Tuesday, July 27, 2021

50களில் இருந்து இறுதிவரை 'புதுமைப்பிரியை' ஆகவே வாழ்ந்தவர்!

 

"எழுத விரும்புகிற எல்லோருக்கும் எழுதுகோல் வசப்படுவதில்லை. ”எனக்குச் சொந்தமான எழுதுகோல்கொண்டுஇ எதையும் எழுதுவேன்“ என்று கிறுக்குகிறவர்களைஇ எழுத்துலகம் தன் நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்திவிடுகிறது. தடை அகன்று அதற்குள் நுழையவேண்டின்இ மானுடம் புரிந்திருப்பதும் மற்றெல்லாம் அறிந்திருப்பதும் அவசியம். இத்தகைமைகளை தன்னியல்பாய்க் கொண்டிருந்த “பத்மா அம்மையாரை“ வசப்படுத்தஇ உண்மையில் எழுதுகோல்தான் காத்துக் கிடந்திருக்கும்போல!" என்று திருமதி பத்மா சோமாகந்தனுடன் பழகிய ராஜாமகள் குறிப்பிட்டிருந்தார்.

1950களில்'புதுமைப்பிரியை' ஆகி இலக்கிய சமூகத்தை பெண்கள் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவர் திருமதி பத்மா சோமகாந்தன்! 2020 வரைக்கும் புதுமைகளை உள்வாங்கி எழுத்தை ஆண்டுகொண்டு இருந்தவர். 1954இல் நடந்த சுதந்திரன் வாரப் பத்திரிகையின் சிறுகதைப்போட்டியில் முதல்பரிசு பெற்ற முற்போக்கு பெண்மணி இவர். காணும்போதெல்லாம் அந்த நாட்களை கதைகதையாகக் கூறக்கேட்டிருக்கிறோம். பெண்களெல்லாம் கண்ணீர் இழுப்பிகள் என்று எண்ணிக்கொண்டிருந்த காலத்தில் சமூகம்இ அரசியல்இ தனிமனித உணர்வுகள் என கதையும்இ மேடைப்பேச்சுமாக இருந்த காலத்தில் தான்னால் தன்குடும்பம் எதிர்கொண்ட மனத்துயர்களையும் பகிர்ந்துள்ளார். ஒரு பெண்ணாக அதிலும் ஒரு பிராமணப்பெண்ணாக அரசியல் மேடையில் அரசியல்பேசிஇ சமூகக் களத்தில் அரசியலும் முற்போக்கும் எல்லாருக்கும் ஆனது அதில் ஆண்பெண் பேதம் இல்லை என துருத்திக்கொண்டு எழுந்து நின்றவர். தமிழுக்காக பெண்களுக்காக என எந்தஇடத்திலும் தன் எழுத்தாலும்இ பேச்சாலும் சலசலப்பை ஏற்படுத்திவிடுவார். 

சமூகத்திற்காக தமது நேரத்தை ஒதுக்குவதில் திருமதி பத்மா சோமகாந்தனும் திரு சோமகாந்தனும் போட்டிபோட்டுக்கொண்டு முன்னின்றவர்கள். இலக்கியத்திற்காகஇ பெண்களுக்காக மாகாநாடுகள்இ பட்டறைகள் என அவற்றை ஒழுங்கமைப்பதிலும் கொண்டு நடத்துவதிலும் வல்லவர்களாக இருந்தனர். அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் நாவலர் விழாஇ பாராதியார் விழா என தமிழுக்கு விழா எடுத்தபோது சோமகாந்தன் அவர்களுடன் இணைந்து இவரும் தனது பணிகள்பற்றி கூறியிருக்கிறார். அன்றில் இருந்து அவரது இறுதிக்காலம் வரை பொது அமைப்புகளுக்கு சந்திக்க இடம் தேவையென்றால்இ தனது வீட்டை அதற்கு பயன்படுத்த முழுமனதுடன் உவந்தளிப்பவர். எந்நேரமும் உற்சாகத்துடன் வாசிப்பும் எழுத்தும் என இயங்கும் இவர் மற்றவர்களையும் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துவதில் பின்நிற்பதில்லை. எழுத முடிந்தும் எழுத முடியாத வேலைப்பழுவில் இருக்கும்பெண்களுக்கு தலைப்பைக் கொடுத்து இரண்டு கிழமைக்குள் கட்டுரை வேண்டும். என கறாராக நின்று எழுதுவித்து  பல பெண்களை உற்சாகப்படுத்தியுள்ளார். கொழும்பு தமிழ் சங்கத்தில் நடக்கும் பெண்கள்தின நிகழ்வில் அதை வடிவமைத்து கொண்டு நடத்துபவர் இவராக இருப்பார். இந்த வயதிலும் பெண்ணிய கருத்துக்களை செவ்வனவே உள்ளவாங்கி அதைப் புரிந்துகொண்டு அதற்கான களங்களையும்இகாலங்களையும் உருவாக்கி கருத்தியலை சமூகத்துள் கொண்டு சேர்ப்பதில் சளைக்காமல் இயங்கினார்.

இலக்கியத்தில் உலாவரும் பலருக்கு விழா எடுக்கும் கலாசாரம் இருக்கின்றபோது ஏன் அவர்கள் பெண் இல்கியவாதிகளுக்கு எடுப்பதில்லை என்ற கேள்வியை எழுப்பி ஒளவைக்கு தான் விழா எடுக்கவேண்டும் என மனதார இயங்கி அதை செய்தும் காட்டினார். கொழும்பில் 2014இல் ஒளவைக்கு விழா எடுத்து பல தலைப்புகளில் பலரையும் ஆய்வுசெய்யவைத்து சிறப்புற நடத்தினார்.  

திருமதி பத்மா  சோமகாந்தன் இலக்கியம்இ பெண்ணியம்இ ஊடகம்இ ஆன்மீகம் பற்றி அந்த அந்த காலத்தில் ஆழமான பார்வையைக் கொண்டிருந்தார். ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் முன்னரைவிடவும் உற்சாகத்துடன் எழுத்துலகில் பிரகாசித்தார். ஒவ்வொரு மனிதரையும் கூர்ந்து நோக்கும் பண்பும் ஆழ ஊடுருவும் அறிவும் வாய்க்கப்பெற்றவராக தன் கதைகளைக் கட்டுரைகளை முன்வைப்பவர் இவர். அந்த வகையில் தான் கண்ட பெண்களில் 24பேரைப்பற்றி தொகுத்து எழுதிய நூல் 'ஈழத்து மாண்புறு மகளிர்'. பெண்களின்இ இளைஞர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைத்த கேள்விபதில் 'நெஞ்சுக்கு நிம்மதி" என்ற தலைப்பில் நூலக வந்தது. ஒவ்வொரு தனிமனிதர்களையும் உற்றுநோக்கும் இவரது கூருணர்வுக்கு சான்றாக இவரது சிறுகதைத் தொகுப்புகள் உள்ளன.

இலக்கிய இணையர்களாக வலம் வந்தவர்கள் 2006இல் திரு சோமகாந்தனின் இழப்பிற்கு பின் உறவுகள் குறித்த பார்வையில் போலிகளையும் வெறுமையையும் உணர்ந்தவராக மீண்டும் சமூக வெளிக்குள் தன்னை முன்னிறுத்தினார். முன்னரைவிடவும் வீறுகொண்டு எழுத்துப் பணிசெய்தார். ”எழுத்து ஒன்றுதான் என்துயர் தீர்க்கும்” என்றவர்இ தன் படைப்புகளுக்காகவும்  பத்திரிகைகளுக்காகவும் எழுதினார். எண்ணற்ற சந்திப்புகளில் கலந்துகொண்டு நல் உரையாற்றினார். “ஓய்வுக்குப் பின்னரும் ஓய்வின்றி இருக்கிறீர்களே!” என்றால்இ ”அதுவே எனக்கான டொனிக்“ என்று சிரிப்பார். 

திருமதி பத்மா சோமாகாந்தன் தான் அங்கம் வகித்த பல்வேறு இலக்கிய குழுக்களில் நடைபெறும் ஆதிக்க செயற்பாடுகளை மனம்நொந்து கூறுபவர் அல்ல. அந்த அந்த இடத்திலேயே அதற்கு பதிலிறுத்து தன்னை ஒரு தமிழ்ப்பெண் ஆளுமையாக அடையாளப்படுத்திவிடுவார். விவாதங்களின்போது தன் கருத்தை அவர் நியாயமாகப் பதிவு செய்ததை பலமுறை கண்டிருக்கிறேன். அது பலருக்கு ஒவ்வாமையைக் கொடுத்திருக்கலாம். அவரின் சொந்த விளம்பரத்திற்காகதான் அப்படிச் செய்கிறார் என ஒவ்வாமைக்காரர் புலம்புவதுண்டு. ஆனாலும் பெண்களுக்கான இடத்தை ஏற்படுத்துவதற்கும் அதைத் தக்கவைப்பதற்காகவும் தான் அவ்வாறு செய்ததாக அவர் கூறும்போது பெருமிதம் பொங்கும். 1950களில் எவ்வாறு தன்னை ஒரு புதுமைப்பிரியையாக கண்டெடுத்தாரோ அதையே அவர் இறுதிவரை கடைப்பிடித்து வாழ்ந்தார். இளவயதினரிடம் வெகு இயல்பாய் தானாகவே இறங்கிவந்து பழகும் பக்குவமும் உற்சாகப்படுத்தும் பண்பும் இவரின் முத்திரையாகும். பல ஊடகங்களில் எழுத்தாளராக இயங்கிக்கொண்டிருந்தபோது ஊடகங்களில் வேலைசெய்யும் தமிழ் பெண்களுக்கு ஒரு அமைப்பை நிறுவுவதற்கும் அதற்காக தனது இல்லத்தில் இடம் தந்து கூட்டங்களைக் கூட்டுவதற்கும் உதவியாக இருந்தார். அப்போது வேலைசெய்யும் ஊடகப்பெண்களுக்கு நேர நெருக்கடியாக இருந்தபோது தானே எல்லா பொறுப்பையும் எடுத்து தலைவராக நின்று 'ஊடறு' என்று பெயர் சூட்டி அந்த பெயரை பேராசிரியர் சிவத்தம்பியிடம் விவாதித்து முன்னிறுத்தினார். பல கூட்டங்களைஇ பயிற்சிப்பட்டறைகளைஇ சர்வதேச பெண்கள் தினத்தை பெரு நிகழ்வுகளாக நிகழ்த்தி காட்டடினார். இதற்கு உறுதுணையாக நின்ற காலம் சென்ற சாந்தி சச்சிதானந்தனும் இந்த இடத்தில் நினைவுகூரத்தக்கவர்கள்.பிற்காலங்களில் என்ற பெயரில் புலம்பெயர் நாட்டில் பெண்கள் அமைப்பு ஒன்று இருந்ததால் அந்த பெயர் கைவிடப்பட்டது. இவ்வாறு பெண்கள் முன்னேற்றம் என்றால் முன்னிற்கு நிற்பவர் பத்மா சோமாகாந்தன் அவர்கள்.

புரட்சிக்காரராக இருந்தாலும் கால மாற்றங்கள் பலரை காலத்தோடும் சமூகத்தோடு ஒத்தோட வைத்து புரட்சிக்கருத்துக்களை நீர்த்துப்போகச் செய்துவிடும். பத்மா அம்மையாரிடம் அதைக் காணமுடியாது. இறுதிக்காலங்களில் கூட 'என்னால் அதிகம் சிந்திக்க முடியாமல் இருக்கிறது. என்னிடம் கட்டுரை கேட்டிருக்கிறார்கள். புதிய கருத்துக்கள் இருந்தால் சொல்லுங்கள்...என்று கூறி ஒ;வ்வொரு விடயத்தையும் எப்படிப்பார்க்கலாம்? எப்படி சிந்திக்கலாம்? என பல்வேறு கோணங்களையும் விபரிக்கும்படி கேட்பார். உண்மையில் அதைப்பார்த்து வியந்திருக்கிறோம். அதற்காக இறுதிக்காலங்களில் ஒருமுறை அவரைச் சந்தித்து உரையாடினோம். 

