Tuesday, August 25, 2020

 www.slpi.lk 

வெறுப்பூட்டும் பேச்சுகள் மீது கேள்விகளை எழுப்புங்கள்!  

இந்த மாத முற்பகுதியில் இலங்கையில், சைவம்களால் பாடல்பெற்ற தலம் என போற்றப்படும் பாட நூல்களிலே குறிப்பிடப்படும் கோணேச்சர கோவில் பற்றி ஒரு தகவல் வெளிவந்தது. கோணேச்சரம் கோயில் அல்ல அது கோகர்ண விகாரையே! என்ற செய்திதான் அது. அதன் பின்னர் பெரும்பாலான தமிழ் ஊடகங்களின் பேசுபொருளே அதுவாக மாறியது. இணையத்தளங்கள், சமூக ஊடகங்கள் என தமிழ் மக்கள் எதிர்வினையாற்ற தொடங்கினர்.

இந்தச் செய்தி வரலாற்று ரீதியான மிகப்பெரிய பொய் என அனைத்து ஊடகங்களிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கும் அப்பால் இனரீதியான வெறுப்பூட்டும் பேச்சுகள் சமூக ஊடகங்களில் தாராளமாகவே வந்து குவிந்தன. இன்று வரை இதுபற்றிய விமர்சனங்கள் கொந்தளிப்பாகவும், ஆவேசமாகவும், வரலாற்றை முன்னிறுத்தி எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்தக் கருத்தை வெளிப்படுத்தியவர் ஒரு கல்வியியலாளர் அதற்கும் மேலால் ஒரு மதகுரு என எதுவும் கவனிக்கப்படாமல் மக்களில் அனேகர் இனம்சார் குரோத மனப்பாங்கை வெளியிட்டிருந்தனர். அந்தளவிற்கு தமிழ் சைவமத மக்களின் மனங்களில் இனகுரோதத்ததை வெறுப்பூட்டும் நிலையை உளவியல் ரீதியாக உருவாக்கியிருந்தது அந்த செய்தி. தேர்தல் காலத்தில் மக்களின் நம்பிக்கைகள், தெரிவுகள் எல்லாவற்றிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்ததும் செய்தியாகவும் அது இருக்கவும் வாய்ப்புள்ளது. ஏனெனில் அதன்பின்னர் பல்வேறு தழிழ் அரசியல்வாதிகளும் இந்தக்கருத்துக்கு எதிர்வினையாற்றும்போது மேலாதிக்கம் செலுத்தும் இனத்தின் பண்புகள் சிறுபான்மை இனத்தின் வரலாற்றை அழிப்பதில் முனைப்புற்றிருக்கும் என்ற கருத்துக்கள் வெளிப்படும் வகையில் இனத்துவத்தை முன்னிறுத்தியே தமது கருத்துக்களை முன்வைத்தனர். சிலர் எள்ளி நகையாடினர்.
அந்த வகையில் இந்த செய்தி இலங்கை வரலாற்றுக்கும் அதன் உண்மைக்கும் புறம்பானது என்பதை தமிழர் தரப்பு ஆணித்தரமாக முன்வைத்து வருகிறது. அதன் அடிப்படையில் சைவமகாசபை, கோணேசர் ஆலய பரிபாலன சபையினர் பல்வேறு வரலாற்று ஆதாரங்களை முன்வைத்து அறிக்கைகளை வெளியிட்டனர். அரசியல்வாதிகளில் சிலர் சைவத்தை முன்னிறுத்தி பகிரங்க விவாதத்திற்கும் அறைகூவல் விடுத்தனர்.

இந்த நிலையில், முதலில் இக்கருத்து உண்மைத்தரவாக(கயஉவ) முன்வைக்கப்பட்டதா? அபிப்பிராயமாக (ழிinழைn)முன்வைக்கப்பட்டதா? இவ்வாறு முரண்பாட்டை உருவாக்குகின்ற கருத்துக்களை ஒருவர் வெளியிடும் போது ‘இது உங்கள் அபிப்பிராயமா? உண்மைத்தரவா என்பதை கேள்வியாகக்கேட்டு, உண்மைத்தரவாயின் ஆதாரம் எது என்பதையும் கேட்டு அதையும் இணைத்து தகவலைவெளிப்படுத்தலாம். இந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு இருக்கக்கூடிய அறிவு ஆற்றலைக்கொண்டு மேலும் பல கேள்விகளை கேட்டு அது அபிப்பிராயமா? உண்மைத்தரவா? என்பதை மக்களுக்கு உணர்த்தலாம்.

