், கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் 'வீடு' கேட்டவர்கள் தற்போது சமாதான காலத்தில் யாழ்ப்பாணத்தில் என்றாலும் பரவாயில்லை என்ற நிலைக்கும் வந்திருக்கின்றனர். இது எவ்வளவு காலத்திற்கோ தெரியாது. வெளிநாடுகளில் உள்ளவர்கள் சீதனம் கேட்பதைவிட, உள்நாட்டில் இருப்பவர்கள்தான் இதில் மும்முரமாக இருக்கின்றனர்.''

இத்தகைய கருத்துகளை கல்யாண மாலை திருமண சேவை நடத்தி வருபவரும் குறிப்பிட்டுக் கூறினார். இதேவேளை, ஆசிரியத் தொழிலை மிக அதிகமாகக் கொண்ட பெண்கள் இருக்கின்ற யாழ். குடாநாட்டில் வடமராட்சி உதவிக் கல்விப் பணிப்பாளர் கோகிலா மகேந்திரனிடம், திருமண வயது வந்தும் திருமணம் ஆகாத பெண்கள் பற்றிக் கேட்டபோது

"அவர்கள் மிகச்சிறந்த அர்ப்பணிப்பு நோக்குள்ள ஆசிரியர்களாகவும் உளவியல் ஆலோசனை வழங்கும் நபர்களாகவும் இயங்கிவருகின்றனர். வெளிநாட்டு திருமணங்களில் தெரிந்த பல நண்பிகளுக்கு ஏற்பட்ட அவலங்களினால் அதை வெறுக்கின்றனர். உள்நாட்டிலும் ஓரளவுக்கு சம அந்தஸ்து உள்ள அல்லது அதற்கு மேலான ஆண்கள்தான் துணையாக வரவேண்டும் என விரும்புகின்றனர். ஏனெனில், இது ஒரு ஆணாதிக்க சமூகம். இங்கே ஆண் அதிகாரத்தில் குடும்பம் இயங்குவது மரபு. அப்படி இருக்கும்போது கல்வியில், வேலையில் குறைந்த ஆணை மணம் முடித்தால் குறைந்த பட்சம், கருத்துகளைப் பரிமாறக்கூட முடியாதிருக்கும். அப்படி பெண் கருத்துக்கூற முற்படும்போது அந்த ஆண் தான் ஆதிகாரம் செலுத்த முடியவில்லையே என்ற தாழ்வுச்சிக்கலுக்குட்பட்டு பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருப்பான் என்பது அவர்கள் கருத்து. ஆனாலும் சிலர் இப்படித் திருமணங்கள் செய்து சந்தோஷமாகவும் வாழ்கின்றனர் என்பதும் மறுப்பதற்கில்லை. உளரீதியாக சில தாக்கங்கள் திருமணம் ஆகாத பெண்களுக்கு இருந்தாலும், அவர்கள் செய்யும் வேலையில் தம்மை முழுவதுமாக இணைத்துக் கொள்வதால் நல்ல பெறுபேறும், திருப்தியும் காண முடிகிறது என்றும் தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் அறிக்கையின்படி, இன்று வடக்கு மாகாணத்தில் மட்டும் இருக்கக் கூடிய மொத்த ஆசிரியர் தொகை 8,975. இதில் 6,033 பேர் பெண்களே. யாழ்ப்பாணத்தில் மட்டும் 5,297 பேர் ஆசிரியராகவுள்ளனர். அதில் 3,547 பேர் பெண்களே. இதிலும் யாழ். கல்வி வலயத் தகவலின்படி, (2004)திருமணம் ஆகாத 520 பெண் ஆசிரியர்களும் 168 ஆண் ஆசிரியர்களும் உள்ளனர்.

