மக்களின் கருத்துருவாக்கத்தில் ஊடகங்களின் பங்கு மிகப்பெரியது. இதை நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்கிறோம். மக்களின் சிந்தனைகளில் கருத்துக்களில் ஆதிக்கம் செலுத்தும் வல்லமை ஊடகங்களுக்கு இருக்கிறதென்றால், ஊடகங்களை நாம் வழிப்படுத்தினால் அது மக்களை வழிப்படுத்துவதற்கு சமனாகும். ஊடகங்களை வழிப்படுத்தல் என்பது ஊடகங்களுக்கு இருக்கவேண்டிய அடிப்படை ஒழுக்கநியமமான உண்மை(truth), மிகச்சரியான (accurate),பக்கசார்பற்று (fariness) அறிக்கையிடும் பண்பை வளர்த்தலும் பேணலும். அத்துடன் ‘பொறுப்புடைமை’ ( responce) என்ற பங்காற்றலும் ஊடகங்களுக்கு உண்டு. அதுவும் பல்லின கலாசாரங்களைக் கொண்ட ஒரு நாட்டில் ஊடகங்கள் பன்மைத்துவத்தை (pluralism) ஏற்றுக்கொண்டு அறிக்கையிடல்களைச் செய்யவேண்டும். ‘வேறுபாட்டுக்குள் ஒருமைப்பாட்டை’ காணும் அணுகுமுறையைக்கொண்ட அறிக்கையிடல்களையும் ஊடகங்கள் ஏன் வெளியிடக்கூடாது? அதை செய்கின்றபோதுதான் நாட்டில் நல்லிணக்கமும், அமைதியும் மக்கள் மனதில் தோன்றும். அத்தகைய கருத்துருவாக்கங்கள் மக்கள் மனதில் விரிகின்றபோது முரண்பாடுகள், மோதல்கள் தவிர்க்கப்படும்.
இதை ஏற்றுக்கொண்டு, இலங்கையில் இருக்கக்கூடிய பல்லின சமூகங்களின் பிரச்சினைகளை அணுகலாம். அனேகமாக செய்தியில் இருந்து விவரணக்கட்டுரை ஒன்றை எழுதுவதற்கான எண்ணம்(idea) எமக்குக் கிடைக்கின்றது. கட்டுரைகளை எழுதும் எண்ணம் மனதில் எழுகின்றபோது எந்தக் கோணத்தில் அதை எழுதப்போகிறோம் என்ற திட்டம் எம்முள் இருக்கவேண்டும். அந்தத் திட்டத்திற்கு அமைய கிடைத்த உண்மைத் தரவொன்றை வைத்து, அதனுடன் சம்பந்தப்பட்டவர்களிடம் அபிப்பிராயத்தையும் கருத்தையும் கேட்டல். அதனூடாக நாம் எழுதவுள்ள விடயத்தை பகுத்தாராய்ந்து மக்களுக்கு தெளிவுபடுத்துவதே எமது நோக்காக இருக்கலாம். அதில் பிரச்சினைகளுக்கான காரணங்களை முன்வைக்கலாம், பிரச்சினைகள் எங்கிருந்து ஆரம்பிகின்றன என்பதை வெளிப்படுத்தலாம் அல்லது உய்த்துணர வைக்கலாம், பிரச்சினைகளுக்ககான தீர்வை உரியவர்களிடம் இருந்து பெற்று வெளிப்படுத்தலாம். அல்லது தீர்வை நோக்கி செல்லும் வழியை முன்வைக்கலாம். அல்லது அதிகாரத்தின் முன் மக்கள் வைக்கவேண்டிய கேள்விகளை முன்வைக்கலாம். இப்படி நாம் எடுத்துக்கொண்ட விடயத்தை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வைப்பதே எமது நோக்காக இருக்கவேண்டும்.
ஊடகவியலாளராக இருக்கும் நாம் நல்லிணக்கத்திற்கும், சமாதானத்திற்கும் சார்பானவர்களாக சர்பான எண்ணங்களை மக்களிடம் கட்டியெழுப்புபவர்களாகவும் இருக்கலாம். இதற்காக சாதாரண மக்களின் கதைகளையும், அரசியல், பொருளாதார, கலாசார பிரச்சினைகளை சாதாரண மக்களின் கண்களுடாகவும் முன்வைக்கலாம். அவ்வாறு முன்வைக்கும்போது பகுத்தாராய்ந்து பதில் அளிக்க வேண்டிய உத்தியோகபூர்வ மூலங்களின் குரல்களையும் உள்ளடக்கி கதைகளாக்கலாம். அந்தக் கதைகள் ஒரு சமூகத்திற்கானதாக இல்லாமல், பல்லின சமூகங்களில் எவ்வாறுள்ளது என்பதையும் நாம் வெளிக்கொண்டுவருதலே ஒரு சிறந்த கதையை உருவாக்கும். நாம் எழுத முற்படும் கதைகள் ஒரு சமூகத்திற்கானதாக மட்டும் உள்ளதா? ஏனைய சமூகங்களுள்ளும் இருக்கின்றதா என்பதை ஆய்வுசெய்வதும் இருந்தால் அதனையும் இணைத்து எழுதலாம். எழுதும்போது அதற்கான சவால்கள் தீர்வுகள் ஒரேமாதிரியாக உள்ளனவா? வேறுபாடாக உள்ளனவா? அவ்வாறு இருப்பின் காரணம் என்ன என்பதை பகுதிதாராய்ந்து வெளிக்கொண்டு வரலாம். நூம் எழுத எடுக்கும் விடயத்தை ஆழமாக ஆராய்தல் என்பது மிக முக்கியமானது. வெளிப்படையாக எல்லோருக்கும் தெரியும் நிகழ்வுகளையும் அபிப்பிராயங்களையும் முன்வைப்பது ஒரு சிறந்த கதையாகாது.