இலக்கியகாரர் இ சமூகத்திற்காக இயங்கியவர்களின் வயது மூப்பின் இறுதிக்காலங்கள் எல்லோரையும் போல் உற்சாகம் அற்றவைதான். ஆனால் இவர்கள் சந்திக்கவும் கதைக்கவும் காணவும் விரும்புவது தமது இலக்கிய சொந்தங்களையே. அதற்கு இவரும் விதிவிலக்கல்ல. அதற்கு இந்த கொரோனா என்ற பெரும் தொற்றுக்காலம் அனுமதிக்கவில்லை. அந்த துயர் இன்னும் உள்ளது. 2020 ஜூலை 15ஆம் திகதி அவரின் இறப்பிலும் பலராலும் பங்கேற்க முடியாது போனது. தமிழுக்கு பெண்களுக்கு என துடித்துக்கொண்டிருந்த ஒரு இதயமும் மூளையும் துடிப்பதை நிறுத்திக்கொண்டாலும் விதைத்த சிந்தனைப்பொறிகள் ஆங்காங்கே எரிந்துகொண்டிருக்கின்றன.

எம்.எஸ்.தேவகௌரி

(எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் அவர்கள் இறந்த ஒரு வருட நினைவையொட்டி 2021  July - தமிழ் மிரர் , ஈழநாடு பத்திரிகைகளில் வெளியானது)


Tuesday, June 15, 2021

தொடர்பூடகங்களும் பெண்களும் - பெண்களை ஆர்வப்படுத்தலும் ஆளுமைப் படுத்தலும்


                                                                                               source :https://safejournalists.net/

எம்.தேவகௌரி
பதில் ஆசிரியர்,
ஞாயிறு தினக்குரல்.
2004


ஊடகங்கள் சமூகத்தில் கருத்து நிலையை உருவாக்குவதிலும் பிரதிபலிப்பதிலும்
பரப்புவதிலும் மிக முக்கிய பங்கு வகிப்பன. எனவே இந்த ஊடகங்கள் பெண்கள்
பற்றிய விடயங்களை கையாளும் முறைமை சமூக முக்கியத்துவம் வாய்ந்தது.
அனேகமாக பிரதான ஊடகங்கள் ஆண்களை மையமாக வைத்தே தகவல்களை வெளியிட்டு
வருபவை. அதாவது அந்த ஊடகங்களுக்கான வாடிக்கையாளர்கள் (கேட்பவர்கள்,
பார்ப்பவர்கள், வாசிப்பவர்கள்) ஆண்களே என்ற கருத்தாக்கம் தான்
முதன்மையானதாக இருக்கிறது. ஒரு தினப் பத்திரிக்கையை எத்தனை பெண்கள்
வாசிக்கிறார்கள் ? அதிலும் அவர்கள் வாசிப்பது என்ன? ஞாயிறு பத்திரிகையில்
பெண்கள் வாசிப்பது என்ன இவையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்.

பத்திரிகையாயின் பெண்களுக்கு ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்தப்
பக்கத்தில் பெண்கள் பற்றிய விடயங்கள், பெண்களுக்கான விடயங்கள், குடும்ப
தளத்தில் இருந்து கட்டமைக்கப்பட்டிருக்கும். குழந்தை, சமையல், அழகு
முக்கியமானவையாக இருக்கும். அத்துடன் பெண்களுக்கான ஒழுக்கம் கணவனை,
உறவினர்களை, வயோதிபர்களை கவனித்தல், பராமரித்தல் பற்றிய விடயங்களும்
கொடுக்கப்படும். இவை பெண்களுக்கு.

அடுத்து பெண்பற்றிய விடயங்களை, உதாரணமாக சினிமாவில், சினிமாவை
பத்திரிகையில் கொண்டுவரல் - இவற்றில் பெண்களை காட்சிப்படுத்தல் ஆண்களை
வாசகர்களாக, பார்வையாளர்களாக வரித்துக் கொண்டதன் விளைவு.  அது இன்றுவரை
தொடர்வதுதான் அபத்தம். பெரிய திரை ஆண்களுக்கு, சின்னத்திரை
(வீட்டுக்குள்) பெண்களுக்கு. இத்தகு பிரிப்பைத்தான் சகல ஊடகங்களும்
கருத்தியல் ரீதியாக செய்கின்றன. இதனால், ஆண் - பெண் நோக்கு, தேவை வேறு
வேறாகி அவர்கள்  இரு துருவங்களாக வளர்த்தெடுக்கப் படுகின்றார்கள். ஆனால்
இவர்கள் ஒன்றாக ஒரே கூரையின் கீழ் வாழவேண்டியவர்கள். இன்னும்
சொல்லப்போனால், ஆணுக்கு உலகமே வீடாகவும், பெண்களுக்கு வீடே உலகமாகவும்
இவர்களை வளர்த்தெடுக்கும் பணியை நன்றாகவே தொடர்பூடகங்கள்
செய்துவருகின்றன. இதை நாம் விளங்கிக் கொண்டால்தான், தொடர்பூடகங்களில்
கொண்டுவரக் கூடிய மாற்றங்கள் பற்றியும் மரபில் சேர்க்க வேண்டிய விடயங்கள்
பற்றியும் தெளிய முடியும்.

தொடர்பூடகங்கள் பெண்களை எப்படி கருத்துருவாக்கம் செய்கின்றன என்பதை ஆழமான
புரிதலுடன் விளங்கிக் கொள்கின்ற போது, பெண்களின் முழு ஆளுமையும்
குடும்பவட்டத்திற்குள் கட்டமைக்கப்படுவது புரியும். அது கூட எதிர்மறையாக
இருப்பது தான் இன்று பெரிய சவால்.

அதாவது எம்மில் 70% ஆன பெண்கள் சமூகத்தில் தொழிற் துறைகளில் இறங்கியுள்ள
நிலையில் குடும்பம் சார்ந்த கருத்துகள் இரட்டைச் சுமையை
ஏற்படுத்துகின்றதேயொழிய, நடந்த மாற்றங்களுக்கு அமைய அவை
கட்டமைக்கப்படவில்லை.

உதாரணமாக, சமையலை இலகு படுத்த இரவில் காய்கறி வெட்டுதல், பாத்திரம்
கழுவுதல் போன்ற வேலைகளைச் செய்து வையுங்கள் என்ற தகவல் பெண்களுக்காக
தரப்படும்..

அலுவலகம் சென்று வரும் பெண் (இன்று அனேகர் அப்படியானவர்கள்) ஐந்து
மணிக்குப் பின் வீட்டுக்கு வந்து வீட்டு வேலைகள், சிலருக்கு தன்னார்வ
விருப்புகள், (வாசித்தல், ரீ.வி. பார்த்தல், எழுதுதல்) குடும்பத்தினருடன்
உரையாடல் எல்லாம் முடித்து படுக்க பத்து மணிக்கு மேலாகின்றபோது அடுத்த
நாள் சமையலுக்கு தயார் படுத்த முடியுமா? இந்த விடயங்களை பிள்ளைகளுடன்
கணவருடன் பங்கீடு செய்வது பற்றி யாரும் பேசுவதில்லை.
இந்த நிலை,  ஒட்டுமொத்த குடும்பச்சுமையைப் பெண் ஏற்றுக்
கொள்ளவைக்கப்படுவதால் அவள் சிந்தனையும் விரிவுபட வழியில்லை. இதனால்,
விரைவில் சலிப்படையும் பெண் பல பிரச்சினைகளையும் உருவாக்க காரணமாகிறாள்.

இதனால் தான் பல வருடங்களுக்கு முன் பெண் எழுத்தாளர்கள் பற்றி
குறிப்பிடும் போது அவர்கள் வெறும் கண்ணீர் இழுப்பிகள் என்ற விமர்சனம்
முன்வைக்கப்பட்டது. (இன்று சின்னத்திரை நாடகங்கள் பெண்களை வைத்து அதைச்
செய்வது வேறு விடயம்).

இந்த நிலையில் தொடர்பூடகங்களில் பெண்கள் ஆர்வம் கொண்டு அதில் தம்மை
இணைத்துக் கொள்வது பல யதார்த்தங்களை வெளிக்கொணர உதவும். அதிலும் பெண்
பற்றிய அக்கறை கொண்ட பெண்களால்தான் இது ஏற்பட முடியும். எப்படி
ஆளுமையுள்ள பத்திரிகையாளர்களால் ஒரு சமூக கருத்தியலை கட்டமைக்க,
மாற்றியமைக்க முடியுமோ அப்படித்தான் பெண்பற்றிய யதார்த்தங்களை உணர்ந்த
பெண்ணால் தான் தொடர்பூடகங்களில் கருத்துகளை முன்வைக்க முடியும். நம்மில்
பலர் நம் சமூக யதார்த்தத்தை எமது சிந்தனையில் எடுக்காமலே
கதைபண்ணிக்கொண்டும், கவிதை வடித்துக்கொண்டும், ஏற்கனவே எழுதிய பழமொழிகளை
தூசி தட்டிக் கொண்டும் இருக்கிறோம்.

பெண்ணுக்குரிய பிரச்சினைகளை குடும்பமட்டத்தில் மட்டுமே வைத்துப்பார்த்து
தீர்ப்பிடும் நிலையைத்தான் நாம் கொண்டியங்குகிறோம். இன்று நம் சமூகப்
பெண்கள் சமூக தளத்திற்கு இழுத்து வரப்பட்டிருக்கிறார்கள். போர் தந்த
மாற்றம் இது. இப்போது அதுதான் வாழ்வாகிவிட்டது. இந்த நிலையில்
குடும்பத்தை மட்டும் பிரதானமாகக் கொண்டு பெண் இப்படி இருக்கவேண்டும் இது
இது செய்ய வேண்டும் என்று கூறி ஒரு கருத்துரு வாக்கத்தை மேற்கொள்வது
முரணானது. சாதாரணமா `அழகு' பற்றி கூறும் நாம் இன்று எமக்குத் தேவைப்படும்
உடல் உறுதி, உடல் உற்சாகம் பற்றி கதைக்கிறோமா? அதற்கு என்ன செய்யவேண்டும்
என்பதை முக்கியப் படுத்துகிறோமா? முடி நீளமும் முக அழகும் எந்தக்
கருத்தாக்கத்தில் எமக்குத் தேவை? இந்தக் கேள்விகளை நாம் கேட்டுப் பார்க்க
வேண்டும்.

எனவே ஒரு சின்ன விடயமானாலும் அது இன்றைய யாதார்த்த பெண்ணுக்கு ஏற்புடையது
தானா? என்ற சிந்தனை வேண்டும். அத்துடன் கீழ்மைப்படுத்தல்,
பலவீனப்படுத்தல் எந்தவிதத்திலும் பெண்ணின் இயற்கையான விடயம் என்ற தொனி
இல்லாதவாறு கருத்துருவாக்கம் செய்தல் முக்கியமானது. பத்துப்பேரை ஒன்றாக
அடிக்க முடியும் என்று திரைப்படத்தில் ஆணை கதாநாயகனாக காட்ட
முடிந்திருக்கிறது. ஆனாலும் பலம் பொருந்தியவனாக ஆகமுடியும் என்ற
நம்பிக்கை எவ்வளவு தூரம் பதிந்திருக்கிறது! இல்லாத ஒன்றையே நடக்க முடியாத
ஒன்றையே இவ்வளவு தூரம் காட்டமுடியும் என்றால், யதார்த்தத்தை, உண்மை
விடயங்களை எமது வாழ்வாதாரங்களை ஏன் காட்டமுடியாது? ஏன் வெளிக்கொணர
முடியாது?

வெளியில் இருந்து ஏதோ ஒருவகையில் தொடர்பூடகங்களுடன் தொடர்பு கொள்ளும்
பெண்களின் சிந்தனைக்காக மேற்கூறிய விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

அடுத்த விடயம் ஊடகங்களில்  பணிபுரிவது! இது ஒரு பெரிய சவால் தான்.
மூன்றாம் உலக நாடுகளிலேயே முதல்முதல் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய
நாடு, முதல் பெண் பிரதமரைக் கொண்ட நாடு என்ற பெருமையை வைத்திருக்கிறோம்
நாம். பெண்கள் அதிலும் தமிழ் பெண்கள், சமூகத்தில் பொதுமக்களுடன் தொடர்பு
கொள்வதென்பது பெரிய விசயம். பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் விடயத்தில்
ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களில் ஜி.ஜி.யால் சொல்லப்பட்ட ஒரு விடயம்.
`ஆங்கிலேயரின் நாகரிகத்திற்கு ஆட்பட்டு எமது குடும்பப் பெண்களை `பொது
மகளிர்' ஆக்கப்பார்க்கிறார்கள்' என்பது. இப்படி சமூக சிந்தனையை பெண்கள்
ஏற்படுத்திக் கொள்வதே பெரும் சிரமமாக இருந்த வரலாற்றில் வந்த நாம், இன்று
போராளிப் பெண்களைக் கொண்டியங்குகிறோம்; பெண் தலைமைத்துவ குடும்ப மரபைக்
கொண்டிருக்கிறோம். ஆனால் தொடர்பூடகங்களில் பணிபுரிவதற்கு
முடியாதிருக்கிறது. தொலைக்காட்சிகளில் செய்தி வாசிக்க பெண் தேவை, கணீர்
என்ற குரலில் நேயர்களைச் சொக்கவைக்க பெண் தேவை. பத்திரிகையை
கவர்ச்சியாக்க பெண் தேவை; ஆனால், ஆழமான கருத்தியல்களை சமூக அபிவிருத்தி,
அரசியல், பொருளாதாரம் பற்றிய அக்கறைகளை கொண்டு தொடர்பூடகங்களில் இயங்க
பெண் `இல்லை'
ஏன்?
பெண்ணுக்குக் கொடுக்கப்படும் வாய்ப்புகள் இவை சார்ந்து பெண் ஆர்வப்படல்
என்பன இல்லாமல் இருக்கின்றது. இதற்குக் காரணம் சமூகம் பெண், தொடர்பூடகம்
பற்றி வைத்திருக்கும்
விழுமியங்கள். போருக்குள்ளால் புடம் போடப்பட்ட நாங்கள் எங்கள் பலத்தை
சரியாக இனம் காணவில்லை. சமூகத்தளத்தில் எம்மால் ஆளுமையாக இயங்கமுடிகிற
போது ஏன் தொடர்பூடகங்களில் அதை வெளிக்கொணர முடியாது?
பெண் ஏமாற்றப்பட்ட
செய்தி, பெண் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்ட செய்தி சுவாரஸ்யமான
செய்திகளாக மட்டும் போடப்படும் நிலைதான் உள்ளது. இதுவே பெண்கள்
ஊடகங்களுக்குள் வேலை செய்கின்றபோது, இயல்பாகவே அடுத்து என்ன நடந்தது,
குற்றம் புரிந்த நபர் யார்? அவருக்கு கிடைத்த தண்டனை என்ன? அல்லது தண்டனை
கிடைக்கவில்லையா? இது எல்லாம் செய்தியாகும். இதுவே அக்குற்றத்தை
குறைப்பதற்குமான வழியுமாகும்.

அபிவிருத்தி, மீள்குடியேற்றம் பற்றியெல்லாம் சிந்திக்கும் போது, பெண்ணைப்
பற்றி யார் சிந்திக்கிறார்கள்? சமூக மறு உற்பத்தி பண்பைக் கொண்டுள்ள
பெண், குடும்பங்களை பராமரிக்கும் பெண், சமூகத்தில் முக்கிய கடமைகளை
நிறைவேற்றும் பெண் கவனிக்கப்படுவதில்லை. அவளது போசாக்குப் பற்றியோ,
சுகாதாரம் பற்றியோ யாருக்கு அக்கறை? இது பற்றி பெண்களால்தான் கேள்வி
எழுப்ப முடியும். பெண்கள் சமூகத்தின் முக்கிய பங்காளிகள் என்பது
எல்லாவிதத்திலும் முன்னிலைப் படுத்தப்பட வேண்டும். பெண்களின் ஒவ்வொரு
செயலும் ஆளுமை மிக்கதாக மிளிர வேண்டும். இதற்கு பெண் தான் தன்குடும்பம்,
தன்சமூகம், தன் நாடு ஆகியவற்றில் கொண்டிருக்கக்கூடிய தொடர்பு முக்கியம்.

தொடர்பூடகங்களிலும் முடிவெடுக்கும் தகுதியைப் பெற்ற பெண்கள் இலங்கையில்
இல்லை. அதிலும் தமிழ்ப் பெண்கள் அறவே இல்லை. பெரும்பாலும் ஊடகங்களில்
வேலை செய்யும் பெண்கள் அலுவலகத்தினுள்ளே வேலை செய்பவர்களாகவே உள்ளனர்.
இன்றைய எமது ஊடகத்துறைகூட  குறிப்பாக தமிழ் ஊடகத்துறை பெரியளவில்
வளர்ச்சியடைந்ததாக இல்லை. ஒரு விவரணக் கட்டுரை எழுதுவதற்கான தகவலை திரட்ட
வெளியில் சென்று வருதல், புலனாய்வு கட்டுரைக்கான தகவல் சேகரிப்பு
என்பவற்றைக் கூட நாம் செய்ய முடிவதில்லை. ஆளணி பற்றாக்குறை மற்றும்
பாதுகாப்பின்மை என்பன முக்கிய காரணங்களாகும். அத்துடன் தொடர்பூடகத்துறை
கல்வியியல் ரீதியாக வளர்த்தெடுக்கப்படாததும் ஒரு குறைபாடு. இன்று அந்த
வாய்ப்பு உள்ளது. அதில் பெண்களையும் உள்வாங்கி பயிற்சி அளித்தால்
நம்பிக்கை தரக்கூடிய யதார்த்த சமூகத்தை கட்டியெழுப்பலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு ஓரளவுக்காவது
அந்தந்த நிறுவனங்களிலாவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஊடகத் தொழில்
என்பது எனக்குப் பிடித்ததையும் உங்களில் ஒருவருக்கு பிடித்ததையும்
எழுதுவதல்ல.

சமூக யதார்த்தத்தில் இருந்து பல்வேறு கோணங்களிலும் பிரச்சினைகள்
அணுகப்பட்டு ஆழமான சிந்தனையில் வளமான சமூகத்தை எதிர்பார்த்து
கட்டமைக்கப்படுவது, அல்லது முன்வைக்கப்படுவது.

இதில் சமூகத்தில் சரிபாதிக்கும் மேலிருக்கும் பெண்களும் பங்கெடுத்துக்
கொள்வது ஒரு சமநிலைச் சமூகத்தை உருவாக்க, பிரச்சினைகளை தெளிவாக அணுக
வழிகோலும்.

உலகெங்கும் இன்று பெண்கள் தொடர்பூடகங்களில் மிகுந்த தாக்கம் மிக்கவர்களாக
இயங்குகிறார்கள். அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பெண் ஊடகவியலாளர்கள் 40
வீதத்தினர் உள்ளனர். போர் காவு கொண்ட எம் சமூகத்திலும் பெண்கள் அரிய பல
பணிகளை ஆற்றி வருகின்றனர். ஆனால், அவை சரியாக இனம் காணப்பட்டு
வளர்த்தெடுக்கப்படவில்லை. இவற்றை செய்யக்கூடியவர்கள் பெண்கள் தான்
அதிலும் சமூகம், பெண்  பற்றிய சிந்தனைகளைக் கொண்டவர்கள். அவர்களை
ஊடகங்கள் வரவேற்கவேண்டும்.

அத்துடன் சமூகத்தளங்களில் அகலக்கால் வைத்திருக்கும் நம் பெண்கள் தம்
சிந்தனையிலும் சமூக தளத்திலிருந்தும் தம் இயங்கியலுக்கான மரபுகளைக்
கட்டியெழுப்பவேண்டும்
. அதற்கு இந்த உணர்வு உள்ள பெண்கள், ஊடகங்களில்
உள்வாங்கப்படவேண்டும் அல்லது உள்வாங்கப்பட்ட பெண்கள் இத்தகு சிந்தனையை
வளர்த்துக் கொள்ள வேண்டும்.

(2004 ஊடறு பெண்கள் அமைப்புக்கு எழுதப்பட்டது )

Monday, December 21, 2020

விவரணக்கட்டுரைகளை எப்படி எழுதுவது?




மக்களின் கருத்துருவாக்கத்தில் ஊடகங்களின் பங்கு மிகப்பெரியது. இதை நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்கிறோம். மக்களின் சிந்தனைகளில் கருத்துக்களில் ஆதிக்கம் செலுத்தும் வல்லமை ஊடகங்களுக்கு இருக்கிறதென்றால், ஊடகங்களை நாம் வழிப்படுத்தினால் அது மக்களை வழிப்படுத்துவதற்கு சமனாகும். ஊடகங்களை வழிப்படுத்தல் என்பது ஊடகங்களுக்கு இருக்கவேண்டிய அடிப்படை ஒழுக்கநியமமான உண்மை(truth), மிகச்சரியான (accurate),பக்கசார்பற்று (fariness) அறிக்கையிடும் பண்பை வளர்த்தலும் பேணலும். அத்துடன் ‘பொறுப்புடைமை’ ( responce) என்ற பங்காற்றலும் ஊடகங்களுக்கு உண்டு. அதுவும் பல்லின கலாசாரங்களைக் கொண்ட ஒரு நாட்டில் ஊடகங்கள் பன்மைத்துவத்தை (pluralism) ஏற்றுக்கொண்டு அறிக்கையிடல்களைச் செய்யவேண்டும். ‘வேறுபாட்டுக்குள் ஒருமைப்பாட்டை’ காணும் அணுகுமுறையைக்கொண்ட அறிக்கையிடல்களையும் ஊடகங்கள் ஏன் வெளியிடக்கூடாது? அதை செய்கின்றபோதுதான் நாட்டில் நல்லிணக்கமும், அமைதியும் மக்கள் மனதில் தோன்றும். அத்தகைய கருத்துருவாக்கங்கள் மக்கள் மனதில் விரிகின்றபோது முரண்பாடுகள், மோதல்கள் தவிர்க்கப்படும்.


இதை ஏற்றுக்கொண்டு, இலங்கையில் இருக்கக்கூடிய பல்லின சமூகங்களின் பிரச்சினைகளை அணுகலாம். அனேகமாக செய்தியில் இருந்து விவரணக்கட்டுரை ஒன்றை எழுதுவதற்கான எண்ணம்(idea) எமக்குக் கிடைக்கின்றது. கட்டுரைகளை எழுதும் எண்ணம் மனதில் எழுகின்றபோது எந்தக் கோணத்தில் அதை எழுதப்போகிறோம் என்ற திட்டம் எம்முள் இருக்கவேண்டும். அந்தத் திட்டத்திற்கு அமைய கிடைத்த உண்மைத் தரவொன்றை வைத்து, அதனுடன் சம்பந்தப்பட்டவர்களிடம் அபிப்பிராயத்தையும் கருத்தையும் கேட்டல். அதனூடாக நாம் எழுதவுள்ள விடயத்தை பகுத்தாராய்ந்து மக்களுக்கு தெளிவுபடுத்துவதே எமது நோக்காக இருக்கலாம். அதில் பிரச்சினைகளுக்கான காரணங்களை முன்வைக்கலாம், பிரச்சினைகள் எங்கிருந்து ஆரம்பிகின்றன என்பதை வெளிப்படுத்தலாம் அல்லது உய்த்துணர வைக்கலாம், பிரச்சினைகளுக்ககான தீர்வை உரியவர்களிடம் இருந்து பெற்று வெளிப்படுத்தலாம். அல்லது தீர்வை நோக்கி செல்லும் வழியை முன்வைக்கலாம். அல்லது அதிகாரத்தின் முன் மக்கள் வைக்கவேண்டிய கேள்விகளை முன்வைக்கலாம். இப்படி நாம் எடுத்துக்கொண்ட விடயத்தை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வைப்பதே எமது நோக்காக இருக்கவேண்டும். 


ஊடகவியலாளராக இருக்கும் நாம் நல்லிணக்கத்திற்கும், சமாதானத்திற்கும் சார்பானவர்களாக சர்பான எண்ணங்களை மக்களிடம் கட்டியெழுப்புபவர்களாகவும் இருக்கலாம். இதற்காக சாதாரண மக்களின் கதைகளையும், அரசியல், பொருளாதார, கலாசார பிரச்சினைகளை சாதாரண மக்களின் கண்களுடாகவும் முன்வைக்கலாம். அவ்வாறு முன்வைக்கும்போது பகுத்தாராய்ந்து பதில் அளிக்க வேண்டிய உத்தியோகபூர்வ மூலங்களின் குரல்களையும் உள்ளடக்கி கதைகளாக்கலாம். அந்தக் கதைகள் ஒரு சமூகத்திற்கானதாக இல்லாமல், பல்லின சமூகங்களில் எவ்வாறுள்ளது என்பதையும் நாம் வெளிக்கொண்டுவருதலே ஒரு சிறந்த கதையை உருவாக்கும். நாம் எழுத முற்படும் கதைகள் ஒரு சமூகத்திற்கானதாக மட்டும் உள்ளதா? ஏனைய சமூகங்களுள்ளும் இருக்கின்றதா என்பதை ஆய்வுசெய்வதும் இருந்தால் அதனையும் இணைத்து எழுதலாம். எழுதும்போது அதற்கான சவால்கள் தீர்வுகள் ஒரேமாதிரியாக உள்ளனவா? வேறுபாடாக உள்ளனவா? அவ்வாறு இருப்பின் காரணம் என்ன என்பதை பகுதிதாராய்ந்து வெளிக்கொண்டு வரலாம். நூம் எழுத எடுக்கும் விடயத்தை ஆழமாக ஆராய்தல் என்பது மிக முக்கியமானது. வெளிப்படையாக எல்லோருக்கும் தெரியும் நிகழ்வுகளையும் அபிப்பிராயங்களையும் முன்வைப்பது ஒரு சிறந்த கதையாகாது.


இன்று கொரோனா பற்றிய செய்திகளும் கதைகளும் வெறுமனனே எத்தனைபேருக்கு தொற்று ஏற்பட்டது என இலக்கங்களுடன் நின்றுவிடுகிறது. அல்லது பிரபல்யமானவாகள், அல்லது குறித்த நபர்கள் பற்றிய அடையாளத்துடன் நின்று விடுகிறது. இதற்கு அப்பால், சகல இன குழுமத்துள்ளும் உள்ள சாதாரண மக்கள் கொரோனா தொற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள்? அவர்கள் கையாளும் தடுப்பு முறைகள், அரசு எடுத்திருக்கும் பரிசோதனை முறைகள் சாதரண மக்களுக்கு சாத்தியமானதாக உள்ளதா?ஊரடங்கு, தனிமைப்படுத்தலை அன்றாடம் உழைத்துண்பவர்கள் எப்படி எதிர்கொள்கின்றனர்? என பல்வேறு கோணங்களில் கதைகளை அணுகலாம். எடுக்கப்படும் கோணத்தில்(angle) எல்லா இன சமூக மக்களுக்கும் உள்ளடங்கியிருத்தல் முக்கியம். 


நல்லிணக்கம் என்பது தனியே இனங்களுக்கிடையே மட்டுமல்ல மதம், பிரதேசம், தனிநபர், ஆண் பெண் என எல்லோருக்குமிடையேயான நல்லிணக்கம். அது ஜனநாயகத்தை கட்டியெழுப்பவும் உதவுகிறது. இக்கதைகளின் ஊடாக குறைந்த பட்சம், தமது பிரச்சினைகளை பொது தளத்தில் முன்வைக்கும் ஜனநாக உரிமை  மக்கள் எல்லோருக்கும் இருக்கிறது என்பதை ஊடகவியலாளர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.


நடந்ததை நடந்தவாறு பிரசுரிக்கும் செய்திகளில் கூட பார்வைக் கோணங்களை மாற்றுவதனூடாக, குறித்த அந்த செய்தியை ஒரு சாராருக்கு அனுகூலமான அல்லது பிரதிகூலமான செய்தியாக மாற்றும் நிலை தமிழ் சிங்கள ஊடகங்களில் தாராளமாகவே உள்ளன. உதாரணமாக பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட விடயத்தை தமிழ் சிங்கள ஊடகங்கள் கையாண்ட விதம். பிக்குமார் வெளியிடும் வரலாறு, மதசார் கருத்துக்களை தமிழ் சிங்கள ஊடகங்கள் கையாளும் விதம். ஆகியவற்றைக் கூறலாம். இங்கே ஊடகவியலாளராகிய நாம் எந்த தரப்புடனும் கைகோர்க்காமல் பிரபல்யமானவர்களின் இத்தகைய அபிப்பிராயங்கள்  உண்மைத் தரவு சார்ந்ததா? உண்மைத் தரவு சாராதவையா? என்ற கோணத்தில் அணுகலாம். பன்மைத்துவ சமூகச் சிந்தனையை இவை எவ்வாறு பாதிக்கிறது? என்ற கோணத்தில் அணுகலாம். சாதாரண மக்களிடம் இவை ஏற்படுத்தும் தாக்கம் என்ற கோணத்தில் அணுகலாம். இந்தக் கோணங்களில் அணுகும்போது இவை வெறுமனே ஊடகவியலாளரின் அபிப்பிராயமாக இல்லாமல், காரண காரியங்களுடன், செய்தி மூலங்களுடன் தர்க்க நியாயங்களுடன் அமைக்கப்படவேண்டும். 

இவ்வாறு ஒவ்வொரு பார்வைக் கோணங்களில் இருந்தும் ஒரு கட்டுரையை எழுதமுடியும். நாம் கட்டுரைக்காக தேர்ந்தெடுக்கும் விடயம், நன்கு குவியப்படுத்தி(focus) ஆழமாக பார்க்கப்படவேண்டும். 


ஒரு தமிழ் ஊடகவியலாளர் ஒரு கட்டுரையை எழுதும்போது அது தமிழ், சிங்கள மக்களுக்கு எழுதுகின்றோம் என்று எண்ண வேண்டும். சிங்கள ஊடகவியலாளர் எழுதும்போதும் அது சிங்கள, தமிழ் மக்களுக்கே எழுதுகிறோம் என்று எண்ண வேண்டும். அவ்வாறு எண்ணுவோமானால் நாம் எழுதவேண்டிய பார்வைக்கோணத்தை எம்மால் இலகுவாக அமைத்துவிடமுடியும்.


(Sri Lanka Press Institute  இற்கு 2020 Oct இல் எழுதியது )

கௌரிமகா




 



Tuesday, August 25, 2020

 www.slpi.lk 

வெறுப்பூட்டும் பேச்சுகள் மீது கேள்விகளை எழுப்புங்கள்!  

இந்த மாத முற்பகுதியில் இலங்கையில், சைவம்களால் பாடல்பெற்ற தலம் என போற்றப்படும் பாட நூல்களிலே குறிப்பிடப்படும் கோணேச்சர கோவில் பற்றி ஒரு தகவல் வெளிவந்தது. கோணேச்சரம் கோயில் அல்ல அது கோகர்ண விகாரையே! என்ற செய்திதான் அது. அதன் பின்னர் பெரும்பாலான தமிழ் ஊடகங்களின் பேசுபொருளே அதுவாக மாறியது. இணையத்தளங்கள், சமூக ஊடகங்கள் என தமிழ் மக்கள் எதிர்வினையாற்ற தொடங்கினர்.

இந்தச் செய்தி வரலாற்று ரீதியான மிகப்பெரிய பொய் என அனைத்து ஊடகங்களிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கும் அப்பால் இனரீதியான வெறுப்பூட்டும் பேச்சுகள் சமூக ஊடகங்களில் தாராளமாகவே வந்து குவிந்தன. இன்று வரை இதுபற்றிய விமர்சனங்கள் கொந்தளிப்பாகவும், ஆவேசமாகவும், வரலாற்றை முன்னிறுத்தி எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்தக் கருத்தை வெளிப்படுத்தியவர் ஒரு கல்வியியலாளர் அதற்கும் மேலால் ஒரு மதகுரு என எதுவும் கவனிக்கப்படாமல் மக்களில் அனேகர் இனம்சார் குரோத மனப்பாங்கை வெளியிட்டிருந்தனர். அந்தளவிற்கு தமிழ் சைவமத மக்களின் மனங்களில் இனகுரோதத்ததை வெறுப்பூட்டும் நிலையை உளவியல் ரீதியாக உருவாக்கியிருந்தது அந்த செய்தி. தேர்தல் காலத்தில் மக்களின் நம்பிக்கைகள், தெரிவுகள் எல்லாவற்றிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்ததும் செய்தியாகவும் அது இருக்கவும் வாய்ப்புள்ளது. ஏனெனில் அதன்பின்னர் பல்வேறு தழிழ் அரசியல்வாதிகளும் இந்தக்கருத்துக்கு எதிர்வினையாற்றும்போது மேலாதிக்கம் செலுத்தும் இனத்தின் பண்புகள் சிறுபான்மை இனத்தின் வரலாற்றை அழிப்பதில் முனைப்புற்றிருக்கும் என்ற கருத்துக்கள் வெளிப்படும் வகையில் இனத்துவத்தை முன்னிறுத்தியே தமது கருத்துக்களை முன்வைத்தனர். சிலர் எள்ளி நகையாடினர்.
அந்த வகையில் இந்த செய்தி இலங்கை வரலாற்றுக்கும் அதன் உண்மைக்கும் புறம்பானது என்பதை தமிழர் தரப்பு ஆணித்தரமாக முன்வைத்து வருகிறது. அதன் அடிப்படையில் சைவமகாசபை, கோணேசர் ஆலய பரிபாலன சபையினர் பல்வேறு வரலாற்று ஆதாரங்களை முன்வைத்து அறிக்கைகளை வெளியிட்டனர். அரசியல்வாதிகளில் சிலர் சைவத்தை முன்னிறுத்தி பகிரங்க விவாதத்திற்கும் அறைகூவல் விடுத்தனர்.

இந்த நிலையில், முதலில் இக்கருத்து உண்மைத்தரவாக(கயஉவ) முன்வைக்கப்பட்டதா? அபிப்பிராயமாக (ழிinழைn)முன்வைக்கப்பட்டதா? இவ்வாறு முரண்பாட்டை உருவாக்குகின்ற கருத்துக்களை ஒருவர் வெளியிடும் போது ‘இது உங்கள் அபிப்பிராயமா? உண்மைத்தரவா என்பதை கேள்வியாகக்கேட்டு, உண்மைத்தரவாயின் ஆதாரம் எது என்பதையும் கேட்டு அதையும் இணைத்து தகவலைவெளிப்படுத்தலாம். இந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு இருக்கக்கூடிய அறிவு ஆற்றலைக்கொண்டு மேலும் பல கேள்விகளை கேட்டு அது அபிப்பிராயமா? உண்மைத்தரவா? என்பதை மக்களுக்கு உணர்த்தலாம்.

“இத்தகைய கருத்துக்களை பொது வெளியில் வைப்பதும் ஊடகங்களில் அவை வெளிவருவதும் இனங்களுக்கிடையிலான முறுகல் உளநிலையை மேலும் வலுப்படுத்துவதாகவே அமைகிறது” என்கிறார் யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைநெறியின் தலைவர், கலாநிதி எஸ். ரகுராம். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில்,
“இத்தகைய செய்திகள் தவறான வரலாற்று தகவல்களே. ஆனாலும் சொல்லப்படும் நபர் சொல்லப்படும் இடத்தைப் பொறுத்து அது செய்தியாக உருவாக்கப்படுகிறது. இதைக்கூறியவர் சாதாரண நபர் அல்ல. தொல்பொருள் இடங்களைப்பாதுகாப்பதற்காக ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட செயலணியின் முக்கியஸ்தர். அதுமட்டுமல்லாமல் தொல்லியல் அறிஞர். அவரது வாயால் இத்தகைய வரலாற்றுத் தவறான தகவல்கள் முன்வைக்கப்படும்போது இனத்துவ ரீதியான சந்தேக சிந்தனையே தமிழர்கள் மத்தியில் உருவாகின்றது. அதனால் பொதுமக்களுக்கான ஆர்வமூட்டும் செய்தியாக இது மாறுகிறது. ஆனாலும் இதை பிரசுரிப்பதால் மக்கள் பயன் என்ன என்று பார்த்தால், அந்த குறித்த தரப்பினர் பற்றி அவர்களின் நடவடிக்கைகள் பற்றி வரும் காலத்தில் மக்கள் கவனமாக செயற்படவேண்டும் என்பதை அந்த செய்தி சொல்லாமல் சொல்லும். அதேவேளை இதற்கான எதிர்வினைகள் வரலாற்று உண்மைகளுடன் சிங்களப்பத்திரிகைகளில்தான் எழுதவேண்டும். சிங்கள மக்களுக்கு உண்மைகள் போய்ச்சேரும் சந்தர்ப்பங்களை உருவாக்கவேண்டும். இந்த எதிர்வினைகளை தமிழில் மட்டும் மீண்டும் மீண்டும் எழுதுவதால் மீண்டும் மீண்டும் மக்கள் மனதில் இனம் சார்ந்த குரோத மனப்பான்மைக்கு எண்ணெய் ஊற்றுவதாகதான் அது அமைகிறது.” என்றார்.

ஆம், தேடிப்பார்த்தளவிற்கு சிங்களப் பத்திரிகைகள் எதுவும் இவற்றைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆங்கிலத்தில் ஒரு சில கட்டுரைகள் வெளிவந்தன. இந்த இடத்தில்தான் தேர்தல் காலத்தில் இவ்வாறான, முரண்பாட்டை தோற்றுவிக்கும் ஒரு செய்தி பரப்பப்பட்டுதற்கு அரசியல் காரணங்களும் இருக்கலாம். அதற்குள் மக்களை சிக்கவைத்து சமூக ஊடகங்களில் வன்மங்களைக் கக்க வைக்கும் ஒரு நிலையை உருவாக்கியதில் கௌரவ தேரருக்கும் ஊடகங்களுக்கும்தான் பெரும் பங்குண்டு.

இந்த செய்தி வந்த அடுத்தடுத்த திகதிகளில் ஒரு பத்திரிகையில் இதே செய்தியையும் வெளியிட்டு அருகில் வரலாற்று அறிஞர், போராசிரியர் ஒருவரின் கருத்தும் வந்தது. அந்த செய்திக்கு தலைப்பு இவ்வாறிருந்தது. ‘வரலாறு தெரியாதவர்கள் வாய் திற்கக்கூடாது’ என்றே தலைப்பிட்டிருந்தது. இந்த செய்திக்கான முதல் தலைப்பிலும் ‘….தேரர் பிதற்றல்’ என்பதாகவே இருந்தது. இதுபோல் உள்நாட்டு வெளிநாட்டு தழிழ் ஊடகங்களில் வெளியான தலைப்புகளை ஆராய்ந்தால் அந்த கருத்தைச் சொன்னவர் மீதும் அவரது இனத்தின் மீதும் மக்களுக்கு நகைப்பும் வெறுப்பும் ஏற்படும் உளநிலையைத்தான் அவை தோற்றுவித்தன.
பெரும்பாலான தமிழர்கள், இலங்கையில் வாழும் சைவமதத்தவர்களின் மனங்களை இந்த செய்தி புண்படுத்தியிருப்பதாக உணர்கின்றனர். வரலாற்றை திரிபுபடுத்தும் இந்தமாதிரியான சம்பவங்கள் இன்று நேற்றல்ல பலகாலமாக நடந்து வருவதையும் சம்பவரீதியாக மீட்டெடுத்து அபிப்பிராகக் கட்டுரைகளும், வரலாற்றுக் கட்டுரைகளும் இணையத்தளங்களில் உலாவருகின்றன. இந்த நிலையில் இலங்கையின் மூத்த குடிகள் தமிழரா? சிங்களவரா? இஸ்லாமியரா? என்ற வாதப்பிரதிவாதங்களும் ஆங்காங்கே ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டுவருகின்றன. இந்த வரலாற்று தொன்மையை ஆராய்வதில் எந்தவித உண்மைத்தரவுகளையும்விட அபிப்பிராயங்களே அதிகளவில் பகிரப்பட்டுவருகிறன. அந்த அபிப்பிராயங்களும் தமது இனத்தை முனைப்புறுத்தி மற்ற இனங்களை சிறுமைப்படுத்தும் அளவிற்குதான் வெளிப்படுத்தப்படுகின்றன. வெறுப்பூட்டும் செய்திகளின் தொடர்ச்சியாக நாம் இதைப்பார்கலாம். எனவே ஒரு செய்தி வெளிப்படுத்தப்பட்டவுடன் அது அதனுடன் நின்று விடுவதில்லை. உளரீதியான வெறுப்பூட்டல்களை உருவாக்கும் செய்திகள் மக்கள் மனங்களில் தொடர்ந்து பல்வேறு விதங்களில் வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் என்பதற்கு இது நல்ல உதாரணம்.

“ஒரு வராற்றைப்பற்றி கதைக்கும்போது நாம் அந்த வரலாற்றை எப்படி ஆழமாக பார்த்திருக்கிறோம் என்பது முக்கியமானது. இலங்கை வரலாற்றை பார்கின்றபோது சைவமும் பௌத்தமும் தொன்று தொட்டு, இப்போது இருப்பது போன்று இனத்துடன் பிணைக்கப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் தமிழ் பௌத்தர்களும் இருந்துள்ளார்கள் என்பது வரலாறு. எனவே மதப்பண்பாட்டுடன் மட்டும் வைத்துப்பார்க்கவேண்டிய, ஆராயவேண்டிய தொன்மங்களை நாம் ‘சிங்கள பௌத்தம்’ என இனத்துடன் பிணைக்கப்பட்ட ஒன்றாக அந்த பண்பாட்டை விளக்கிக்கொண்டு விளக்க முயல்வதே இத்தகைய வரலாற்று தவறுகளுக்குக் காரணம். இந்த வரலாறுகளை அறிந்திருந்தாலும் சிலர் எதிர்கால வரலாற்றை எழுதுவதில் நாட்டம்கொண்டு கடந்தகால வரலாற்றை அழித்து எழுத முனைவதே இத்தகைய போக்குகளில் இனம்காணக்கூடியதாகவுள்ளது” என்கிறார் யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்.

இவ்வாறான செய்திகளை ஊடகங்கள் வெளிப்படுத்தும்போது சொல்லப்பட்ட கருத்து உண்மைக்கு புறம்பானதாக இருக்குமேயானால் அதற்குரிய கனதியை வழங்கி உண்மைத்தரவுகளுடன் ஒரே நேரத்தில் இரண்டையும் சேர்த்து வெளியிடும்போது மக்கள் மனதில் தோன்றும் வெறுப்பு விரோதம் குறைவடையலாம்.

அதே நேரம் எல்லோருக்கும் தெரிந்த உண்மை இவருக்கு தெரியவில்லையே என்று நினைத்து மிகப்பிரபலமான ஒருவரை மட்;டம்தட்டுவதுபோல் தலைப்பிடுகின்றபோது அந்த செய்தியின் கனதி குறைக்கப்படுகிறது. அதேநேரம் குறித்த இந்த சம்பவத்தில் தொல்லியல்சார் நிபுணருக்கு வரலாறு தெரியவில்லை என்பதும் நம்பமுடியாதது என்றும் இது திட்டமிட்ட அரசியல் பின்னணி கொண்ட செயற்பாடாக இருக்கலாம் என்றும் நம்பும் பட்சத்தில் ஊடகவியலாளர் மேலதிக கேள்விகளைத் தொடுக்கவேண்டும். அந்த மேலதிக கேள்விகளால் பதில் சொல்பவர் வரலாற்றை மறைக்க முற்படுவதையோ அல்லது தனது சொந்த அபிப்பிராயம் இது என்பதையோ இனங்காணமுடியும்.

இதே வேளை இதையொட்டி இஸ்லாமிய முக்கியஸ்தர் ஒருவர் கோணேஸ்வரர் கோயிலின் அருகில் உள்ள சமாதி பற்றியும் இராவணன் பற்றியும் குறிப்பிடுகின்றார். அவை எல்லாம் இஸ்லாம் மதத்திற்குரியன என்றும் இராவணன் இஸ்லாமியர் என்றும் குறிப்பிடுகிறார். இதற்கும் ‘சமூக ஊடகப் போராளிகள்’ கொதித்தெழுந்து வெறுப்பூட்டும் பேச்சுகளை எழுதியும் பேசியும் வருகின்றனர்.
எனவே எதிர்வினையாற்றும்போது வெளிப்படும் வெறுப்பு பேச்சுகள் நேரடியாவே ஒரு இனத்தை இழித்துரைப்பதற்கும், நகைப்பதற்கும்,குரோதம் வளர்ப்பதற்கும் ஏதுவாக உள்ளது. அதே நேரம் இந்த எதிர்வினைக்கு காரணமாக இருந்த கருத்துக்கள் சாதாரணமானவை என்று சொல்லிவிடமுடியாது. அந்தக் கருத்துக்கள் குறித்த இனத்தை, மதத்தை, குழுவை வெறுப்பூட்ட வைக்கும் கருத்துக்காளாக இருப்பதும் வெறுப்பு பேச்சாகத்தான் கொள்ளப்படும். இது உளரீதியான ஒரு கருத்துருவாக்கம்தான்.
இந்த வெறுப்பு பேச்சை குறைக்கவேண்டுமானால், அது தொடர்பில் மீண்டும் மீண்டும் பல்வேறு கேள்விகளை ஊடகவியலாளர்கள் கேட்கவேண்டும்.

• இதனூடாக நீங்கள் சொல்லவருவது என்ன?
• நீங்கள் சொல்வதை நான் ‘இந்த விடயம் இந்த இனத்திற்கு மதத்திற்கு பாலிற்கு எதிரானது என…’ இப்படி எடுத்துக்கொள்ளலாமா?
• இப்படி நீங்கள் சொல்வதற்கான காரணங்கள் எவை?
• உங்கள் பதில்களில் உண்மைத்தரவுகளைவிட அபிப்பிராயங்களளே அதிகம் உள்ளன. அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?
இந்த வியடத்தில் வெளிநாட்டு ஊடகம் ஒன்று முயற்சி செய்திருந்தது. அதன்படி ‘இது பாடல் பெற்ற தலங்களில் ஒன்று என்ற உண்மைத்தரவு பல இடங்களில் உள்ளனவே’ அதற்கு என்ன சொல்கிறீர்கள்? என கேட்டபோது, ‘பிற்காலத்தில் ஒவ்வொருவரும் தமக்கு ஏற்றமாதிரி அதனை மாற்றி அமைத்துக்கொண்டார்கள்’ என மிக இலகுவான பதிலளித்திருந்தார். இது ஒரு பொறுப்பான பதில் என்ற கூறமுடியாது ஆனாலும் ஓரளவிற்கு உண்மைத்தன்மையான தரவுகளில் இருந்து அவர் நழுவுகிறார் என்ற கருத்து உய்த்து உணரப்படுகிறது. இவ்வாறான தொடர் கேள்விகளினூடாக அவருக்கு வேறு ஏதாவது அரசியல் நோக்கங்கள் உள்ளனவா என்பதையும் வெளிப்படுத்த முடியும்.  - GowryMaha.

Thursday, May 30, 2019

‘மனவானின் மழைத்துளிகள்'

கவிஞர் வேலணையூர் இ.சுரேசின் மனவானின் மழைத்துளிகள் என்ற 
கவிதைத்தொகுதியின் (கொழும்பில் )வெளியீட்டில்.....

‘மனவானின் மழைத்துளிகள்’ உங்கள் மீது படுவதற்கு நான் எதையாவது செய்யவேண்டும். என்னிடம் கேட்டுக்கொண்டார்கள்.
நன்றி.