இந்த நிலையில், பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் பொறுப்பாளர் சரோஜினி சிவச்சந்திரன் இதுபற்றித் தெரிவிக்கும்போது;"போரின் விளைவால் மனச் சிதைவுக்கு பெண்கள் அதிகம் ஆளாகின்றனர் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. மிக ஆளுமையாகப் பெண்களால் இயங்க முடியும். அப்படித்தான் பலர் உள்ளனர். ஏற்கனவே உள்ள மரபார்ந்த சமூகக் கண்ணோட்டத்துடன் பெண்களைப் பார்க்க வேண்டிய தேவை இப்போதில்லை. எவ்வளவோ பிரச்சினைகளை இந்தப் பெண்கள் சந்தித்துள்ளனர். அவை பெண்களை ஆளுமை உள்ளவர்களாகத்தான் உருவாக்கியுள்ளனவேயொழிய, இருந்ததைவிட இன்னும் பலவீனமானவர்களாக்கவில்லை" என்று கூறினார்.

இவர்களது கருத்துகளில் இருந்து பார்க்கின்றபோது யாழ். சமூகம் மூடுண்ட இறுக்கமான நிலையில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியாத நிலையில் திடீர் மாற்றங்களை உள்வாங்க முடியாமலும், நிராகரிக்க முடியாமலும் பலவீனப்படுகிறதோ என ஐயுறவேண்டியுள்ளது.

இந்த சமூகம், அந்தஸ்துக் கருதி, திருமணம் ஆகாத பெண்களைப் பொருந்தாத மணத்தில் நிர்ப்பந்தமாக இறக்குவதிலும், பலவீனமான பெண்களாக அவர்களை உருவாக்குவதிலும் தனது கவனத்தைச் செலுத்தாது ஆக்கத்திற்கு, அபிவிருத்திக்கு பயன்படுத்தும் மாபெரும் சக்திகளாக இவர்களை இயங்கவைப்பதில் கவனம் செலுத்தவேண்டும். அத்துடன், இதனால் எதிர்கால தமிழ்சமூகத்தின் சனத்தொகையில் மிகப்பெரும் வீழ்ச்சி ஏற்படுவதும் தவிர்க்க முடியாததாகிறது. 2004 இல் நடந்திருக்கும் கடல்கோள் நிகழ்வுகூட ஆயிரக் கணக்கில் எம்மக்களை அடுத்த சந்ததிகளை ஒரேயடியாக அழித்துள்ளது.இந்தநிலையில் பெண்களின் பெறுமதிசார்ந்த வாழ்வுக்கும் தமிழ் சமூகத்தின் ஆரோக்கியத்திற்கும் கலாசர மீழ்கட்டுமானம் அவசியமாகிறது.சிந்தனைகளில் இதுதேவை.
.

Tuesday, October 24, 2006

கலைவண்ணம் பட்டரில்...கண்டி ரொப்பாஷ் உல்லாச விடுதியிலிருந்து...

