Thursday, November 16, 2006

பெண்களை அதிகமாக கொண்ட சமூகமாக தமிழ்ச்சமூகம்


போரில் ஒரு பெண் பாதிப்படைகின்ற போது, அதில் அவள் மட்டுமல்ல, அந்தக் குடும்பம், உறவுகள் சார்ந்த குடும்பங்கள், கிராமம், சமூகம் என்று அது பல தளங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்குக் காரணம், மறு உற்பத்தித் திறன் அவளிடம் இருப்பதேயாகும். ஒரு சமூக உற்பத்தி அவளூடாகத்தான் நிகழ்கிறது. இந்த நிலையில், சர்வதே மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஐரீன் கான்;"பெண்கள் ஒரு சமூகத்தின் கௌரவத்தை உருவகப்படுத்தி நிற்பவர்களாகவும் எதிரியின் இனப்பெருக்க இயந்திரமாகவும் நோக்கப்படுவதன் காரணத்தினாலேயே அவர்கள் போரின் போது பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; பாலியல் ரீதியிலான சித்திரவதைகளையும் அனுபவிக்க வேண்டியேற்படுகிறது' என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், "ஒரு குறித்த சமூகத்தின் ஆண்களை வலுவிழக்கச் செய்யும் இராணுவ ரீதியான தந்திரோபாயமே இது என்பதும் அவரது கருத்து. உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இத்தகு தந்திரோபாயங்கள் ஒருபுறம் இருக்க, நீண்டகாலத் தாக்கம் கொண்ட நிகழ்வு ஒன்று தமிழ்ச் சமூகத்தில் நடந்தேறியுள்ளது. அதாவது, ஆண்களை அழித்து, பெண்களிடம் இருந்து பிரித்ததன் மூலம் சமூகச் சமநிலை குழப்பப்பட்டு, பெண்களை அதிகமாகக் கொண்ட ஒரு சமூகமாக தமிழ் மக்கள் மாறியுள்ளனர். இத்தகு மாற்றத்தைப் புரிந்து கொண்டு செயற்படுவது தான் எதிர்கால தமிழ்ச் சமூகத்தின் கட்டமைப்புக்கு உதவும்.
இந்த உள்நாட்டுப் போர் இதுவரை 50,000 இற்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்றொழித்துள்ளது. இதன்போது பெண்கள் தம் பிள்ளைகளை (பெரும்பாலும் ஆண்கள்), கணவனை இழந்துள்ளனர். (மட்டக்களப்பில் மட்டும் இன்று 10,000 விதவைகள் உள்ளனர்) அதேநேரம், மேற்கு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த சுமார் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமானோரில் இளைஞர்கள் பெரும்பான்மையினர். அப்போது கொழும்பு, இந்தியா எனப் புலம் பெயர்ந்தவர்களிலும் ஆண்களே அதிகம். ஆரம்பத்தில் போராளிகளாக இணைந்தவர்களிலும் ஆண்களே அநேகர். 2004 நவம்பர் 21 ஆம் திகதி வரை புலிகள் இயக்கத்தில் மட்டும் 13,992 பேர் இறந்துள்ளனர். அவசர காலச் சட்டத்தின் போது கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டவர்களில் (2002 இல் 18,000 பேர்) அநேகர் தமிழ் சமூக ஆண்களே. இவர்களில் திரும்பி வராதோர், வந்தும் மனநோயால் பாதிக்கப்பட்டோர், இன்றுவரை சிறைக்குள் இருப்போர் எனப் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். இத்தகு நிலைமையால் தமிழ் சமூகத்தில் ஆண் பெண் எண்ணிக்கையில் இயற்கை சமநிலை குலைந்துள்ளது. இதன்போது மரபு ரீதியான, இதுவரை இருந்து வந்த சமூகக் கட்டமைப்பில் பெருமாற்றம் நிகழ்ந்தது.