எதையாவது அறிமுகம் செய்யவேண்டும் என்றால், அறிமுகம் செய்பவருக்கு அதைப்பற்றி தெரிந்திருக்கவேண்டும்.
எனக்கு ஆசிரியரைத் தெரியாது.
அவரது நூலைத் தெரியாது.
ஆனால் கொஞ்சம் கவிதை பற்றித் தெரியும் என்று நான் நினைக்கிறன்.

‘மனவானின் மழைத்துளிகள்’! நல்ல குளிர்மையான தலைப்பு! ஆழகான காட்சி!
ஆனால் வெப்பிசாரம் என்ற வார்த்தை ஒன்று உண்டு. இந்த மனவானின் வெப்பிசாரம் மழைத்துளிகளாகத்தான் இருக்கும் என்று நாம் நினைக்கமுடியாது. இடி மின்னலுடன் கூடிய சோவெனப் பெய்யும் பெருமழை இது.!

கவிதை என்பது சொற்களையும் தாண்டி மனத்துள் நிகழ்த்தும் உணர்ச்சி. அந்த உணர்ச்சியை வாசிப்போருக்கு தொற்றவைக்க வேண்டுமென்றால் தேர்ந்தெடுத்த சொற்கள் முக்கியம். அந்த சொற்களைத் தேர்தெடுப்பதில்தான் அது ஆழமான கவிதையாகவும் ஆழமற்ற கவிதையாகவும் பார்க்கப்படுகிறது. ஒரு சொல் சொல்லும் கருத்தும் உணர்த்தும் கருத்தும் இலகுவில் எல்லோரையும் சென்றடைவதில்லை.

தனது உணர்வை வார்த்தைகளால் வடிக்கும் கவிஞர் உள்மனயாத்திரை செய்கிறார்;. அதன்போது அவருக்கு சொற்கள் வாய்க்கிறது. யார் உள்மனயாத்திரை செல்கிறாரோ அவர் கவிதை வடிக்கிறார். அதனால்தான் காதல் வந்தால் கவிதை வரும் என்றார்கள். காதல் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான உணர்வு. அந்த உணர்வுக்கு சொற்களைக் கண்டுபிடிக்க உள்மன யாத்திரை செல்லவேண்டும். தன்னுணர்வில் சஞ்சரிக்கும் அவர் அதை வெளிப்படுத்த சொற்களைத் தேடித்தேடி சேர்ப்பார். அவர் எழுதும் சொற்கோர்வை கவிதையாகிறது. இதுதான் காதல் வந்தால் கவிதை வரும் என்ற தத்துவம் என நான்புரிந்துகொள்கிறேன்.

இந்தக்கட்டத்தைக் கடந்து உள்மன யாத்திரையினூடாக வாழ்க்கையை சூழலை வியாக்கியானம் செய்வதும், மனித இருப்புக்கு அர்த்தம் கற்பிக்கும் விடயங்கள்மீதான நம்பிக்கையின்மையும், முன்பு செப்பனிட்ட பாதைகளை மீண்டும் தேடும் ஆதங்கமும் என விரிகிறது கவிதை. மனவானின் மழைத்துளிகளும் அவ்வாறுதான் நீள்கிறது.

எம் குடைகளை அகற்றி இந்தத் தூறலில் இதம்காணவும் சுகம்காணவும் முடியும். ஆனாலும் இடியும் மின்னலும் இருக்கும் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

இன்றைய நவீனயுகத்தில் எந்தத்தடையும் அற்ற படைப்புவெளியில் எல்லோர் குரலும் ஒலிக்கிறது. ஒன்றின் மீதான பார்வைக்கோணம் 360 பாகைகளில் எல்லோருக்கும் பார்க்கமுடிகிறது. நவீன ஊடகங்களில் சமூக ஊடகங்களில் அதற்கான இடம் உண்டு.

நாம் எடுத்துக்கொண்ட பேசுபொருள் நாம் நினைப்பதுபோல் மட்டும் கட்டமைத்துவிடமுடியாது. 360 பாகைக் கோணங்களும் எமக்குத் தெரிகிறதென்றால் நாம் கட்டமைக்கப்போகும் கருத்து எந்த ஆழத்தில் இருக்கவேண்டும்! அதற்கும் இந்த தூறல் இடம்கொடுக்கிறது. ‘பாவம் பிரமன்’ இதற்கு ஒரு உதாரணமாகச்சொல்லமுடியும். ஆனாலும் அந்தக்கருத்துகளில் எனக்கு மாற்றுக்கருத்துண்டு பெண் என்ற வகையில்.

நூல்களை நாம் ஏன் வாசிக்கவேண்டும்?
நமது வாசிப்பின் குறிக்கோள்தான் அதை தீர்மானிக்கவேண்டும்.
பொதுவாக கவிதை இரசனைக்குரியதுதான். அந்த ரசனைக்குப் பின்னால் பெரும் கருத்துக்கிளர்ச்சியை ஏற்படுத்துவதும் கவிதைதான். குவிதையை வாசிக்க கற்பனை வேண்டுமென்பர். ஏனெனில் சொல் புரியவைக்கும் அர்த்தத்தைவிட அதற்கு அப்பால் உள்ளதை புரிந்து உணர்ந்துகொள்ள கொஞ்ச கற்பனை வேண்டும். இந்த மழைத்துளிகளுக்கு அது பெருமளவு தேவைப்படாது. அது வெளிப்படைத்தன்மையான பளிங்கு கற்களாய் உள்ளது. எல்லாம் பட்டவர்ததனமாக வெளித்தெரிகிறது.படித்துப்பாருங்கள்.

புதுக்கவிதையின் தன்மையான, ‘தீவிரத்தன்மைக்கு இடம்கொடுத்தல்’ என்பது பாரதியார் ஆரம்பித்தது. அந்த அந்த காலத்தில் இருக்கக்  கூடிய நடைமுறைகள் மீதான எதிர்ப்புக் குரல்கள் எள்ளி நகையாடுதல் என்பன மின்னலும் இடியுமாக இங்கிருக்கிறது என இந்த மழைத்துளிகளை பெருவெள்ளமாக உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

அறிமுகம் செய்யும் போது ஒருவருக்கு தெரிந்ததை வைத்துதான் அதைப் பிரபல்யப்படுத்தமுடியும். ‘பிரபல்யம்’ என்ற வார்த்தை வந்தவுடன் எனக்கு நினைவு வருவது இங்குள்ள ஒரு கவிதை 'ஊடக இலச்சணம்? ' (தோசையின்ர திறத்தில ஆட்டுக்கல்லுக்கு பூமாலையா ?எண்டு கேட்டதைப்போல் என்னை யாரோ கேட்பதுபோல் இருக்கிறது. பரவாயில்லை.)

ஆடுபவர்களைத் தெரியும் அளவுக்கு ஆள்பவர்களைத் தெரியவில்லையா என்பதுதான் கேள்வி. யர் ஆடுபவர்கள்? சினிமாவில், விளையாட்டில்...
ஆள்பவர்கள்? எழுத்தை ஆள்பவர்கள்.
ஊடகத்தின் அடிப்படை வியாபார தந்திரமே பிரபல்யமானவையும் வழமைக்ககு மாறானவையும் மக்களைக் கவரக் கூடியவை என்பதுதான். சினிமாக்காரரும் விளையாட்டுக்காரரும் எம் கண்முன்னே செயற்பாட்டாளர்களாக இருப்பது பலருக்கும் நன்கு தெரியும்.
எழுத்தாளர்களாயின் செயற்பாடு யாருடைய கண்ணுக்கும் தெரியாது மூளைக்குதான் தெரியும். எனவே இந்த வெகுஜன கூட்டத்தினருக்கு கண்ணில் பட்டு பிரபலம் அடைந்தவர்களைத்தான் கொடுக்கமுடியும். மூளைப் பிரபலங்கள் வெகுஜன திரளாவது கடினம். இதுதான் எனது புரிதல். ஆனால் இந்த மூளைச் செயற்பாட்டாளர்களால்தான் உலகம் வடிவமைக்கப்படுகிறது. இந்த உண்மையையும் நாம் மறந்துவிடக்கூடாது.

இந்த நவீன யுகத்தில் ஊடகப்பெருவெளியில் உலாவுங்கள். கண்ணுக்குத் தெரிவதைவிட மூளைக்குத் தெரிவது பிரபலமாகும். எமது மூளையை நாம் பிரபலமாக்கவேண்டுமென்றால் 360 பாகைக் கருத்துக் கோணங்களில் இருந்து புதிய கருத்துருவாக்கத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும். அதை இந்த இடிமழை ஒரு தூறலாய் செய்கிறது.



Tuesday, November 20, 2018



Elanko Dse
 இன் 
பேயாய் உழலும் சிறுமனமே என்ற நூல் மீதான மனப்பதிவுகள் (நன்றி : (Elanko Dse)
சக்தி தொலைக்காட் சியின்  எதிரொலி  நிகழ்ச்சியில் பெண்கள் தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலில்... (04.11.2018)

Friday, July 24, 2015

-Emilio Morales Ruiz, Spain

http://beijing20.unwomen.org/en/get-involved/comic-competition/winners


Tuesday, June 09, 2015

வசந்தம் தொலைக்காட்சியில் தாய்மை பற்றி ....


தாய்மை பற்றிய பெருமிதங்களும் உன்னதங்களும் பெண்ணிற்கு பெரும் சுமை.

Friday, April 17, 2015

இணையத்தில் இலக்கியம் - எழுத்திற்கான ஜனநாயகக் களம்

கொழும்பு தழிழ் சங்கத்தில் நடைபெற்ற 'துரைவி' அவா்களிள் நினைவுதினத்தில் நினைவுப்புபேருரைக்காக வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை.
இணையத்தில் இலக்கியம் - சில குறிப்புகள்

இணையத்தில் இலக்கியம் என்ற இந்த பொது தலைப்பில் நவீன ஊடக சூழலில் இலக்கியம் பற்றிய என் அவதானிப்புகளை முன்வைக்கிறேன்..குறிப்பாக இங்கு நவீன ஊடகங்கள் சார்ந்து நவீன இலக்கியங்களின் போக்கை கணிப்பிட முயன்றுள்ளேன்.
நவீன இலக்கியங்கள் என்று சொல்லப்படுகின்ற கதை,கவிதை,நாவல் வகையறாகளின் வெளிப்பாடும் இருப்பும் இந்த தொழில் நுட்ப கலாசாரத்தில் எத்தகையதாக இருக்கிறது?நவீன ஊடகம் இவற்றில் எத்தகைய தாக்கத்தை செலுத்துகிறது?என்பதற்கான விடைகளை தேடிய ஒரு ஆய்வாகவே இது அமையும்.
குறிப்பாக 1970 களில் அடித்தளமிடப்பட்ட இணையத்தில் ஆரம்பித்து கடந்த ஆறு ஆண்டுகளாக விஸ்வருபம் எடுத்திருக்கும் சமூக வலைத்தளங்கள் (முகப்புத்தகம் 10ஆம்வருடம்) வரை இலக்கியம் பரிணமித்திருக்கிறது.இதனூடாக ஒரு இலக்கியகாரருக்கு அவரது ஒட்டுமொத்த எழுத்து சூழல் மாறியிருக்கிறது.
ஒரு கதையை எழுதி இரண்டு பேரிடம் கொடுத்து சரிபார்த்து அல்லது வெகுஜன ஊடகத்தில் பிரசுரத்திற்கு அனுப்பி அது வெளிவந்து ,சிலவேளை வெளிவராமலும் இருக்கும் நிலையில் பின்னர் அதை நூலாக்கி அறிமுகப்படுத்தி ,வாசிப்புக்கு விட்டு ,விமர்சனத்துக்குள்ளாக்கி ஒரு மீள்ளுட்டத்தைப் பெறும் பொறிமுறை உண்மையில் பிரசவம்தான்.காலமும் பொறுமையும் அந்த இலக்கிய காரரின் சிந்தனைக்கே சிறைவைத்துவிடுகிறது.அடுத்த படைப்பிற்கு வெகுகாலம் எடுக்கிறது.
இணையத்தால் இந்த ஒட்டுமொத்த சூழல் இன்று மாறியிருக்கிறது.
இதை ‘எண்ணிம இலக்கியம்’ (Digital literature) )இலத்திரனியல் இலக்கியம்(Electronic literature) என்று குறிப்பிடலாம்.புதிய தொழில் நுட்பத்தை அறிந்து இணையத்தை கையாளத் தெரிந்தவர்கள் அனைவரும் தமது சிந்தனைகளை எழுத்துக்களாக மக்கள் முன் வைக்கத் தொடங்கிவிட்டனர்.இந்த இணைய தொழில் நுட்பம் எண்ணங்களை பாரிமாறுவதற்கான ஒரு ஊடகம், என்பதற்கு அப்பால் இது ஒரு உயிரியாகவே பலருக்கும் ஆகிவிட்டது.தனது எல்லா சுக துக்கங்களையும் அதனுடன் பகிரத்தொடங்கிவிட்டனர்.பலரது நேரம் அதனுடன்தான் கழிகிறது.
இந்த புதிய சூழலில் எழுத்துக்களை முன்வைப்பவர்கள் பெரும்பாலும் புதிய தொழில் நுட்பம் தெரிந்த இளவயதினராக உள்ளனர் என்பதும் உலகளாவிய ரீதியில் செய்யப்பட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.(18 முதல் 45 வரை)இது இளம் எழுத்தாளர்களை உருவாக்கும் களமாக உள்ளது.இது ஒரு புறமிருக்க,
இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் ஏற்கனவே எழுத்தாளர்களாக முத்திரை பதித்தவர்கள் தமக்கான எழுது களத்தை விரிவுபடுத்தும் நோக்கில் இணையத்தளங்களையும் ,வலைப்புக்களையும் முகப்புத்தகத்தையும் பயன்படுத்திவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதை உற்பத்திசார் முறை மாற்றமாகவே கொள்ளலாம்.மரபார்ந்த ஊடகங்கள் மற்றும் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் எவ்வாறு சமூக ஊடகங்களை தமது உற்பத்தி நடவடிக்கைக்காக பயன்படுத்துகின்றனவோ அதேபோல் எழுத்தாளர்களாக இருந்தவர்கள் உற்பத்தி சூழலை மாற்றியுள்ளனர்:மாற்றவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும்.இதற்குள் சிற்றிதழ்களும் அடக்கம். அச்சில் வருகின்ற ஏராளமான சிற்றிதழ்கள் இணையப்பதிப்பாகவும் வெளிவருகின்றன.அதேவேளை இணைய இதழ்களாக மட்டும் வரக்கூயவையும் உள்ளன.திண்ணைதான் முதல் இணைய இதழாகக் கொள்ளப்படுகிறது.பின்னர் தமிழ் முழக்கம்,வரலாறு.கொம்,நிலர்சசாரல்,தங்கமீன் ,சொல்வளம்,வல்லமை, தமிழோவியம் (www. tamiloviam.com) திசைகள் (www.thisaigal.com), பதிவுகள் (www. pathivukal.com)என் பட்டியல் நீளுகிறது.இவையனைத்திலும் ஆக்க இலக்கியங்கள் வாசிப்பிற்கு வந்துள்ளன..இலக்கியம் பற்றிய வாத பிரதி வாதங்கள் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.
அதே வேளை பல எழுத்தாளர்கள் தமக்கென பிரத்தியேக தளங்களையும் உருவாக்கியுள்ளனர்.
இந்நிலையில் இப்புதிய சூழலின் தன்மையைப் பார்ப்போம்,மரபார்ந்த இலக்கிய உற்பத்தியில் ஒவ்வொரு செயற்பாடும் வெவ்வேறு களங்களிலே செயற்பட்டதும் கால அவகாசம் எடுத்துக்கொண்டதும் முக்கிய அம்சங்கள்.இங்கே எல்லாமே ஒரு தளத்தில்,ஒரே நேரத்தில் செயற்படுகிறது.அதாவது,
எழுத்து – வெளியீடு – வாசிப்பு – விமர்சனம் – பின்னுட்டம்.
ஒரு கவிதையை முகப்புத்தகத்தில் எழுதிய அடுத்த கணம் வெளியீடு முடிந்து வாசிப்பு முடிந்து ‘விருப்பம் ‘ என பின்னூட்டம் வருகிறது.சில நிமிடங்கள் சில மணித்தியாலங்களில் விமர்சனமும் வந்துவிடுகிறது.கவிதையை எழுதியவர் அடுத்த கவிதைக்கு தயாராகி விடுகிறார்.அவரது சிந்தனை அடுத்த அடுத்த கட்டங்களுக்கு நகருகிறது.எல்லா இலக்கிய முயற்சிகளுக்கும் இந்த பொறிமுறை பொருந்துகிறது. காலம் கொஞ்சம் வேறுபடலாம்.
இந்த புதிய இணைய கலாசார சூழல் அல்லது இந்த பொறிமுறை செலவு குறைந்தது,சுதந்திரமானது.இதனால் இந்த பொறிமுறை அபரிதமான ஆக்கங்களை இலக்கிய உலகிற்கு தந்து.கொண்டிருக்கதிறது.நவீன இலக்கியம் என்ற வகையறாக்களை கடந்து புதிய வடிவங்களை இந்த சூழல் கோருகிறது.குறிப்பாக எழுத்தை ஆள உனக்கும் முடியும் என எல்லோரையும் உசுப்பிவிட்டுள்ளது.
இங்குதான் இலக்கியத்தில் வடிவம், தரம் சார்ந்த பிரச்சினைகள் எழுகின்றன. எழுதுவதெல்லாம் இலக்கியம் ஆகிவிடாது என ஒரு சாரார்,குப்பைகள் எல்லாம் இலக்கிய தரத்தை நாடி நிற்கின்றன என ஒரு சாரார், இலக்கிய வடிவத்திற்குள் இருக்க வேண்டிய சமூக விழுமியங்கள் வரம்புமீறுகின்றன என ஒரு சாரார் வேதனையுடனும் கோபத்துடனும் தமது கருத்துக்களை முன்வைக்கின்றனர்.எனவே இந்த சூழலை எப்படி புரிந்துகொள்வது?பார்ப்பது?
புதிய சூழலின் முக்கிய தன்மையாக இருப்பது ‘சுதந்திரகளம்’. எதையும் எழுதலாம் ;எவரும் எழுதலாம் ;எப்படியும் எழுதலாம் ,வாசிப்பு நடந்துகொண்டிருக்கிறது. நடந்தவை,நடப்பவை ,நடக்கப்போகின்றவை என எவற்றையும் ஒவ்வொரு கணமும் பொதுமக்கள் முன் வைக்கமுடியும்.கட்டற்ற எண்ண பதிவுகள்.முகநூல் இதற்கு முக்கிய சாட்சி. 10க்கும் மேற்பட்ட சமூக வலைத்தளங்கள் இன்று உள்ளன.இலங்கையில் 2013 எடுக்கப்பட்ட தகவலின்படி 1.5 மில்லியன் முகப்புத்தக பாவனையாளர்கள் உள்ளனர்.இவர்களில் 68 வீதம் ஆண்கள் 32 வீதம் பெண்கள் என ‘ஸ்ருடன்ற் சிறீலங்கா’ இணையத்தளம் குறிப்பிடுகிறது.இலக்கிய களத்தில் இந்த சுதந்திர எழுத்து முறைமை எத்தகைய தாக்கத்தைச் செலுத்துகிறது?
முதலாவது , அதிகாரம் யாரையும் எந்த எழுத்தையும் இருட்டடிப்பு செய்யமுடியாது.இலக்கிய உற்பத்தி முறைமை ஜனநாயகப்படுத்தப்பட்டுள்ளது.அச்சு அறிமுகமானபோதும் அது ஜனநாயக உற்பத்தி முறையாகத்தான் பர்க்கப்பட்டது.ஆனாலும் அதில் சில அதிகார அரசியல் உண்டு.இங்கு இந்த இணைய சூழல் அவ்வாறானதல்ல.முற்றுமுழுதான தூய்மையான ஜனநாயக முறையிலான உற்பத்தி.யாரும் எழுதலாம். எந்த எழுத்தையும் யாரும் இருட்டடிப்பு செய்துவிடமுடியாது. இதனால்தான் பெண்களின் குரல் விழிம்புநிலைமக்களின் வெளிப்பாடுகள், என குரலற்றவர்களின் குரல்கள் வெளிவரத்தொடங்கின.பெண்ணியம் டொட் கொம்மில் போனால் 32 க்கும் மேற்பட்ட பெண்களின் இணையத்தளங்களை எம்மால் பர்க்க முடியும்.இது இன்னும் அதிகரித்திருக்கும். நவீன இலக்கியங்கள் -சிறுகதை கவிதை- இதுவரை பேசாத பொருளை பேசின.மொழியின் போதாமைகூட உணரப்பட்டது. இப்படி பேசுகின்றபேது எப்போதுமே பெண்களுடன் இருந்த அனுபவங்கள் உணர்வுகள் மக்களுக்கு புதிய சிந்தனைகளாக புதிய அனுபவங்களாக தெரிந்தது..சொல்லப்படாத செய்திகளாக அவை இருந்தன. சாதி மத வர்க்க நிலையில் அடக்கப்பட்டவர்களின் நிலையும் இதுதான். குரலற்றவர்களாக இருந்தவர்கள் பேசத் தொடங்கினர்.இலக்கியத்திற்கு புதிய பொருள்களாயின அவை.
அடுத்தது எதுவும் எழுதலாம்.எப்படியும் எழுதலாம் -உள்ளதை உள்ளபடி எழுதுதல் அதிகரித்திருக்கிறது.
இலக்கியம், உள்ளதை உள்ளபடி புனைவுசார்ந்து செய்யப்படுவது.இங்கு இலக்கியம் புனையப்படவில்லை;செய்யப்படவில்லை.அப்படியே அனுபவ முன்வைப்பாக வெளிவருகிறது. இதை எப்படி பார்கலாம் ?மரபுசார் இலக்கிய ஆக்கம்,தனிமனித உணர்வை பொது தளத்திற்கு ஏற்றமாதிரி அல்லது பொதுமைப்பட்ட உணர்வு நிலைகள் மட்டுமே வாசிப்புக்கு வந்தன.இன்று தனிமனிதன் ஒரு சம்பவத்தில் தான் பெறும் உணர்வை,அனுபவத்தை வாழ்வை அப்படியே வாசிப்புக்கு முன்வைப்பதாக நிலைமை மாறியிருக்கிறது. அது இலக்கியமா?நான் நினைக்கிறேன்,ஆம்.இந்த மாதிரியான பதிவுகள் இலக்கியத்தில் ஒரு புதிய வடிவத்தை கோரியிருக்கிறது.இலக்கியம் என்றால் என்ன? என்பதற்கான புதிய அர்த்தத்தையும் கோருகிறது. சஞ்சயன் செல்வமாணிக்கம் எழுதும் சாதாரணமானவனின் மனது ‘ கற்பனை கலக்காத கதைகள் என்றம் குறிப்பிட்டுள்ளார்..யோ கர்ணன் எழுதும் கதையல்லாத கதைகள் ,அனுபவங்கள் அத்தகையன. என நான் பார்க்கிறேன்.(இவர்கள் சிறகதைகள் கவிதைகளையும் எழுதுகிறார்கள்)அஸ்ரப் சிகாப்தீன் எழுதும் புதிய இலக்கிய கதைகள் அல்லது அவரது முகநூல் பதிவுகள் உண்மையை மறைமுகமாகத்தான் சுட்டுகின்றன.
இத்தகைய எழுத்துக்களில் ஏற்றுக்கொள்ளத்தக்க, பெரும்பான்மைக்குரியதாக ,அல்லது இந்த குழுவிற்குரியது என்று சொல்லப்படத்தக்கதாக பொதுமைப்படுத்தும் பண்பு இல்லை. ஆனால் மனதை கட்டி இழுக்கும் ஆக்கங்களாக இவை உள்ளன.சமூக கருத்தியலில் அசைவை உண்டாக்குகின்றன.
இவ்வாறான பதிவுகளால் வாழ்வின்,மனிதனின், சம்பவத்தின் பன்மைத்துவ பண்புகள், குறிப்பாக சொல்லப்போனால் ஒரு மனிதனின் பல முகங்கள் ,சம்பவத்தின் பல கோணங்கள் வாசிப்புக்கு வருகிறது. இதனால் நல்லவை தீயவை என்ற கறுப்பு வெள்ளை தன்மை உடைபடுகிறது.ஒருவர் தனது கோணத்தில் இருந்து எழுதும் உண்மைகள்தான் இறுதி உண்மையாக இருக்காது.மற்றவர் தன்பக்க உண்மையை பதிலாக எழுதுகின்றபோது உண்மையின் முகங்கள் பலவாகிவிடுகின்றன.ஊடக தர்மத்தின் மிக முக்கிய கோட்பாடும் இதுவே. செய்தி உண்மையாக இருக்க வேண்டும் பக்கம் சாராமல் இருக்வேண்டும்.இதனால் ஒரு செய்தியில் பலபக்க கருத்துகள் பதிவாகவேண்டியுள்ளன.அந்த வகையில் பலபக்க கருத்துக்களைக் கண்டறிவதற்கு.இணையம் ஊடகவியலாளர்களுக்கு மிகப்பெரும் வரபிரசாதம்.ஆனால் இணையம் ஊடகவியலாளர்களுக்கு நம்பிக்கையான ஒரு மூலம் அல்ல.ஏனெனில் உண்மைபோன்ற பொய்கள் அதிகமாகவே உள்ளன.
இலக்கியத்தைப்பொறுத்தவரை இன்றைய முன்வைப்புகள்
வாழ்வை உண்மையாக அப்படியே முன்வைப்பது என்றாகிவிட்டது.இலக்கியம் சமூகத்தின் கண்ணாடியல்ல ,சமூகத்தின் வரலாறு,தனிமனித வரலாறு. இன்று முகப்புத்தகத்தில் இடும் பதிவுகளைப்பார்க்கும்போது தனிமனித வாழ்க்கை வரலாறு அதனூடனான அரசியல் வரலாறு ,சமூக வரலாறு என்பன இரத்தமும் சதையும் கலந்த புதிய இலக்கிய வடிமாக முன்னிற்கிறது.ஈழத்து அனுபவம் இதற்கு முக்கிய காரணம் என்றும் சொல்லலாம்.இதுவரை இருந்த எல்லா மனிதகுல புனித எண்ணங்களை அப்படியே புரட்டிபோடுகிறது. இவைதான் இணையம் உற்பவித்த முக்கிய இலக்கியவடிவமாக நான் கருதுகிறேன். இலக்கியத்தை குடுவைக்குள் அடக்கி பார்க்கமுடியாத தன்மையை இவை ஏற்படுத்தியுள்ளன.
மேலும் இந்த வாசிப்புக்கான சுதந்திரமும் பின்னூட்டலுக்கான சுதந்திரமும் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்குமான இடைவெளியை குறைத்திருகத்கிறது.அதேபோல் விமர்சகர்கள் என்ற தனியலகு நெகிழ்வடைந்துள்ளது.அதே வேளை இலக்கிய புரிதல் சார் வேறுபாடுகளால் குறைபாடுகளால் அபத்தமான சர்ச்சைகளை தோற்றுவிக்கும் அபாயமும் இதில் உண்டு.

அடுத்து இந்த புதிய சூழலில் எழுத்து – வெளியீடு –விளம்பரம் மூன்று தளத்திலும் எழுத்தாளர் ஒரே நேரத்தில் செயற்படுகிறார்.
ஒவ்வொரு எழுத்தாளர்களும் தத்தமக்கு என உருவாக்கிவைதிருக்கும் இணையத்தளங்கள் ,வலைப்பூக்கள் ,முகப்புத்தக பக்கங்கள் இங்கே குறிப்பிடத்தக்கன. இதில் தனது ஆக்கத்தைபதிவு செய்து முடிந்தவுடனே ஒரு பொத்தானை அமுக்கினால் வெளியீடும் விளம்பரமும் நடந்து முடிகிறது.இந்த தொழிற்பாடு இலக்கியகாரருக்கு புது உற்சாகத்தை அளிக்கிறது.அடுத்த வெளியீடுபற்றி சிந்திக்க தொடங்கி விடுகிறார்.இணைய சூழலை நன்கு பயன்படுத்தும் ஒரு இலக்கிய காரருக்கு ஆக்க இலக்கியத்திற்கு பயன்படும் சொற் தொகுதி பொருட் தொகுதி இரண்டும் விரிவடைந்திருக்கும்.உலகெங்கும் உள்ள தழிழ் மக்களை அவர்களின் வாழ்வை ,சுக துக்கங்களை தெரிந்துகொள்ளும் யதார்த்தம் இந்த சூழலில் இருக்கிறது. 2020 இல் உலகமே online இல் நிற்குமாம் ஆய்வு கூறுகிறது.

சரி புதிய குரல்கள் புதிய இலக்கிய வடிவம் என நவீன ஊடகம் ஏற்படுத்திவிட்டிருக்கும் இந்த சூழலில் அபரிதமான வரவுகள் உண்டு.எனவே புற்றீசல் போல் இணையத்தில் வரும் இலக்கியங்கள் நின்று நிலைக்குமா?
இக்கேள்விக்கு பதில் இன்று தரம்சார்ந்து சொல்லமுடியாது. கம்பராமாயணத்தைப்போல்,திருக்குறளைப்போல்,புதுமைப்பித்தனின் கதைகளைப்போல், அல்லது எஸ்.போ இங்குள்ள டொமினிக் ஜீவா ,நீர்வை,திக்வலைக்கமால் போன்றோரைப் போல் இன்றைய கதைகள் நின்று நிலைக்குமா?என்பதுதான் பலரது கேள்வி. ஏற்கனவே இங்கு பட்டியலிட்டவை தொடா்ந்ம் நின்று நிலைக்க வேண்டுமென்றால் எண்ணிமப்படுத்தவேண்டிய சூழல் இன்று உருவாகிவிட்டது.அது நடைபெற்றுக்கொண்டுமிருக்கிறது..இலங்கை நூல்கள் 'நூலகம் நிறுவனத்தினரால் (noolaham.org) எண்ணிமப்படுத்தப்படுகிது. ஏராளமான பழந்தமிழ் இலக்கியங்கள் நவீன இலக்கியங்கள் எண்ணிமப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே இன்று இணையத்தில் வரும் எழுத்துக்கள் நின்று நிலைப்பதற்கு இன்றைய ஆக்க எழுத்தில் ஏதோ ஒரு சொல் அடுத்த அடுத்த சந்ததிக்கு தேவைப்பட்டாலே அது நின்று நிலைக்கும்.தேடுபொறிக்குள் போடப்போகும் சொல் இலக்கியகாரரின் பெயராகவோ கதையின் பெயராகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை.எனவே நிலைப்பதெல்லாம் தரமானது, அழிவதெல்லாம் தரமற்றது என்ற கதைக்கு இந்த இணைய சூழலில் இடமில்லை.இந்த சூழலை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டுமென நான் நினைக்கிறேன்.
அடுத்து இணைய வாசிப்புக்கு எற்றதாக மொழியும் அளவும் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் இந்த சூழல் ஏற்படுத்தியுள்ளது.தளங்களில் எவ்வளவு நீளமாகவும் எழுதலாம்.பத்திரிகைக்காரரின் கொத்து வெட்டுக்குள் அகப்படத் தேவையில்லை.ஆனால் வாசகர் வட்டத்தை அல்லது பயனாளர்களை பிரமாண்டமாக கொண்டுள்ள இன்றைய சமூக ஊடகங்கள் வாசிப்புக்கான, எழுதுவதற்கான அளவை கோருகிறது.அதற்கேற்றால் போல் முகப்புததகத்தில் கதை கவிதை எழுதப்பட்டால் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை எழுத்தாளர் தீர்மானிப்பார்.அது பெரிதாக இருக்கலாம், ஆனால் வாசகா்கள் படிக்க வேண்டுமானால் அதை எப்படி முன்வைக்க வேண்டும், என்பதை 'எழுத்தாளா் இப்படித்தான் தீா்மானிக்க வேண்டும்' என இந்த புதிய ஊகம் அவருக்கு அழுத்தத்தைக் கொடுக்கிறது.அந்த பரீட்சார்த்த நடவடிக்ககைகளில் ஒன்றாக முகப்புத்தகத்தில் கதை சொல்லடா தழிழா என்ற ஞானதாஸ் அவர்களின் உருவாக்கத்தை கூறலாம்.அதில் புதியவவை மட்டும்ல்லாமல் ஏற்கனவே உள்ளவையும் முன்வைக்கப்படுகிறது. முன்வைக்கும் முறை மாறியுள்ளது.
இதே வேளை 'ருவிற்றரை' எடுத்தால் ஒரு தடவையில் 140 எழுத்துக்களில் மட்டும்தான் பதிவு செய்யமுடியும்.இன்று செய்தி அளித்தலுக்கு உலகெங்கும் பிரபல்யமாக இருக்கும் ஒரு சமூக வலைத்தளம் இது.இதற்கும் இலக்கியத்திற்கும் என்ன சம்பந்தம் என யோசிக்கலாம்.திருக்குறள் என்ற இலக்கிய வடிவத்தின்தன்மையை இந்த வலைத்தளம் கோருகிறது.அதற்காக திருக்குறள் எழுதமுடியாது. எனவே புதிய இலக்கிய வடிவம் ஒன்ற தோன்றுவதற்கான வாசல் இதனூடாக திறக்கப்பட்டுள்ளது என்று கொள்ளலாம்.
அடுத்து முக்கியமாக அறம்சார் பிரச்சினைகள்..
சர்வதேச புலமைச்சொத்து சட்டத்தையோ பதிப்புரிமையையோ அறியாதவர்களாகதான் பலர் இருக்கின்றனர்.இந்நிலையில் எமது சூழலில் இணைய வெளியீட்டுக்கான சட்ட பாதுகாப்புக்கு இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. .இந்த புதிய சூழலை சட்டத்தில் தற்போதுதான் உள்வாங்கிக்கொணடிருக்கின்றனர்.எனவே சட்டத்தை விடுங்கள்.எழுத்தை ஆள்பவர்கள் வேறு நபரின் எழுத்தை எந்த கூச்சமும் இல்லாது எப்படி தனதாக்கலாம்?அது அடிப்படையில் அறம்சார் பிரச்சினை.இந்த சுதந்திர களம் எதையும் எங்கிருந்தும் பார்த்து எடுக்க அனுமதித்திருக்கிறது.இந்த அனுமதி எழுதப்பட்ட நபரின் பெயருடன் இணைத்த அனுமதியாகத்தான் கொள்ளவேண்டும்.முகப்புத்தகத்தில் யாரே எழுதிய கவிதைகளை தன்கவிதைகளாக பதிவிடும் பலர் இதுபற்றி கவனிக்க வேண்டும்.
அதே நேரம் தனிமனித அவதூறுகள் சட்டத்தால் தடுக்கப்பட்டுள்ளன.அவை குற்றம் சார்ந்தவை.அதையும் தாராளமாக செய்வதற்கு இந்த இணைய சூழல் வாசல்திறந்துள்ளது.அவதூறை விடுத்து அறம் பிழைப்போரை நிறுத்திவைத்து கேள்விகேட்கும் சூழ ல் உருவாக்கபடவேண்டும்.
எனவே இந்த புதிய இணைய சூழல் இலக்கியத்திற்கு புதிய இரத்தத்தை பாச்சும் அதேநேரம் புதியபரிணாமத்தையும் பல பரிமாணங்களையும் இலக்கியத்தில் ஏற்படுத்தியுள்ளது.புதுய சூழல் பற்றியதான புாரிதலும் பயன்படுத்துகையும் இன்னும் தமிழில் அகலிக்க வேண்டும்.

எம்.எஸ்.தேவகெளரி