Friday, October 13, 2006

தொடர்பூடகங்களும் பெண்களும்

ஊடகங்கள் சமூகத்தில் கருத்து நிலையை உருவாக்குவதிலும் பிரதிபலிப்பதிலும் பரப்புவதிலும் மிக முக்கிய பங்கு வகிப்பன. எனவே இந்த ஊடகங்கள் பெண்கள் பற்றிய விடயங்களை கையாளும் முறைமை சமூக முக்கியத்துவம் வாய்ந்தது. அனேகமாக பிரதான ஊடகங்கள் ஆண்களை மையமாக வைத்தே தகவல்களை வெளியிட்டு வருபவை. அதாவது அந்த ஊடகங்களுக்கான வாடிக்கையாளர்கள் (கேட்பவர்கள், பார்ப்பவர்கள், வாசிப்பவர்கள்) ஆண்களே என்ற கருத்தாக்கம் தான் முதன்மையானதாக இருக்கிறது. ஒரு தினப் பத்திரிக்கையை எத்தனை பெண்கள் வாசிக்கிறார்கள் ? அதிலும் அவர்கள் வாசிப்பது என்ன? ஞாயிறு பத்திரிகையில் பெண்கள் வாசிப்பது என்ன இவையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்.
பத்திரிகையாயின் பெண்களுக்கு ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்தப் பக்கத்தில் பெண்கள் பற்றிய விடயங்கள், பெண்களுக்கான விடயங்கள், குடும்ப தளத்தில் இருந்து கட்டமைக்கப்பட்டிருக்கும். குழந்தை, சமையல், அழகு முக்கியமானவையாக இருக்கும். அத்துடன் பெண்களுக்கான ஒழுக்கம் கணவனை, உறவினர்களை, வயோதிபர்களை கவனித்தல், பராமரித்தல் பற்றிய விடயங்களும் கொடுக்கப்படும். இவை பெண்களுக்கு.
அடுத்து பெண்பற்றிய விடயங்களை, உதாரணமாக சினிமாவில், சினிமாவை பத்திரிகையில் கொண்டுவரல் இவற்றில் பெண்களை காட்சிப்படுத்தல் ஆண்களை வாசகர்களாக, பார்வையாளர்களாக வரித்துக் கொண்டதன் விளைவு. அது இன்றுவரை தொடர்வதுதான் அபத்தம். பெரிய திரை ஆண்களுக்கு, சின்னத்திரை (வீட்டுக்குள்) பெண்களுக்கு. இத்தகு பிரிப்பைத்தான் சகல ஊடகங்களும் கருத்தியல் ரீதியாக செய்கின்றன. இதனால், ஆண் பெண் நோக்கு, தேவை வேறு வேறாகி அவர்கள் இரு துருவங்களாக வளர்த்தெடுக்கப் படுகின்றார்கள். ஆனால் இவர்கள் ஒன்றாக ஒரே கூரையின் கீழ் வாழவேண்டியவர்கள். இன்னும் சொல்லப்போனால், ஆணுக்கு உலகமே வீடாகவும், பெண்களுக்கு வீடே உலகமாகவும் இவர்களை வளர்த்தெடுக்கும் பணியை நன்றாகவே தொடர்பூடகங்கள் செய்துவருகின்றன. இதை நாம் விளங்கிக் கொண்டால்தான், தொடர்பூடகங்களில் கொண்டுவரக் கூடிய மாற்றங்கள் பற்றியும் மரபில் சேர்க்க வேண்டிய விடயங்கள் பற்றியும் தெளிய முடியும்.
தொடர்பூடகங்கள் பெண்களை எப்படி கருத்துருவாக்கம் செய்கின்றன என்பதை ஆழமான புரிதலுடன் விளங்கிக் கொள்கின்ற போது, பெண்களின் முழு ஆளுமையும் குடும்பவட்டத்திற்குள் கட்டமைக்கப்படுவது புரியும். அது கூட எதிர்மறையாக இருப்பது தான் இன்று பெரிய சவால்.