ஆணினுடைய பொருளாதாரப் பலம் சார்ந்த "குடும்பம்'' என்ற கண்ணோட்டம் சிதைந்தது. பொருளாதார ரீதியில் பெண்ணே குடும்பத்தைப் பாதுகாக்கும் நிலை உருவாகியது. இதனால் "பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தோன்றியுள்ளன.' தற்போது வடக்கு, கிழக்கு பகுதிகளில் 30,000 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலைமையானது, சமூக, பொருளாதார நெருக்கடிக்கும், ஆண் துணையற்ற ஒரு சமூகத் தனிமைக்கும் பெண்களை உள்ளாக்கியுள்ளது. இதனால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி தனியொரு பெண்ணுக்குரியதல்ல, தமிழ்ச் சமூகத்திற்குரியது.இதில் விதவைகள், கணவனைப் பிரிந்து வாழ்வோர் (வெளிநாட்டில் கணவன்), ஒத்துவராத திருமண முறிவு என்பவற்றை சமூக விளைவாக நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், வயது வந்தும் திருமணம் ஆகாத பெண்கள் விடயத்தில் சமூகப் பின்புலத்தைக் கவனிக்க மறந்து, அது ஒரு தனிப்பட்ட பெண்ணின் பிரச்சினையாகவும் அல்லது அந்தக் குடும்பத்தின் பிரச்சினையாகவும் எடுத்துக் கொள்கிறோம்.

பெண்கள் தம்மிலும் பார்க்க எல்லா விதத்திலும் உயர்வான துணையை நாடுவதால் தான் திருமண வாய்ப்புகள் இழக்கப்படுகின்றன என்பதும், பெண் தன் தேர்வை அதிகரித்துள்ளாள் என்பதும் (பெற்றோர் பேசி வந்தாலும் அதை நிராகரித்து தன் விருப்பை முன்வைத்தல்) குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்படுகின்றன. என்னதான் உயர்கல்வி வாய்ப்பை அதிக பெண்கள் பெற்றிருந்தாலும் உயர் பதவிகளுக்குச் செல்லும் பெண்கள் மிகமிகக் குறைவே.திருமண பந்தத்துக்குள் தம்மை இணைக்க வேண்டிய கட்டாய வயது வந்து விட்ட நிலையில், உயர் பதவிகள் பற்றியோ அல்லது உயர் பதவிகளில் தொடர்ந்து நீடித்தல் பற்றியோ அவர்களால் சிந்திக்க முடிவதில்லை. (பல உயர் பதவிகளைத் துறந்து, திருமணத்திற்காக வெளிநாடு சென்றவர்கள் பலர் உள்ளனர்.) இந்த தமிழ்ச் சமூகக் கட்டமைப்பில் 'திருமணம்' வாழ்வதன் அர்த்தமாகியுள்ளது. அதாவது, பெண்ணை நோக்கிய 'வாழ வைத்தல்', 'வாழ்வு கொடுத்தல்' என்பன எல்லாம் திருமண உறவைக் குறிப்பன. எனவே, வயதாகியும் திருமணம் ஆகாத பெண்கள் 'வாழாத' பெண்கள் என்ற கருத்தமைவே உள்ளது. இதனால் அப்பெண்களின் இயங்கு நிலை ஒரு வளர்ச்சி நோக்கிப் போவது தடைப்படுகிறது. ஏற்கனவே தமிழ்ச் சமூகத்தில் இருக்கின்ற மரபார்ந்த சிந்தனைகள் (பெண்ணைத் திருமண பந்தத்துக்குள் தான் முழுமையாக்குகின்றது.) "யாரையாவது கட்டித் தொலைச்சால் நிம்மதி" என்ற அளவுக்குக் கொண்டு வந்துள்ளன.

இந்த நிலைமைகள் அதிக பெண்கள் தொகையைக் கொண்டுள்ள தமிழ்ச் சமூகம் மீள் கட்டமைக்கப்படவேண்டிய கட்டாயங்களைச் சிந்திக்கத் தூண்டுகின்றன.இன்று யாழ். சமூகத்தில் திருமணம் ஒரு சமூக நிர்ப்பந்தமாக இருக்கிறதேயொழிய, பெண் தன் விருப்புடனான துணையைத் தானே தேர்வு செய்வதோ, பாலுறவு நாட்டங்களுக்கான பாதுகாப்பான துணை தேடலோ இல்லை. இவற்றையெல்லாம் மீறி குலைந்து போயுள்ள இயற்கை சமநிலை பற்றிய எண்ணங்களும் இல்லாமலே உள்ளது. இந்த நிலையில் யாழ். சமூகத்தில் திருமணம் ஆகாத பெண்களின் நிலையை ஆய்வு செய்ய முயன்ற போது முதலில் கவனத்தை ஈர்த்தவை திருமண விளம்பரங்கள்.