“இத்தகைய கருத்துக்களை பொது வெளியில் வைப்பதும் ஊடகங்களில் அவை வெளிவருவதும் இனங்களுக்கிடையிலான முறுகல் உளநிலையை மேலும் வலுப்படுத்துவதாகவே அமைகிறது” என்கிறார் யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைநெறியின் தலைவர், கலாநிதி எஸ். ரகுராம். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில்,
“இத்தகைய செய்திகள் தவறான வரலாற்று தகவல்களே. ஆனாலும் சொல்லப்படும் நபர் சொல்லப்படும் இடத்தைப் பொறுத்து அது செய்தியாக உருவாக்கப்படுகிறது. இதைக்கூறியவர் சாதாரண நபர் அல்ல. தொல்பொருள் இடங்களைப்பாதுகாப்பதற்காக ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட செயலணியின் முக்கியஸ்தர். அதுமட்டுமல்லாமல் தொல்லியல் அறிஞர். அவரது வாயால் இத்தகைய வரலாற்றுத் தவறான தகவல்கள் முன்வைக்கப்படும்போது இனத்துவ ரீதியான சந்தேக சிந்தனையே தமிழர்கள் மத்தியில் உருவாகின்றது. அதனால் பொதுமக்களுக்கான ஆர்வமூட்டும் செய்தியாக இது மாறுகிறது. ஆனாலும் இதை பிரசுரிப்பதால் மக்கள் பயன் என்ன என்று பார்த்தால், அந்த குறித்த தரப்பினர் பற்றி அவர்களின் நடவடிக்கைகள் பற்றி வரும் காலத்தில் மக்கள் கவனமாக செயற்படவேண்டும் என்பதை அந்த செய்தி சொல்லாமல் சொல்லும். அதேவேளை இதற்கான எதிர்வினைகள் வரலாற்று உண்மைகளுடன் சிங்களப்பத்திரிகைகளில்தான் எழுதவேண்டும். சிங்கள மக்களுக்கு உண்மைகள் போய்ச்சேரும் சந்தர்ப்பங்களை உருவாக்கவேண்டும். இந்த எதிர்வினைகளை தமிழில் மட்டும் மீண்டும் மீண்டும் எழுதுவதால் மீண்டும் மீண்டும் மக்கள் மனதில் இனம் சார்ந்த குரோத மனப்பான்மைக்கு எண்ணெய் ஊற்றுவதாகதான் அது அமைகிறது.” என்றார்.

ஆம், தேடிப்பார்த்தளவிற்கு சிங்களப் பத்திரிகைகள் எதுவும் இவற்றைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆங்கிலத்தில் ஒரு சில கட்டுரைகள் வெளிவந்தன. இந்த இடத்தில்தான் தேர்தல் காலத்தில் இவ்வாறான, முரண்பாட்டை தோற்றுவிக்கும் ஒரு செய்தி பரப்பப்பட்டுதற்கு அரசியல் காரணங்களும் இருக்கலாம். அதற்குள் மக்களை சிக்கவைத்து சமூக ஊடகங்களில் வன்மங்களைக் கக்க வைக்கும் ஒரு நிலையை உருவாக்கியதில் கௌரவ தேரருக்கும் ஊடகங்களுக்கும்தான் பெரும் பங்குண்டு.