அதாவது எம்மில் 70% ஆன பெண்கள் சமூகத்தில் தொழிற் துறைகளில் இறங்கியுள்ள நிலையில் குடும்பம் சார்ந்த கருத்துகள் இரட்டைச் சுமையை ஏற்படுத்துகின்றதேயொழிய, நடந்த மாற்றங்களுக்கு அமைய அவை கட்டமைக்கப்படவில்லை.
தாரணமாக, சமையலை இலகு படுத்த இரவில் காய்கறி வெட்டுதல், பாத்திரம் கழுவுதல் போன்ற வேலைகளைச் செய்து வையுங்கள் என்ற தகவல் பெண்களுக்காக தரப்படும்..அலுவலகம் சென்று வரும் பெண் (இன்று அனேகர் அப்படியானவர்கள்) ஐந்து மணிக்குப் பின் வீட்டுக்கு வந்து வீட்டு வேலைகள், சிலருக்கு தன்னார்வ விருப்புகள், (வாசித்தல், ரீ.வி. பார்த்தல், எழுதுதல்) குடும்பத்தினருடன் உரையாடல் எல்லாம் முடித்து படுக்க பத்து மணிக்கு மேலாகின்றபோது அடுத்த நாள் சமையலுக்கு தயார் படுத்த முடியுமா? இந்த விடயங்களை பிள்ளைகளுடன் கணவருடன் பங்கீடு செய்வது பற்றி யாரும் பேசுவதில்லை. இந்த நிலை, ஒட்டுமொத்த குடும்பச்சுமையைப் பெண் ஏற்றுக் கொள்ளவைக்கப்படுவதால் அவள் சிந்தனையும் விரிவுபட வழியில்லை. இதனால், விரைவில் சலிப்படையும் பெண் பல பிரச்சினைகளையும் உருவாக்க காரணமாகிறாள்.இதனால் தான் பல வருடங்களுக்கு முன் பெண் எழுத்தாளர்கள் பற்றி குறிப்பிடும் போது அவர்கள் வெறும் கண்ணீர் இழுப்பிகள் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. (இன்று சின்னத்திரை நாடகங்கள் பெண்களை வைத்து அதைச் செய்வது வேறு விடயம்).
nஇந்த நிலையில் தொடர்பூடகங்களில் பெண்கள் ஆர்வம் கொண்டு அதில் தம்மை இணைத்துக் கொள்வது பல யதார்த்தங்களை வெளிக்கொணர உதவும். அதிலும் பெண் பற்றிய அக்கறை கொண்ட பெண்களால்தான் இது ஏற்பட முடியும். எப்படி ஆளுமையுள்ள பத்திரிகையாளர்களால் ஒரு சமூக கருத்தியலை கட்டமைக்க, மாற்றியமைக்க முடியுமோ அப்படித்தான் பெண்பற்றிய யதார்த்தங்களை உணர்ந்த பெண்ணால் தான் தொடர்பூடகங்களில் கருத்துகளை முன்வைக்க முடியும். நம்மில் பலர் நம் சமூக யதார்த்தத்தை எமது சிந்தனையில் எடுக்காமலே கதைபண்ணிக்கொண்டும், கவிதை வடித்துக்கொண்டும், ஏற்கனவே எழுதிய பழமொழிகளை தூசி தட்டிக் கொண்டும் இருக்கிறோம்.
பெண்ணுக்குரிய பிரச்சினைகளை குடும்பமட்டத்தில் மட்டுமே வைத்துப்பார்த்து தீர்ப்பிடும் நிலையைத்தான் நாம் கொண்டியங்குகிறோம். இன்று நம் சமூகப் பெண்கள் சமூக தளத்திற்கு இழுத்து வரப்பட்டிருக்கிறார்கள். போர் தந்த மாற்றம் இது. இப்போது அதுதான் வாழ்வாகிவிட்டது. இந்த நிலையில் குடும்பத்தை மட்டும் பிரதானமாகக் கொண்டு பெண் இப்படி இருக்கவேண்டும் இது இது செய்ய வேண்டும் என்று கூறி ஒரு கருத்துரு வாக்கத்தை மேற்கொள்வது முரணானது. சாதாரணமா "அழகு' பற்றி கூறும் நாம் இன்று எமக்குத் தேவைப்படும் உடல் உறுதி, உடல் உற்சாகம் பற்றி கதைக்கிறோமா? அதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை முக்கியப் படுத்துகிறோமா? முடி நீளமும் முக அழகும் எந்தக் கருத்தாக்கத்தில் எமக்குத் தேவை? இந்தக் கேள்விகளை நாம் கேட்டுப் பார்க்க வேண்டும்.