இன்றும் சாதி, வர்க்கம், சாதகம் என்பன மிக நுணுக்கமாகவே பார்க்கப்படுகின்றன என்பதற்கு அவை சான்று. அத்துடன், திருமண பொருத்துநராக பத்து வருடங்களுக்கு மேல் சேவையாற்றி வரும் வேல். அமுதன் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில்;"தற்போது சராசரியாக மூன்று ஆண்கள் பெண் கேட்டு விண்ணப்பிக்கும் அதேநேரம், ஏழு பெண்கள் மாப்பிள்ளை கேட்டு விண்ணப்பிக்கும் நிலை உள்ளது. அதேநேரம், தற்போது வயதாகியும் திருமணம் செய்ய முடியாத நிலை பல பெண்களுக்குத் தோன்றியுள்ளது.போரினால் பெண்களின் திருமணக் காலம் தள்ளிப்போனதும், பின்னர் மாப்பிள்ளை தேடியபோது ஏற்ற வயதில் இல்லாமல் இருந்ததும் முக்கிய காரணங்கள். ஆனாலும் இன்று இருக்கக் கூடிய வயது கூடிய ஆண்கள் கூட, தமக்கு 30 வயதுக்குள் தான் பெண் கேட்கிறார்கள். பலர் 5 வயது வித்தியசத்திற்குள் தான் திருமணம் செய்ய விரும்புகிறார்கள். (பெண்ணுக்குத் தன்னிலும் விட 5 வயது குறைவாக.) அத்துடன் சாதி,சீதனம், சாதகம் இவற்றில் மிக இறுக்கமாகவே இன்றும் யாழ். சமூகம் உள்ளது. நல்ல வரன்கள் பொருத்தமாக வந்தாலும் யாரோ ஒரு உறவினர் வேறு சாதியில் செய்திருக்கிறார் என்பதற்காக அதை நிராகரித்தவர்களும் உள்ளனர். சீதனத்தைப் பொறுத்த வரை, பிரச்சினையான காலகட்டங்களில், கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் 'வீடு' கேட்டவர்கள் தற்போது சமாதான காலத்தில் யாழ்ப்பாணத்தில் என்றாலும் பரவாயில்லை என்ற நிலைக்கும் வந்திருக்கின்றனர். இது எவ்வளவு காலத்திற்கோ தெரியாது. வெளிநாடுகளில் உள்ளவர்கள் சீதனம் கேட்பதைவிட, உள்நாட்டில் இருப்பவர்கள்தான் இதில் மும்முரமாக இருக்கின்றனர்.''

இத்தகைய கருத்துகளை கல்யாண மாலை திருமண சேவை நடத்தி வருபவரும் குறிப்பிட்டுக் கூறினார். இதேவேளை, ஆசிரியத் தொழிலை மிக அதிகமாகக் கொண்ட பெண்கள் இருக்கின்ற யாழ். குடாநாட்டில் வடமராட்சி உதவிக் கல்விப் பணிப்பாளர் கோகிலா மகேந்திரனிடம், திருமண வயது வந்தும் திருமணம் ஆகாத பெண்கள் பற்றிக் கேட்டபோது

