Thursday, May 30, 2019

‘மனவானின் மழைத்துளிகள்'

கவிஞர் வேலணையூர் இ.சுரேசின் மனவானின் மழைத்துளிகள் என்ற 
கவிதைத்தொகுதியின் (கொழும்பில் )வெளியீட்டில்.....

‘மனவானின் மழைத்துளிகள்’ உங்கள் மீது படுவதற்கு நான் எதையாவது செய்யவேண்டும். என்னிடம் கேட்டுக்கொண்டார்கள்.
நன்றி.

எதையாவது அறிமுகம் செய்யவேண்டும் என்றால், அறிமுகம் செய்பவருக்கு அதைப்பற்றி தெரிந்திருக்கவேண்டும்.
எனக்கு ஆசிரியரைத் தெரியாது.
அவரது நூலைத் தெரியாது.
ஆனால் கொஞ்சம் கவிதை பற்றித் தெரியும் என்று நான் நினைக்கிறன்.

‘மனவானின் மழைத்துளிகள்’! நல்ல குளிர்மையான தலைப்பு! ஆழகான காட்சி!
ஆனால் வெப்பிசாரம் என்ற வார்த்தை ஒன்று உண்டு. இந்த மனவானின் வெப்பிசாரம் மழைத்துளிகளாகத்தான் இருக்கும் என்று நாம் நினைக்கமுடியாது. இடி மின்னலுடன் கூடிய சோவெனப் பெய்யும் பெருமழை இது.!

கவிதை என்பது சொற்களையும் தாண்டி மனத்துள் நிகழ்த்தும் உணர்ச்சி. அந்த உணர்ச்சியை வாசிப்போருக்கு தொற்றவைக்க வேண்டுமென்றால் தேர்ந்தெடுத்த சொற்கள் முக்கியம். அந்த சொற்களைத் தேர்தெடுப்பதில்தான் அது ஆழமான கவிதையாகவும் ஆழமற்ற கவிதையாகவும் பார்க்கப்படுகிறது. ஒரு சொல் சொல்லும் கருத்தும் உணர்த்தும் கருத்தும் இலகுவில் எல்லோரையும் சென்றடைவதில்லை.

தனது உணர்வை வார்த்தைகளால் வடிக்கும் கவிஞர் உள்மனயாத்திரை செய்கிறார்;. அதன்போது அவருக்கு சொற்கள் வாய்க்கிறது. யார் உள்மனயாத்திரை செல்கிறாரோ அவர் கவிதை வடிக்கிறார். அதனால்தான் காதல் வந்தால் கவிதை வரும் என்றார்கள். காதல் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான உணர்வு. அந்த உணர்வுக்கு சொற்களைக் கண்டுபிடிக்க உள்மன யாத்திரை செல்லவேண்டும். தன்னுணர்வில் சஞ்சரிக்கும் அவர் அதை வெளிப்படுத்த சொற்களைத் தேடித்தேடி சேர்ப்பார். அவர் எழுதும் சொற்கோர்வை கவிதையாகிறது. இதுதான் காதல் வந்தால் கவிதை வரும் என்ற தத்துவம் என நான்புரிந்துகொள்கிறேன்.

இந்தக்கட்டத்தைக் கடந்து உள்மன யாத்திரையினூடாக வாழ்க்கையை சூழலை வியாக்கியானம் செய்வதும், மனித இருப்புக்கு அர்த்தம் கற்பிக்கும் விடயங்கள்மீதான நம்பிக்கையின்மையும், முன்பு செப்பனிட்ட பாதைகளை மீண்டும் தேடும் ஆதங்கமும் என விரிகிறது கவிதை. மனவானின் மழைத்துளிகளும் அவ்வாறுதான் நீள்கிறது.

எம் குடைகளை அகற்றி இந்தத் தூறலில் இதம்காணவும் சுகம்காணவும் முடியும். ஆனாலும் இடியும் மின்னலும் இருக்கும் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

இன்றைய நவீனயுகத்தில் எந்தத்தடையும் அற்ற படைப்புவெளியில் எல்லோர் குரலும் ஒலிக்கிறது. ஒன்றின் மீதான பார்வைக்கோணம் 360 பாகைகளில் எல்லோருக்கும் பார்க்கமுடிகிறது. நவீன ஊடகங்களில் சமூக ஊடகங்களில் அதற்கான இடம் உண்டு.

நாம் எடுத்துக்கொண்ட பேசுபொருள் நாம் நினைப்பதுபோல் மட்டும் கட்டமைத்துவிடமுடியாது. 360 பாகைக் கோணங்களும் எமக்குத் தெரிகிறதென்றால் நாம் கட்டமைக்கப்போகும் கருத்து எந்த ஆழத்தில் இருக்கவேண்டும்! அதற்கும் இந்த தூறல் இடம்கொடுக்கிறது. ‘பாவம் பிரமன்’ இதற்கு ஒரு உதாரணமாகச்சொல்லமுடியும். ஆனாலும் அந்தக்கருத்துகளில் எனக்கு மாற்றுக்கருத்துண்டு பெண் என்ற வகையில்.

நூல்களை நாம் ஏன் வாசிக்கவேண்டும்?
நமது வாசிப்பின் குறிக்கோள்தான் அதை தீர்மானிக்கவேண்டும்.
பொதுவாக கவிதை இரசனைக்குரியதுதான். அந்த ரசனைக்குப் பின்னால் பெரும் கருத்துக்கிளர்ச்சியை ஏற்படுத்துவதும் கவிதைதான். குவிதையை வாசிக்க கற்பனை வேண்டுமென்பர். ஏனெனில் சொல் புரியவைக்கும் அர்த்தத்தைவிட அதற்கு அப்பால் உள்ளதை புரிந்து உணர்ந்துகொள்ள கொஞ்ச கற்பனை வேண்டும். இந்த மழைத்துளிகளுக்கு அது பெருமளவு தேவைப்படாது. அது வெளிப்படைத்தன்மையான பளிங்கு கற்களாய் உள்ளது. எல்லாம் பட்டவர்ததனமாக வெளித்தெரிகிறது.படித்துப்பாருங்கள்.

புதுக்கவிதையின் தன்மையான, ‘தீவிரத்தன்மைக்கு இடம்கொடுத்தல்’ என்பது பாரதியார் ஆரம்பித்தது. அந்த அந்த காலத்தில் இருக்கக்  கூடிய நடைமுறைகள் மீதான எதிர்ப்புக் குரல்கள் எள்ளி நகையாடுதல் என்பன மின்னலும் இடியுமாக இங்கிருக்கிறது என இந்த மழைத்துளிகளை பெருவெள்ளமாக உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

அறிமுகம் செய்யும் போது ஒருவருக்கு தெரிந்ததை வைத்துதான் அதைப் பிரபல்யப்படுத்தமுடியும். ‘பிரபல்யம்’ என்ற வார்த்தை வந்தவுடன் எனக்கு நினைவு வருவது இங்குள்ள ஒரு கவிதை 'ஊடக இலச்சணம்? ' (தோசையின்ர திறத்தில ஆட்டுக்கல்லுக்கு பூமாலையா ?எண்டு கேட்டதைப்போல் என்னை யாரோ கேட்பதுபோல் இருக்கிறது. பரவாயில்லை.)

ஆடுபவர்களைத் தெரியும் அளவுக்கு ஆள்பவர்களைத் தெரியவில்லையா என்பதுதான் கேள்வி. யர் ஆடுபவர்கள்? சினிமாவில், விளையாட்டில்...
ஆள்பவர்கள்? எழுத்தை ஆள்பவர்கள்.
ஊடகத்தின் அடிப்படை வியாபார தந்திரமே பிரபல்யமானவையும் வழமைக்ககு மாறானவையும் மக்களைக் கவரக் கூடியவை என்பதுதான். சினிமாக்காரரும் விளையாட்டுக்காரரும் எம் கண்முன்னே செயற்பாட்டாளர்களாக இருப்பது பலருக்கும் நன்கு தெரியும்.
எழுத்தாளர்களாயின் செயற்பாடு யாருடைய கண்ணுக்கும் தெரியாது மூளைக்குதான் தெரியும். எனவே இந்த வெகுஜன கூட்டத்தினருக்கு கண்ணில் பட்டு பிரபலம் அடைந்தவர்களைத்தான் கொடுக்கமுடியும். மூளைப் பிரபலங்கள் வெகுஜன திரளாவது கடினம். இதுதான் எனது புரிதல். ஆனால் இந்த மூளைச் செயற்பாட்டாளர்களால்தான் உலகம் வடிவமைக்கப்படுகிறது. இந்த உண்மையையும் நாம் மறந்துவிடக்கூடாது.

இந்த நவீன யுகத்தில் ஊடகப்பெருவெளியில் உலாவுங்கள். கண்ணுக்குத் தெரிவதைவிட மூளைக்குத் தெரிவது பிரபலமாகும். எமது மூளையை நாம் பிரபலமாக்கவேண்டுமென்றால் 360 பாகைக் கருத்துக் கோணங்களில் இருந்து புதிய கருத்துருவாக்கத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும். அதை இந்த இடிமழை ஒரு தூறலாய் செய்கிறது.