எனவே ஒரு சின்ன விடயமானாலும் அது இன்றைய யாதார்த்த பெண்ணுக்கு ஏற்புடையது தானா? என்ற சிந்தனை வேண்டும். அத்துடன் கீழ்மைப்படுத்தல், பலவீனப்படுத்தல் எந்தவிதத்திலும் பெண்ணின் இயற்கையான விடயம் என்ற தொனி இல்லாதவாறு கருத்துருவாக்கம் செய்தல் முக்கியமானது. பத்துப்பேரை ஒன்றாக அடிக்க முடியும் என்று திரைப்படத்தில் ஆணை கதாநாயகனாக காட்ட முடிந்திருக்கிறது. ஆனாலும் பலம் பொருந்தியவனாக ஆகமுடியும் என்ற நம்பிக்கை எவ்வளவு தூரம் பதிந்திருக்கிறது! இல்லாத ஒன்றையே நடக்க முடியாத ஒன்றையே இவ்வளவு தூரம் காட்டமுடியும் என்றால், யதார்த்தத்தை, உண்மை விடயங்களை எமது வாழ்வாதாரங்களை ஏன் காட்டமுடியாது? ஏன் வெளிக்கொணர முடியாது?
வெளியில் இருந்து ஏதோ ஒருவகையில் தொடர்பூடகங்களுடன் தொடர்பு கொள்ளும் பெண்களின் சிந்தனைக்காக மேற்கூறிய விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
அடுத்த விடயம் ஊடகங்களில் பணிபுரிவது!
இது ஒரு பெரிய சவால் தான்.
மூன்றாம் உலக நாடுகளிலேயே முதல்முதல் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய நாடு, முதல் பெண் பிரதமரைக் கொண்ட நாடு என்ற பெருமையை வைத்திருக்கிறோம் நாம். பெண்கள் அதிலும் தமிழ் பெண்கள், சமூகத்தில் பொதுமக்களுடன் தொடர்பு கொள்வதென்பது பெரிய விசயம். பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் விடயத்தில் ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களில் ஜி.ஜி.யால் சொல்லப்பட்ட ஒரு விடயம். "ஆங்கிலேயரின் நாகரிகத்திற்கு ஆட்பட்டு எமது குடும்பப் பெண்களை "பொது மகளிர் ஆக்கப்பார்க்கிறார்கள்" என்பது. இப்படி சமூக சிந்தனையை பெண்கள் ஏற்படுத்திக் கொள்வதே பெரும் சிரமமாக இருந்த வரலாற்றில் வந்த நாம், இன்று போராளிப் பெண்களைக் கொண்டியங்குகிறோம்; பெண் தலைமைத்துவ குடும்ப மரபைக் கொண்டிருக்கிறோம். ஆனால் தொடர்பூடகங்களில் பணிபுரிவதற்கு முடியாதிருக்கிறது.
தொலைக்காட்சிகளில் செய்தி வாசிக்க பெண் தேவை, கணீர் என்ற குரலில் நேயர்களைச் சொக்கவைக்க பெண் தேவை. பத்திரிகையை கவர்ச்சியாக்க பெண் தேவை; ஆனால், ஆழமான கருத்தியல்களை சமூக அபிவிருத்தி, அரசியல், பொருளாதாரம் பற்றிய அக்கறைகளை கொண்டு தொடர்பூடகங்களில் இயங்க பெண் "இல்லை"
ஏன்?
பெண்ணுக்குக் கொடுக்கப்படும் வாய்ப்புகள் இவை சார்ந்து பெண் ஆர்வப்படல் என்பன இல்லாமல் இருக்கின்றது. இதற்குக் காரணம் சமூகம் பெண்-தொடர்பூடகம் பற்றி வைத்திருக்கும் விழுமியங்கள். போருக்குள்ளால் புடம் போடப்பட்ட நாங்கள் எங்கள் பலத்தை சரியாக இனம் காணவில்லை. சமூகத்தளத்தில் எம்மால் ஆளுமையாக இயங்கமுடிகிற போது ஏன் தொடர்பூடகங்களில் அதை வெளிக்கொணர முடியாது? பெண் ஏமாற்றப்பட்ட செய்தி, பெண் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்ட செய்தி சுவாரஸ்யமான செய்திகளாக மட்டும் போடப்படும் நிலைதான் உள்ளது. இதுவே பெண்கள் ஊடகங்களுக்குள் வேலை செய்கின்றபோது, இயல்பாகவே அடுத்து என்ன நடந்தது, குற்றம் புரிந்த நபர் யார்? அவருக்கு கிடைத்த தண்டனை என்ன? அல்லது தண்டனை கிடைக்கவில்லையா? இது எல்லாம் செய்தியாகும். இதுவே அக்குற்றத்தை குறைப்பதற்குமான வழியுமாகும்
அபிவிருத்தி, மீள்குடியேற்றம் பற்றியெல்லாம் சிந்திக்கும் போது, பெண்ணைப் பற்றி யார் சிந்திக்கிறார்கள்? சமூக மறு உற்பத்தி பண்பைக் கொண்டுள்ள பெண், குடும்பங்களை பராமரிக்கும் பெண், சமூகத்தில் முக்கிய கடமைகளை நிறைவேற்றும் பெண் கவனிக்கப்படுவதில்லை. அவளது போசாக்குப் பற்றியோ, சுகாதாரம் பற்றியோ யாருக்கு அக்கறை? இது பற்றி பெண்களால்தான் கேள்வி எழுப்ப முடியும். பெண்கள் சமூகத்தின் முக்கிய பங்காளிகள் என்பது எல்லாவிதத்திலும் முன்னிலைப் படுத்தப்பட வேண்டும். பெண்களின் ஒவ்வொரு செயலும் ஆளுமை மிக்கதாக மிளிர வேண்டும். இதற்கு பெண் தான் தன்குடும்பம், தன்சமூகம், தன் நாடு ஆகியவற்றில் கொண்டிருக்கக்கூடிய தொடர்பு முக்கியம். தொடர்பூடகங்களிலும் முடிவெடுக்கும் தகுதியைப் பெற்ற பெண்கள் இலங்கையில் இல்லை. அதிலும் தமிழ்ப் பெண்கள் அறவே இல்லை. பெரும்பாலும் ஊடகங்களில் வேலை செய்யும் பெண்கள் அலுவலகத்தினுள்ளே வேலை செய்பவர்களாகவே உள்ளனர். இன்றைய எமது ஊடகத்துறைகூட குறிப்பாக தமிழ் ஊடகத்துறை பெரியளவில் வளர்ச்சியடைந்ததாக இல்லை. ஒரு விவரணக் கட்டுரை எழுதுவதற்கான தகவலை திரட்ட வெளியில் சென்று வருதல், புலனாய்வு கட்டுரைக்கான தகவல் சேகரிப்பு என்பவற்றைக் கூட நாம் செய்ய முடிவதில்லை. ஆளணி பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பின்மை என்பன முக்கிய காரணங்களாகும். அத்துடன் தொடர்பூடகத்துறை கல்வியியல் ரீதியாக வளர்த்தெடுக்கப்படாததும் ஒரு குறைபாடு. இன்று அந்த வாய்ப்பு உள்ளது. அதில் பெண்களையும் உள்வாங்கி பயிற்சி அளித்தால் நம்பிக்கை தரக்கூடிய யதார்த்த சமூகத்தை கட்டியெழுப்பலாம். எல்லாவற்றுக்கும் மேலாக ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு ஓரளவுக்காவது அந்தந்த நிறுவனங்களிலாவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஊடகத் தொழில் என்பது எனக்குப் பிடித்ததையும் உங்களில் ஒருவருக்கு பிடித்ததையும் எழுதுவதல்ல.சமூக யதார்த்தத்தில் இருந்து பல்வேறு கோணங்களிலும் பிரச்சினைகள் அணுகப்பட்டு ஆழமான சிந்தனையில் வளமான சமூகத்தை எதிர்பார்த்து கட்டமைக்கப்படுவது, அல்லது முன்வைக்கப்படுவது.இதில் சமூகத்தில் சரிபாதிக்கும் மேலிருக்கும் பெண்களும் பங்கெடுத்துக் கொள்வது ஒரு சமநிலைச் சமூகத்தை உருவாக்க, பிரச்சினைகளை தெளிவாக அணுக வழிகோலும்.உலகெங்கும் இன்று பெண்கள் தொடர்பூடகங்களில் மிகுந்த தாக்கம் மிக்கவர்களாக இயங்குகிறார்கள். அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பெண் ஊடகவியலாளர்கள் 40 வீதத்தினர் உள்ளனர். போர் காவு கொண்ட எம் சமூகத்திலும் பெண்கள் அரிய பல பணிகளை ஆற்றி வருகின்றனர். ஆனால், அவை சரியாக இனம் காணப்பட்டு வளர்த்தெடுக்கப்படவில்லை. இவற்றை செய்யக்கூடியவர்கள் பெண்கள் தான் அதிலும் சமூகம், பெண் பற்றிய சிந்தனைகளைக் கொண்டவர்கள். அவர்களை ஊடகங்கள் வரவேற்கவேண்டும்.
அத்துடன் சமூகத்தளங்களில் அகலக்கால் வைத்திருக்கும் நம் பெண்கள் தம் சிந்தனையிலும் சமூக தளத்திலிருந்தும் தம் இயங்கியலுக்கான மரபுகளைக் கட்டியெழுப்பவேண்டும். அதற்கு இந்த உணர்வு உள்ள பெண்கள், ஊடகங்களில் உள்வாங்கப்படவேண்டும் அல்லது உள்வாங்கப்பட்ட பெண்கள் இத்தகு சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.