"அவர்கள் மிகச்சிறந்த அர்ப்பணிப்பு நோக்குள்ள ஆசிரியர்களாகவும் உளவியல் ஆலோசனை வழங்கும் நபர்களாகவும் இயங்கிவருகின்றனர். வெளிநாட்டு திருமணங்களில் தெரிந்த பல நண்பிகளுக்கு ஏற்பட்ட அவலங்களினால் அதை வெறுக்கின்றனர். உள்நாட்டிலும் ஓரளவுக்கு சம அந்தஸ்து உள்ள அல்லது அதற்கு மேலான ஆண்கள்தான் துணையாக வரவேண்டும் என விரும்புகின்றனர். ஏனெனில், இது ஒரு ஆணாதிக்க சமூகம். இங்கே ஆண் அதிகாரத்தில் குடும்பம் இயங்குவது மரபு. அப்படி இருக்கும்போது கல்வியில், வேலையில் குறைந்த ஆணை மணம் முடித்தால் குறைந்த பட்சம், கருத்துகளைப் பரிமாறக்கூட முடியாதிருக்கும். அப்படி பெண் கருத்துக்கூற முற்படும்போது அந்த ஆண் தான் ஆதிகாரம் செலுத்த முடியவில்லையே என்ற தாழ்வுச்சிக்கலுக்குட்பட்டு பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருப்பான் என்பது அவர்கள் கருத்து. ஆனாலும் சிலர் இப்படித் திருமணங்கள் செய்து சந்தோஷமாகவும் வாழ்கின்றனர் என்பதும் மறுப்பதற்கில்லை. உளரீதியாக சில தாக்கங்கள் திருமணம் ஆகாத பெண்களுக்கு இருந்தாலும், அவர்கள் செய்யும் வேலையில் தம்மை முழுவதுமாக இணைத்துக் கொள்வதால் நல்ல பெறுபேறும், திருப்தியும் காண முடிகிறது என்றும் தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் அறிக்கையின்படி, இன்று வடக்கு மாகாணத்தில் மட்டும் இருக்கக் கூடிய மொத்த ஆசிரியர் தொகை 8,975. இதில் 6,033 பேர் பெண்களே. யாழ்ப்பாணத்தில் மட்டும் 5,297 பேர் ஆசிரியராகவுள்ளனர். அதில் 3,547 பேர் பெண்களே. இதிலும் யாழ். கல்வி வலயத் தகவலின்படி, (2004)திருமணம் ஆகாத 520 பெண் ஆசிரியர்களும் 168 ஆண் ஆசிரியர்களும் உள்ளனர்.

இந்த நிலையில், பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் பொறுப்பாளர் சரோஜினி சிவச்சந்திரன் இதுபற்றித் தெரிவிக்கும்போது;"போரின் விளைவால் மனச் சிதைவுக்கு பெண்கள் அதிகம் ஆளாகின்றனர் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. மிக ஆளுமையாகப் பெண்களால் இயங்க முடியும். அப்படித்தான் பலர் உள்ளனர். ஏற்கனவே உள்ள மரபார்ந்த சமூகக் கண்ணோட்டத்துடன் பெண்களைப் பார்க்க வேண்டிய தேவை இப்போதில்லை. எவ்வளவோ பிரச்சினைகளை இந்தப் பெண்கள் சந்தித்துள்ளனர். அவை பெண்களை ஆளுமை உள்ளவர்களாகத்தான் உருவாக்கியுள்ளனவேயொழிய, இருந்ததைவிட இன்னும் பலவீனமானவர்களாக்கவில்லை" என்று கூறினார்.

இவர்களது கருத்துகளில் இருந்து பார்க்கின்றபோது யாழ். சமூகம் மூடுண்ட இறுக்கமான நிலையில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியாத நிலையில் திடீர் மாற்றங்களை உள்வாங்க முடியாமலும், நிராகரிக்க முடியாமலும் பலவீனப்படுகிறதோ என ஐயுறவேண்டியுள்ளது.

இந்த சமூகம், அந்தஸ்துக் கருதி, திருமணம் ஆகாத பெண்களைப் பொருந்தாத மணத்தில் நிர்ப்பந்தமாக இறக்குவதிலும், பலவீனமான பெண்களாக அவர்களை உருவாக்குவதிலும் தனது கவனத்தைச் செலுத்தாது ஆக்கத்திற்கு, அபிவிருத்திக்கு பயன்படுத்தும் மாபெரும் சக்திகளாக இவர்களை இயங்கவைப்பதில் கவனம் செலுத்தவேண்டும். அத்துடன், இதனால் எதிர்கால தமிழ்சமூகத்தின் சனத்தொகையில் மிகப்பெரும் வீழ்ச்சி ஏற்படுவதும் தவிர்க்க முடியாததாகிறது. 2004 இல் நடந்திருக்கும் கடல்கோள் நிகழ்வுகூட ஆயிரக் கணக்கில் எம்மக்களை அடுத்த சந்ததிகளை ஒரேயடியாக அழித்துள்ளது.இந்தநிலையில் பெண்களின் பெறுமதிசார்ந்த வாழ்வுக்கும் தமிழ் சமூகத்தின் ஆரோக்கியத்திற்கும் கலாசர மீழ்கட்டுமானம் அவசியமாகிறது.சிந்தனைகளில் இதுதேவை.
.

No comments: