Thursday, February 19, 2026

ஊடகவியலாளர் திரு பாரதி இராசநாயகம் அவர்களின் ஒரு வருட நினைவு - யாழ்ப்பாணம்

 

07.02.2025 பாரதி நினைவுமலர் வெளியீடு - 

தலைமை உரை 

ஒரு சமூகத்தின் வரலாற்றை தன்வரலாறாக்கொண்ட ஊடகவியலாளர் திரு பாரதி இராசநாயகம் அவர்கள் காலமாகி ஒரு வருடம்! இன்று அவரது குடும்பம் உறவினர் நண்பர்கள் என பலரும் இணைந்து இந்த நினைவு நிகழ்வை ஏற்பாடுசெய்துள்ளனர். இந்நிகழ்விற்கு தலைமை வகிக்க என்னை அழைத்தமைக்காக குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது நன்றியும் அன்பும் உரித்து.

திரு பாரதி அவர்களுடன் 1992இல் இருந்து பத்திரிகைத்துறையில் இணைந்து பணியாற்றிய அனுபவத்தினூடக அவர்சார்ந்து சில விடயங்களைக் கூறி இந்நிகழ்வை ஆரம்பித்துவைக்க விரும்புகிறேன்

திரு பாரதி அவர்கள் ஒரு பத்திரிகையாளராக செயற்பட்ட காலமானது

1.            இனப்பிரச்சினையின் முரண்பாடு உச்சம்பெற்ற காலப்பகுதி

2.            புலம்பெயர் சமூகமும் அதன் பிரச்சினைகளும்

3.            உள்நாட்டுப் போர் ஆரம்பம், வளர்ச்சி, உச்சம், முடிவு

4.            போரின் பிந்தையகால மக்களின் வாழ்வு, அரசில் ஆட்சி 

5.            பொhருளாதார நெருக்கடிகள்

இக்காலகட்டம் தனிமனிதனும் சமூகமும் சின்னாபின்னப்பட்டு சிதைவுற்ற காலம். ஒரு ஊடகவியலாளனாக எதை எழுதவேண்டும் எப்படி எழுதவேண்டும் என அதிகாரங்கள் சுய சிந்தனையை ஒடுக்கிய காலம். பாரதி எழுதினார். பாரதியின் அப்பாவும் எழுதியிருக்கின்றார் ஒரு இலக்கியகாரனாக. 

 

பாரதி அவர்களின் எழுத்தை அறிமுக எழுத்து, விளக்க எழுத்து, சிந்தனை எழுத்து, இலச்சிய எழுத்து, சுதந்திர எழுத்து, என் பல் பரிமாணத்தைக் கொண்டிருந்தது. அதேநேரம் உண்மை, நியாயம், பக்கம் சாராமை, பொறுப்புடமை, தீங்கிழைப்பதைக் குறைத்தல், சுந்திரம் என தன் எழுத்துக்களில் பத்திரிகா தர்மத்தையும் அவர் கடைப்பிடிக்கத்தவறவில்லை.

 

சொல் வன்மைபற்றி திருவள்ளுவர் சொல்வார்

சொல்லுக சொல்லை, பிறிதோர் சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து

 

பத்திரிகைத்துறையில் விடயங்களை 100வீதம் உண்மையாகக்  கூறவேண்டுமெனில் ஆராயவேண்டும், தர்க்கநியாயங்களுக்கு உட்படுத்தவேண்டும் அதன்பின்பே எழுதவேண்டும் அவ்வாறான வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து எழுதவேண்டும். இது மக்களிடையே கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தும். அது பாரதிக்கு அவர்களுக்கு வாய்த்திருந்தது.

இன்று எச்சங்களாக இருக்கும் அவரது எழுத்துக்கள் மீளவும் மக்கள் மனங்களில் பயணப்படவேண்டியவை. அதனால் அவை ஒன்றுசேர்க்கப்படவேண்டும். அதனூடாக பல பிரச்சினைக்களுக்க தீர்வு கிடைக்கலாம், அதனூடாக சில பிரச்சினைகளை புரிந்து கொள்ளலாம், அதனூடாக சில புதிய சமூக சிந்தனைகள் கட்டமைக்கப்படக் கூடும். ஏனெனில் இவர்கள் - இக்குடும்பம் சமூகத்தின் காதலர்களாக இருந்தவர்கள். இலக்கியத்தாலும் , ஊடக முறைமைக்ககுள்ளாலும், நேரடி இயக்கச் செயற்பாடுகளாலும் சமூகத்துள் இயங்கியவர்கள் இவர்கள். இதனால்தான் பாரதி அவர்களின் சுயவரலாற்றை பேசினால் அது சமூகத்தின் வரலாறாக பதிவுசெய்யப்படுகிறது.

 

இந்த பத்திரிகைத்துறைப் பயணத்தில் மக்கள் மத்தியில் சிந்தனையைக்கிளறுவதற்காக திட்டமிட்டு சில விடயங்களை வெளிக்கொண்டுவருவது மிக முக்கியமானது. அதில் பாரதி அவர்கள், தமிழ்ச் சமூகத்தின் பொருண்மிய மேம்பாடு தொடர்பில் செயற்பட்டமையும் வெளிப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கதொன்று. சுய பொருளாதார தன்னிறைவுச் சமூகமாக வாழ்ந்தமிழ்கள் போரின்பின் வெளிநாடுகளில் தங்கியிருக்கும் சமூகமாக தன்னை இனம்காட்டியது. ஆனாலும் தற்போது பொருளாதார நடவடிக்கைகள் அதிகளவில் இடம்பெற்றவந்தாலும் குறிப்பிடத்தக்க அளவில் மரபுபேணி ஆளுமையுடனான ஒரு வணிகசிந்தாந்தம் தமிழர் பகுதிகளில் விருத்தியடையவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.  திரு பாரதி இராஜநாயகம் அவர்கள் அமைதியாக தன் அவதானிப்பில் - அரசியல், பொருளாதார சமூக விடயங்களை மக்களும் அதிகாரத்தில் உள்ளோர்களும் எப்படி புரிந்துகொள்கிறார்கள் என்றும் அவை எப்படி புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பதையும் தன் எழுத்துக்களின்  ஊடாக முன்வைத்தார். அதில் உள்ளுர்பொருண்மிய மேம்பாடு முக்கியமானது. பொருளாதார முயற்சிகளில் முன்னேற்றங்களில் மக்களின் கவனக்குவிப்பு இடம்பெறவேண்டும். இதற்காக பாரதி அவர்கள் சிறுகைத்தொழிலாளர்களை உள்ளுர் வளங்களை வெளிக்கொண்டுவந்தார்.அவை தொடரவேண்டும். அதற்கு நண்பர் நேசன் நல்ல உதாரணம். ஒரு தொழிலில் சிறந்து விளங்குவதற்கு தொழில்வாண்மை மட்டும் இருந்தால் போதாது மனிதநேயமும் தேவை. இவை இரண்டையும் திரு பாரதி அவர்கள் சிறப்புறவே கொண்டிருந்தார் அதனால்தான் இத்தனைபேர் கூடியுள்ளனர்.

பத்திரிகையாளர்களின் உயிர் அச்சுறுத்தலுக்குள்ளாகி கொலையுண்டபோதும் பாரதி தனது தனி நலனுக்காக பத்திரிகையைப் பயன்படுத்தவில்லை. தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் , செயலாளர் என பதவிகளை வகித்து பத்திரிகையாளர்களின் உரிமைக்காக குரல் கொடுக்க அனைவரையும் ஒன்று திரண்டபோது தனது பங்களிப்பை முழுமையாக வழங்கியவர் பாரதி அவர்கள்

சக்கர வியூகத்தினுள் நுழைந்த அபிமன்யுபோல் திரு பாரதி அவர்களாலும் இந்த ஊடகத்துறை எனும் ஆழ்கடலுள் இருந்து வெளியேற முடியவில்லை. அங்கேயே அவர் மூழ்கிப்போனது பெருந்துயர்! திரு பாரதி அவர்களின் துணைவி தேவகி அக்கா அவர் உற்றதுணையாக செயற்பட்டவர். ஆரம்பத்தில் தினக்குரலில் அவரும் இணைந்து பணியாற்றியவர். அவருக்கும் மகனான பார்த்திபனுக்கும் ஈடுசெய்யமுடியாத இந்த இழப்பு துயர் தோய்ந்ததே!. ஒரு வருட முடிவில் இத்தகையதொரு நிகழ்வை ஒழுங்கமைத்த உறவுகளுக்கும் நட்புகளுக்கும் என்றும் நன்றி உரித்து. குறிப்பாக என்னை இந்த நிகழ்விற்கு அழைத்த நண்பர் நேசன், மனைவி தேவகி அக்கா, ஊடக நண்பர் நிக்சன் ஆகியோருக்கு மீண்டும் நன்றியும் அன்பும் உரித்து

பாரதியண்ணாவின்  சுய  வரலாறு எம் சமூக வரலாறு! 

- எம்.எஸ். தேவகெளரி