இந்த செய்தி வந்த அடுத்தடுத்த திகதிகளில் ஒரு பத்திரிகையில் இதே செய்தியையும் வெளியிட்டு அருகில் வரலாற்று அறிஞர், போராசிரியர் ஒருவரின் கருத்தும் வந்தது. அந்த செய்திக்கு தலைப்பு இவ்வாறிருந்தது. ‘வரலாறு தெரியாதவர்கள் வாய் திற்கக்கூடாது’ என்றே தலைப்பிட்டிருந்தது. இந்த செய்திக்கான முதல் தலைப்பிலும் ‘….தேரர் பிதற்றல்’ என்பதாகவே இருந்தது. இதுபோல் உள்நாட்டு வெளிநாட்டு தழிழ் ஊடகங்களில் வெளியான தலைப்புகளை ஆராய்ந்தால் அந்த கருத்தைச் சொன்னவர் மீதும் அவரது இனத்தின் மீதும் மக்களுக்கு நகைப்பும் வெறுப்பும் ஏற்படும் உளநிலையைத்தான் அவை தோற்றுவித்தன.
பெரும்பாலான தமிழர்கள், இலங்கையில் வாழும் சைவமதத்தவர்களின் மனங்களை இந்த செய்தி புண்படுத்தியிருப்பதாக உணர்கின்றனர். வரலாற்றை திரிபுபடுத்தும் இந்தமாதிரியான சம்பவங்கள் இன்று நேற்றல்ல பலகாலமாக நடந்து வருவதையும் சம்பவரீதியாக மீட்டெடுத்து அபிப்பிராகக் கட்டுரைகளும், வரலாற்றுக் கட்டுரைகளும் இணையத்தளங்களில் உலாவருகின்றன. இந்த நிலையில் இலங்கையின் மூத்த குடிகள் தமிழரா? சிங்களவரா? இஸ்லாமியரா? என்ற வாதப்பிரதிவாதங்களும் ஆங்காங்கே ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டுவருகின்றன. இந்த வரலாற்று தொன்மையை ஆராய்வதில் எந்தவித உண்மைத்தரவுகளையும்விட அபிப்பிராயங்களே அதிகளவில் பகிரப்பட்டுவருகிறன. அந்த அபிப்பிராயங்களும் தமது இனத்தை முனைப்புறுத்தி மற்ற இனங்களை சிறுமைப்படுத்தும் அளவிற்குதான் வெளிப்படுத்தப்படுகின்றன. வெறுப்பூட்டும் செய்திகளின் தொடர்ச்சியாக நாம் இதைப்பார்கலாம். எனவே ஒரு செய்தி வெளிப்படுத்தப்பட்டவுடன் அது அதனுடன் நின்று விடுவதில்லை. உளரீதியான வெறுப்பூட்டல்களை உருவாக்கும் செய்திகள் மக்கள் மனங்களில் தொடர்ந்து பல்வேறு விதங்களில் வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் என்பதற்கு இது நல்ல உதாரணம்.

“ஒரு வராற்றைப்பற்றி கதைக்கும்போது நாம் அந்த வரலாற்றை எப்படி ஆழமாக பார்த்திருக்கிறோம் என்பது முக்கியமானது. இலங்கை வரலாற்றை பார்கின்றபோது சைவமும் பௌத்தமும் தொன்று தொட்டு, இப்போது இருப்பது போன்று இனத்துடன் பிணைக்கப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் தமிழ் பௌத்தர்களும் இருந்துள்ளார்கள் என்பது வரலாறு. எனவே மதப்பண்பாட்டுடன் மட்டும் வைத்துப்பார்க்கவேண்டிய, ஆராயவேண்டிய தொன்மங்களை நாம் ‘சிங்கள பௌத்தம்’ என இனத்துடன் பிணைக்கப்பட்ட ஒன்றாக அந்த பண்பாட்டை விளக்கிக்கொண்டு விளக்க முயல்வதே இத்தகைய வரலாற்று தவறுகளுக்குக் காரணம். இந்த வரலாறுகளை அறிந்திருந்தாலும் சிலர் எதிர்கால வரலாற்றை எழுதுவதில் நாட்டம்கொண்டு கடந்தகால வரலாற்றை அழித்து எழுத முனைவதே இத்தகைய போக்குகளில் இனம்காணக்கூடியதாகவுள்ளது” என்கிறார் யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்.

இவ்வாறான செய்திகளை ஊடகங்கள் வெளிப்படுத்தும்போது சொல்லப்பட்ட கருத்து உண்மைக்கு புறம்பானதாக இருக்குமேயானால் அதற்குரிய கனதியை வழங்கி உண்மைத்தரவுகளுடன் ஒரே நேரத்தில் இரண்டையும் சேர்த்து வெளியிடும்போது மக்கள் மனதில் தோன்றும் வெறுப்பு விரோதம் குறைவடையலாம்.