இன்று கொரோனா பற்றிய செய்திகளும் கதைகளும் வெறுமனனே எத்தனைபேருக்கு தொற்று ஏற்பட்டது என இலக்கங்களுடன் நின்றுவிடுகிறது. அல்லது பிரபல்யமானவாகள், அல்லது குறித்த நபர்கள் பற்றிய அடையாளத்துடன் நின்று விடுகிறது. இதற்கு அப்பால், சகல இன குழுமத்துள்ளும் உள்ள சாதாரண மக்கள் கொரோனா தொற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள்? அவர்கள் கையாளும் தடுப்பு முறைகள், அரசு எடுத்திருக்கும் பரிசோதனை முறைகள் சாதரண மக்களுக்கு சாத்தியமானதாக உள்ளதா?ஊரடங்கு, தனிமைப்படுத்தலை அன்றாடம் உழைத்துண்பவர்கள் எப்படி எதிர்கொள்கின்றனர்? என பல்வேறு கோணங்களில் கதைகளை அணுகலாம். எடுக்கப்படும் கோணத்தில்(angle) எல்லா இன சமூக மக்களுக்கும் உள்ளடங்கியிருத்தல் முக்கியம்.
நல்லிணக்கம் என்பது தனியே இனங்களுக்கிடையே மட்டுமல்ல மதம், பிரதேசம், தனிநபர், ஆண் பெண் என எல்லோருக்குமிடையேயான நல்லிணக்கம். அது ஜனநாயகத்தை கட்டியெழுப்பவும் உதவுகிறது. இக்கதைகளின் ஊடாக குறைந்த பட்சம், தமது பிரச்சினைகளை பொது தளத்தில் முன்வைக்கும் ஜனநாக உரிமை மக்கள் எல்லோருக்கும் இருக்கிறது என்பதை ஊடகவியலாளர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.
நடந்ததை நடந்தவாறு பிரசுரிக்கும் செய்திகளில் கூட பார்வைக் கோணங்களை மாற்றுவதனூடாக, குறித்த அந்த செய்தியை ஒரு சாராருக்கு அனுகூலமான அல்லது பிரதிகூலமான செய்தியாக மாற்றும் நிலை தமிழ் சிங்கள ஊடகங்களில் தாராளமாகவே உள்ளன. உதாரணமாக பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட விடயத்தை தமிழ் சிங்கள ஊடகங்கள் கையாண்ட விதம். பிக்குமார் வெளியிடும் வரலாறு, மதசார் கருத்துக்களை தமிழ் சிங்கள ஊடகங்கள் கையாளும் விதம். ஆகியவற்றைக் கூறலாம். இங்கே ஊடகவியலாளராகிய நாம் எந்த தரப்புடனும் கைகோர்க்காமல் பிரபல்யமானவர்களின் இத்தகைய அபிப்பிராயங்கள் உண்மைத் தரவு சார்ந்ததா? உண்மைத் தரவு சாராதவையா? என்ற கோணத்தில் அணுகலாம். பன்மைத்துவ சமூகச் சிந்தனையை இவை எவ்வாறு பாதிக்கிறது? என்ற கோணத்தில் அணுகலாம். சாதாரண மக்களிடம் இவை ஏற்படுத்தும் தாக்கம் என்ற கோணத்தில் அணுகலாம். இந்தக் கோணங்களில் அணுகும்போது இவை வெறுமனே ஊடகவியலாளரின் அபிப்பிராயமாக இல்லாமல், காரண காரியங்களுடன், செய்தி மூலங்களுடன் தர்க்க நியாயங்களுடன் அமைக்கப்படவேண்டும்.
இவ்வாறு ஒவ்வொரு பார்வைக் கோணங்களில் இருந்தும் ஒரு கட்டுரையை எழுதமுடியும். நாம் கட்டுரைக்காக தேர்ந்தெடுக்கும் விடயம், நன்கு குவியப்படுத்தி(focus) ஆழமாக பார்க்கப்படவேண்டும்.
ஒரு தமிழ் ஊடகவியலாளர் ஒரு கட்டுரையை எழுதும்போது அது தமிழ், சிங்கள மக்களுக்கு எழுதுகின்றோம் என்று எண்ண வேண்டும். சிங்கள ஊடகவியலாளர் எழுதும்போதும் அது சிங்கள, தமிழ் மக்களுக்கே எழுதுகிறோம் என்று எண்ண வேண்டும். அவ்வாறு எண்ணுவோமானால் நாம் எழுதவேண்டிய பார்வைக்கோணத்தை எம்மால் இலகுவாக அமைத்துவிடமுடியும்.
(Sri Lanka Press Institute இற்கு 2020 Oct இல் எழுதியது )
கௌரிமகா
No comments:
Post a Comment