அதே நேரம் எல்லோருக்கும் தெரிந்த உண்மை இவருக்கு தெரியவில்லையே என்று நினைத்து மிகப்பிரபலமான ஒருவரை மட்;டம்தட்டுவதுபோல் தலைப்பிடுகின்றபோது அந்த செய்தியின் கனதி குறைக்கப்படுகிறது. அதேநேரம் குறித்த இந்த சம்பவத்தில் தொல்லியல்சார் நிபுணருக்கு வரலாறு தெரியவில்லை என்பதும் நம்பமுடியாதது என்றும் இது திட்டமிட்ட அரசியல் பின்னணி கொண்ட செயற்பாடாக இருக்கலாம் என்றும் நம்பும் பட்சத்தில் ஊடகவியலாளர் மேலதிக கேள்விகளைத் தொடுக்கவேண்டும். அந்த மேலதிக கேள்விகளால் பதில் சொல்பவர் வரலாற்றை மறைக்க முற்படுவதையோ அல்லது தனது சொந்த அபிப்பிராயம் இது என்பதையோ இனங்காணமுடியும்.

இதே வேளை இதையொட்டி இஸ்லாமிய முக்கியஸ்தர் ஒருவர் கோணேஸ்வரர் கோயிலின் அருகில் உள்ள சமாதி பற்றியும் இராவணன் பற்றியும் குறிப்பிடுகின்றார். அவை எல்லாம் இஸ்லாம் மதத்திற்குரியன என்றும் இராவணன் இஸ்லாமியர் என்றும் குறிப்பிடுகிறார். இதற்கும் ‘சமூக ஊடகப் போராளிகள்’ கொதித்தெழுந்து வெறுப்பூட்டும் பேச்சுகளை எழுதியும் பேசியும் வருகின்றனர்.
எனவே எதிர்வினையாற்றும்போது வெளிப்படும் வெறுப்பு பேச்சுகள் நேரடியாவே ஒரு இனத்தை இழித்துரைப்பதற்கும், நகைப்பதற்கும்,குரோதம் வளர்ப்பதற்கும் ஏதுவாக உள்ளது. அதே நேரம் இந்த எதிர்வினைக்கு காரணமாக இருந்த கருத்துக்கள் சாதாரணமானவை என்று சொல்லிவிடமுடியாது. அந்தக் கருத்துக்கள் குறித்த இனத்தை, மதத்தை, குழுவை வெறுப்பூட்ட வைக்கும் கருத்துக்காளாக இருப்பதும் வெறுப்பு பேச்சாகத்தான் கொள்ளப்படும். இது உளரீதியான ஒரு கருத்துருவாக்கம்தான்.
இந்த வெறுப்பு பேச்சை குறைக்கவேண்டுமானால், அது தொடர்பில் மீண்டும் மீண்டும் பல்வேறு கேள்விகளை ஊடகவியலாளர்கள் கேட்கவேண்டும்.

• இதனூடாக நீங்கள் சொல்லவருவது என்ன?
• நீங்கள் சொல்வதை நான் ‘இந்த விடயம் இந்த இனத்திற்கு மதத்திற்கு பாலிற்கு எதிரானது என…’ இப்படி எடுத்துக்கொள்ளலாமா?
• இப்படி நீங்கள் சொல்வதற்கான காரணங்கள் எவை?
• உங்கள் பதில்களில் உண்மைத்தரவுகளைவிட அபிப்பிராயங்களளே அதிகம் உள்ளன. அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?
இந்த வியடத்தில் வெளிநாட்டு ஊடகம் ஒன்று முயற்சி செய்திருந்தது. அதன்படி ‘இது பாடல் பெற்ற தலங்களில் ஒன்று என்ற உண்மைத்தரவு பல இடங்களில் உள்ளனவே’ அதற்கு என்ன சொல்கிறீர்கள்? என கேட்டபோது, ‘பிற்காலத்தில் ஒவ்வொருவரும் தமக்கு ஏற்றமாதிரி அதனை மாற்றி அமைத்துக்கொண்டார்கள்’ என மிக இலகுவான பதிலளித்திருந்தார். இது ஒரு பொறுப்பான பதில் என்ற கூறமுடியாது ஆனாலும் ஓரளவிற்கு உண்மைத்தன்மையான தரவுகளில் இருந்து அவர் நழுவுகிறார் என்ற கருத்து உய்த்து உணரப்படுகிறது. இவ்வாறான தொடர் கேள்விகளினூடாக அவருக்கு வேறு ஏதாவது அரசியல் நோக்கங்கள் உள்ளனவா என்பதையும் வெளிப்படுத்த முடியும்.  - GowryMaha.

No comments: