Tuesday, January 09, 2007

ஆண் பெண் அசமத்துவத்தால் பாதிப்புக்குள்ளாகும் பாலியல் வாழ்வு

மனிதனின் அடிப்படைய உணர்வுகளில் ஒன்றான பாலியல் உணர்வு சமூகத்தில் நிலவுகின்ற சமமற்ற ஆண-;பெண் பால் நிலையால் வேறுபட்டு நிற்கிறது. அதாவது ஆணணும் பெண்ணும் பாலியல் பற்றிய புரிதலை மிக வேறுபட்ட கருத்தாக்கங்களினூடகவே புரிந்துகொள்கின்றனர். இதனால் பாலியல் தன்மைக்கும் ((Sexuality) பால் நிலைத் தன்மைக்கும் (Gender) இருக்கக் கூடிய உறவு நிலை ஆண்பெண் பாலியல் வாழ்விலும் மறு உற்பத்தி ஆரோக்கியத்திலும் தாக்கம் செலுத்துகிறது.
பெண்களுக் கெதிரான வன்முறைகளும், வீட்டு வன்முறைகளும் அதிகளிவில் எச்.ஐ.வி. தொற்றுக்கு பெண்கள் உள்ளாவதும் மற்றும் குழந்தைகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாவதும் கூட ஆண்-;பெண்ணுக்கிடையில் இருக்கும் பாலியல் பற்றிய புரிதலாலும் வாழ்க்கை முறையாலும் ஏற்பட்டதே.
இலங்கை போன்ற கீழைத்தேயஇ வளர்முக நாடுகளில் பாலியல் வாழ்வு பெண்களுக்கு பெரும் சவாலாகத்தான் இருக்கிறது.
மதங்களாலும், மரபு சார்ந்த வாழ்க்கை முறையாலும் கட்டியெழுப்பப்பட்ட மக்கள் குளுமங்கள் வாழ்கின்ற இலங்கையில் ஆணாதிக்க தன்மைகள் பெண்களின் பாலியல்pல்தான் மையம் கொள்கின்றன.
பொதுவாகவே தந்தை வழிச் சமூகம் பெண்களின் பாலியலை அடக்குவதன் மூலமே தம்மை நிலைநிறுத்திக் கொண்டன. தமக்கான வாரிசை உறுதிப்படுத்த பெண்களின் பாலியலை கட்டுப்படுத்த வேண்டிய தேவை அவர்களுக்கு உருவானது. இது உலகின் மனிதகுல வரலாறு. மதங்களாலும் மரபார்ந்த வாழ்க்கை முறைகளாலும் கட்டுப்பட்டிருக்கும் இலங்கை மக்களின் வாழ்க்கை முறையில் பலம் பொருந்திய ஆணாதிக்கம் இருக்கிறது. பெண்ணின் மீதான ஆணின் அதிகாரம்இ மேலாதிக்க கருத்துருவாக்கம் புனைவுகளால் கட்டியெழுப்பப்படும் போது அங்கு பாலியில் முக்கிய இடம் வகிப்பதை காணமுடிகின்றது.
இலங்கையில் சிங்களவர்கள்இ தமிழர்கள், இஸ்லாமியர்கள் என பல்லின மத கலை கலாசாரங்களைக் கொண்டவர்கள் வாழ்கின்றனர். தந்தை வழிச் சமூக மரபில் மதங்களின் தாக்கமும் ஆண்-பெண் பாலியல் வாழ்வை தீர்மானிக்கின்றது. அந்த வகையில்; மிகுந்த ஏற்றத்தாழ்வுடனான ஆண்-பெண் பாலியல் வாழ்வை இலங்கையில் இனம் காண முடிகிறது.
பொதுவாக இலங்கை தமிழர்கள் இந்திய திரைப்பட கலாசாரத்தில் உளவியல் ரீதியாக தம்மை இணைத்துக்கொண்டவர்கள். இதனால் தான் அனேகமான பெண்கள் தமக்கான பாலியல் வாழ்வு ஒன்று இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வதே இல்லை. தன்னை ஒரு ஆணுக்கு கொடுத்தல் முறையில் “என்னையே உனக்குத் தந்தேன்’ என்று தான் கூறுகிறார்கள். தன் உடல் பற்றிய புரிதல் மிக அரிதாகவே பெண்களுக்கு இருக்கிறது. முகத்தை அழகுபடுத்துவதில் உடலுக்கு ஆடை அணிவதில் இருக்கும் ஆர்வம் உடல் பற்றிய புரிதலில் இல்லை. தன் உடலை தானே கட்டுப்படுத்த முடியாத பரிதாப வாழ்வை அதிகமாக மூவின (தமிழ், சிங்கள,முஸ்லிம்) பெண்களும் கெண்டுள்ளனர்.பால்வினைத் தொழிலாளர்கள் கூட தம் உடலை விற்கின்ற நிலையிலும் அவர்களது கட்டுப்பாட்டில் அவர்களது உடல் இல்லை. அங்கே பெரும் சுரண்டல்களுக்கு அவர்கள் ஆளாகின்றனர். இதேநேரம், பெண்கள் தம் உடலை அசூசையாக பார்க்கின்ற மரபு உள்ளார்த்தமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது (தீட்டுஇபாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட நிலைமையில் இவ்வெண்ணங்கள் மேலோங்கியிருப்பதை வெளிப்படையாக அவதானிக்கமுடியம்). மறுபுறம் கிழைத்தேயங்களில் அவளது உடலை ஆள்வதற்கு இன்னொருவன் உள்ளான் என்ற நிலை வளர்க்கப்படுகிறது.
“கணவன் மட்டும் காணும் அழகை கடையில் போட்டு காட்டுறியே’ என்ற சினமா பாடல் முதல் “கோரிக்கை அற்று கிடக்கு வேரில் பழுத்த பலா’ என்று விதவைகளைப் பார்த்துச் சொன்ன பாரதிதாசன் வரை பெண்ணின் பாலியல் தன்மை யாரோ ஒருவருக்கானது என்ற கருத்தையே கொண்டது.இதற்கு சமமற்ற அல்லது முற்றாக வேறுபட்ட நிலைமைகளினூடாக ஆண் பெண் பாலியல் வாழ்வு கட்டமைக்கப்படுகின்றமையே காரணம்.இதன்போது ஒருவருக்கொருவர் கௌரவமான முறையிலோ ஒருவருக்கொருவர் விளங்கிக் கொள்ளும் முறையிலோ பாலியல் வாழ்வை மேற்கொள்வதோ, தரமான ஆரோக்கியமான பாலியல் வாழ்வையும் மறு உற்பத்தி உரிமையையும் பெறுவதோ சாத்தியமற்றது.
இலங்கையில் தரமான பாலியல் வாழ்வுக்கு ஆரோக்கியமான மறு உற்பத்திக்கும் பாலியல் கல்வி சாத்தியமானது என்பதை புரிந்து கொள்ள முடிந்தாலும் அதை பாடசாலையில் தொடங்க முடியுமா? எந்த வயதில் தொடங்குவது? பெற்றோர் கதைக்கலாமா? மத சம்பரதாயங்களுக்கு இது ஏற்றதா? போன்ற பல்வேறு கேள்விகள் முன்னெழுகின்றன. இவற்றுக்கான விடைகளை மூவின மக்களும் இணைந்தே இனம் காணவேண்டும்.
அது சாத்தியமா? இனங்கள் தம் தனித்தன்மையை பேணுகின்ற போது அங்கே பெண்கள் தான் கலாசார காவிகளாகவும், குறியீடுகளாகவும் உள்ளனர். எனவே பெண்கள் கட்டமைக்கப்பட்டிருக்கும் முறைமை முக்கியமானது. அந்த முறைமைகளில் மாற்றத்தை எந்த இனமும் விரும்புவதாக இல்லை. இந்த நேரத்தில் இலங்கையில்; எந்தளவிற்கு ஆண் பெண் சமத்துவ பாலியல் வாழ்வுக்கு அமைப்புகள் நிறுவனங்கள் உதவ முடியும் என்று பார்க்கலாம். அனேகமாக திருமணமான தம்பதியினரிடையே தான் இதுபற்றி கதைக்கப்படுகிறது. அதுகூட மறு உற்பத்தியில் (குழந்தை பேற்றில்) ஏற்படுகின்ற பிரச்சினைகளின் போது தான் இதுபற்றி கதைப்பதற்கு தம்பதியினர் முன்வருகின்றனர்.
அதற்கு முன்னாhன காலப்பகுதி, திருமணத்திற்கு முன்னான பருவ வயது என்பன முக்கியமானவை. இலங்கையில் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களிடையே எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் 75மூ ஆனவர்கள் தாம் பாலியலை நண்பர்கள், படங்கள் மூலம் அறிந்ததாகத்தான் கூறினர். இது எந்தளவிற்கு ஒரு தரமான பாலியல் அறிவை அவர்களுக்கு வழங்கியிருக்கும்?இன்று (2006) இலங்கையில் 5 மில்லியனுக்கும் அதிகமான 15-24 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர்கள் எச் ஜ வி தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
குருடன் குருடனுக்கு வழிகாட்டியது போல் தான் பாலியல் அறிவை பெறுகின்றனர்.இதேநேரம் பெண்களைப் பெறுத்தளவில் நகர்ப்புற பெண்களை விட கிராமப்புற பெண்கள் மிக குறைந்தளவு பாலியல் அறிவையும் அதேநேரம் மிக குறைந்த வயதில் பாலியல் அனுபவத்தையும் பெறும் வாய்ப்பு இருக்கிறது.
கிராமத்தில் இளவயது திருமணம் மூவின மக்களிடமும் உண்டு. அத்துடன் கிட்டிய உறவினர்கள் மூலம் சிறுவயதில் துஷ்பிரயோத்திற்கு உள்ளாகும் அவலங்களும் உண்டு.இது ஆண் பெண் இருவருக்குமே நடந்தேறுகின்றன.
பெண்களுக்கு எதிரான அனைத்து பாரபட்சமான பாகுபாட்டு வடிவங்களை அகற்றும் பொருட்டு உருவான ஒப்பந்த உடன்படிக்கை “சீடோ (CEDAW) அதில் உறுப்புரை 10 இல் உடல் நலம் குறித்துக் கற்கவும், பாலியல் கல்வி பெறவும் உரிமை உள்ளது. என்று கூறப்படுகிறது. அதை அரசு எந்தளவிற்கு நடை முறைப்படுத்துகிறது? சமூகம் எந்தளவிற்து ஏற்றுக்கொள்கிறது.? என்பன கேள்விகளாகத்தான் உள்ளன.
இலங்கை குடும்பத்திட்டச்சங்கம் இளவயதினரிடையே “பாலியலும் மறு உற்பத்தி ஆரோக்கியமும்’ தொடர்பாக கருத்தரங்குகளை வைத்தாலும் மிக குறைந்தளவிலானவர்களே இதில் பங்கு கொள்வது தெரியவருகிறது. இதற்குக் காரணம் “பாலியல்’ பற்றி நமது சமூகம் கொண்டிருக்கக்கூடிய எண்ணப்பாங்குகளாகும்.
2001 இல் இருந்து 2003 வரையான காலப்பகுதியில் இலங்கை குடும்பத்திட்டச்சங்கம் நடத்திய “பாலியலும் மறு உற்பத்திக்கான ஆரோக்கியமும் “ பற்றிய கருத்தரங்குகளில் ஆறு பாடசாலைகளில் “ஹெல்த் கிளப்’ அமைக்கப்பட்டமையும், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் வேலை செய்வோருக்காக நடத்தப்பட்ட கருத்தரங்குகளும் குறிப்பிடத்தகன.ஆனாலும் இவை போதியதாக இல்லை.
திருமணத்திற்கு முன் தம்பிள்ளைகளுக்கு பாலியலும் மறு உற்பத்தி; ஆரோக்கியமும் தொடர்பான அறிவை, தகவலை வழங்க பல பெற்றோர் சம்மதிப்பதில்லை. ஆண் பெண் சமத்துவமற்ற இந்த சமூகத்தில் பாலியல் சார்ந்தே பெண்ணை கட்டுப்படுத்துகின்ற இந்த சமூகத்தில், பாலியல் பற்றியும் மறு உற்பத்தி பற்றியும் தெளிவான அறிவு இருவருக்கும் கொடுக்கப்பட வேண்டும். அதிலும் பெண்கள் இந்த அறிவை பெறுவதில் பாரபட்சம் உண்டு. அதாவது;
மறு உற்பத்தியா? -----
பெண்களுக்கு ஒகே!
பாலியல்?-----
வேண்டாம்!
ஆண்களுக்கு பாலியல்?
----- ஓகே!
மறு உற்பத்தி? -
-----அவசியம் இல்லை!
இந்த நிலைதான் இருக்கிறது. இலங்கை மக்களின் மனப்பாங்கில். இது மதகலாசார கட்டமைப்பாலும் அதனால் ஏற்பட்டிருக்கும் ஆண் பெண் சமத்துவமின்மையாலும் ஏற்பட்டது. இந்த நிலைமைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
பாலியல் பற்றி நண்பர்கள் மூலமும், படங்கள் மூலமும் அறிந்து கொள்ளும் பெரும்பாலானோர் கருத்தடை பற்றி எதுவும் அறியாதவர்களாகவே உள்ளனர். இதனால் பாதிக்கப்படுவது யார்? மீண்டும் பெண்கள்தான், வேண்டாத கர்ப்பம்! கருக்கலைப்பு. இலங்கையில் கருக்கலைப்பு தடை செய்யப்பட்டது. இந்த நிலையில் சட்ட விரோத கருக்கலைப்புகள் பெண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. சில வேளைகளில் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
இலங்கையில் சட்ட விரோதமாக கருக்கலைப்பில் ஈடுபடுபவர்களில் அனேகர் திருமணமான பெண்கள் தான் என்று தகவல்கள் கூறுகின்றன.அதேநேரம் இன்று(2006) 324 குடும்ப பெண்கள் எச் ஜ வி தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என தேசிய எயிட்ஸ் தடுப்பு நிலைய பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.ஏன் இந்த நிலை? இந்த இடத்தில் மறு உற்பத்தி சார்ந்த ஆரோக்கித்தில் ஆணின் பங்கு என்ன?
ஒரு கணவனின், தந்தையின் பங்கு என்ன?
குடும்ப அலகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இலங்கை போன்ற நாடுகளில் ஆண் பெண் இருவருக்குமான பங்காற்றல் குடும்பம் சார்ந்து கணிப்புப் பெறுவதில்லை (பெண்களுக்கு மட்டும் குடும்பம் சார்ந்தது, ஆண்களுக்கு சமூகம் சார்ந்தது)
இதனால், இப்படி மதங்கள் கலாசாரங்களுடன் பின்னிப் பிணைந்து காணப்படும் ஆண் பெண் அசமத்துவநிலை மிக பெரிய இடைவெளியைக் கொண்டது.
இந்த சமத்துவமற்ற பால் நிலைத் தன்மையானது(Gender) பாலியலிலும்(Sexuality) , தாக்கம் செலுத்த பெண்ணுக்கு பாலியல் வாழ்வு ஒரு பெரும் சவாலாகிறது.அல்லது பிரச்சனைக்குரியதொன்றாகிறது. இந்த சவாலை எதிர்கொள்ள ஆண் பெண் இருவருக்குமான பாலியல் கல்வியும், மறு உற்பத்தி சார்ந்து ஆண்களுக்கும் போதியளவு அறிவூட்டலும் அவசியம்.
இதேநேரம், எச்.ஐ.வி. தொற்றுக்கும் பெண்களே அதிகளவில் ஆளாகின்றனர் என்பதற்கு பெண்களின் உடல் அமைப்பை ஒரு காரணமாகக் கூறினாலும், சமூகத்தில் பெண்ணின் நிலை, தரம் என்பனவும் இதில் பெருமளவு செல்வாக்குச் செலுத்துகின்றன. அதாவது பாலியல் தொழில் செய்யும் நிலைமை, கணவனின் பாலியல் விருப்பை நிராகரிக்க முடியாமை, பாலியல் வல்லுறவுக்கு இலகுவாக உட்படுதல் போன்றன பெண்களின் பாலியல் வாழ்வை அச்சத்திற்குள்ளாக்குகின்றன.
பாலியல் சார்ந்த மொழியைக் கூட பெண் பயன்படுத்த முடியாத கொடுமை தமிழ் சமூகத்தில் உண்டு.
அண்மைக்காலத்தில் இந்தியாவில் “பெண் மொழி’ சார்ந்த பிரச்சினை இத்தகையதே. அதாவது பெண்ணுடல் சார்ந்து பெண்களால் எழுதப்பட்ட கவிதைகளுக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பயது. அப்படி பாடிய பெண்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சிக்கும் இலக்கிய ஜாம்பவான்களையும் காண முடிந்தது. பெண்களின் பாலியலை வைத்தே பிழைப்பு நடத்திய ஆண் இலக்கியவாதிகளுக்கு பெண்களின் பாலியல் வலிகள் கொடுமைகள் பெண்களால் எடுத்துக் கூறப்பட்ட போது சகிக்க முடியாது போனது. அண்மைக் காலத்தில் “குஷ்பு’ என்ற நடிகை பெண்களின் பாலியல் தன்மை பற்றி கூறிய கருத்துக்கு கிளப்பப்பட்ட பெரும் சர்ச்சையும் கவனத்தில் எடுக்கத்தக்கது. மிகப்பெரும் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சை கிளம்ப தமிழ் கலாசாரம் இம்சிக்கப்பட்டதாக தமிழ் பெண்கள் மானம் பறிக்கப்பட்டதாக கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இப்படி பெண்கள், பெண்களின் பாலியல் சார்ந்த கருத்துக்களை வெளிப்படுத்தினால் அதை கலாசார புடம் போட்டு அடித்து வீழ்த்துவதும், சம்பந்தப்பட்ட பெண்களை பாலியல் ரீதியாகவே தாக்குவதும், பெண்கள் பாலியலை அறிந்து கொள்வதை திட்டமிட்டு தடுக்கிறது.
சமூக ஒழுங்கு என்பது பெண் உடலுக்கு போடப்படும் பூட்டு மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டு இயங்கும் ஆண்மைய கருத்துருவாக்கங்கள் ஒரு சமத்துவமான கௌரவமான ஆண் பெண் உறவு நிலையில் உடைபட வேண்டும்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் மனித பாலியல் பற்றியும், மறு உற்பத்தி பற்றியும் தெளிவான அறிவு கொடுக்கப்பட வேண்டும். இது மனித உரிமை சம்பந்தப்பட்டது. மத கலாசாரங்களுக்குள் கட்டுப்பட்டு பாரபட்சமாக இந்த அறிவு கிடைக்குமாயின் அதில் பாதிக்கப்படுவது பெண்தான்.
சந்தோஷமசான பாலியல் வாழ்வையும், தரமான மறு உற்பத்தி ஆரோக்கியத்தையும் ஒவ்வொரு நபரும் பெறுவதை அரசும் அரசுசாரா நிறுவனங்களும் உறுதிப்படுத்த வேண்டும். அது மட்டுமல்லாமல் மத நிறுவனங்கள் கூட, இதை உறுதிப்படுத்த வேண்டும். இன்றைய காலத்தில் பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டுள்ள பெண்கள் மறு உற்பத்தியிலும் திட்டமிட வேண்டிய தேவை உள்ளது. எத்தனை குழந்தைகள் வேண்டும், எப்போது வேண்டும் போன்றவற்றை சிந்திக்கும் ஆற்றலும் வலுவும் அறிவும் இருவருக்குமே வேண்டும்.

குடும்பக்கட்டுப்பாடு செய்வது பாவமான விடயம் என்று மதங்கள் சில நம்புகின்ற நிலையில் பாதிக்கப்படுவது பெண்களின் ஆரோக்கியம். இந்த நிலையில் சில மத நிறுவனங்கள் குறிப்பாக கிறிஸ்துவ மத நிறுவனம் திருமணம் முடிக்கப் போகும் தம்பதியினருக்கு வழங்கும் பாலியல், மறு உற்பத்தி தொடர்பான அறிவு வரவேற்க்த்தக்கதே. ஆனாலும், போதியதாக இல்லை.
பாலியல் வாழ்வில் திருப்தியைக் “கொடுப்பதும்’ மறு உற்பத்தியில் குழந்தை பெற்றுக் “கொடுப்பதும்’ பெண்களாகமட்டும் இருந்தால் ஒரு முழுமையான கௌரவமான பாலியல் வாழ்வையும், மறு உற்பத்தி ஆரோக்கியத்தையும் ஒரு குடும்பம் கொண்டிருக்க முடியாது.
ஒருவருக்கொருவர் கௌரவம் கொடுத்து பரிமாறிக் கொள்கின்ற வாழ்க்கையைப் பெறுவதற்கு பால் நிலை சமத்துவமான பாலியல் கல்வி அவசியம். இலங்கையைப் பொறுத்தவரை கல்வி அறிவு வீதம் அதிகம். பெண்கள் கல்வி கற்பதும் அதிகம், சுகாதார வசதிகளும் சிறப்பாக உள்ளன. எனவே, குடும்ப வாழ்வு தரமானது என்ற முடிவே உள்ளது. அதிலும் குழந்தைகள் இறப்பு வீதம் குறைவடைந்துள்ளது. குடித்தொகை வளர்ச்சி வீதம் குறைவடைந்துள்ளது. எனவே, தரமான வாழ்க்கைத்தரம் இலங்கையில் உள்ளது என்ற முடிவுக்கு பலர் வரலாம்.
ஆனால், மறுபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற வீட்டு வன்முறைகள், வெளியில் உள்ள பெண்களுக்கெதிரான வன்முறைகள், சிறுவர்கள் பெண்கள் கடத்தப்படல், கருக்கலைப்பு, பாலியல் துஷ்பரயோகம் எச்.ஐ.வி. தொற்று, பாலியல் தொழில் என்பன எதனுடைய மறுபக்கங்கள்? அந்த “தரமான” வாழ்வின் மறுபக்கங்கள்.
இவை வெளிப்படுத்துவது என்ன?
ஆண் பெண் பால்நிலையில் பாலியல் சமத்துவம் இன்மையை.
இவற்றை செய்வது அல்லது செய்யத் தூண்டுவது யார்?
இவற்றால் பாதிப்பற்குள்ளாவது யார்?
பெரும்பாலும்; பாதிக்கப்படுவது பெண்கள்தான்.
அப்போ குடும்ப அலகில் முக்கியமான இருவரில் ஒருவர் பாதிப்பற்குள்ளாகும் போது அது “தரமான வாழ்வு’ என்று கூறலாமா?
இல்லை.
குறைந்தபட்சம் ஒவ்வொரு தனி நபரும் தனக்குரிய வாழ்க்கை துணையுடன் கௌரவமான ஆரோக்கியமான பாலியல் வாழ்வையும், மறு உற்பத்தி அறிவையும் கொண்டு இயங்க வேண்டும். ஒவ்வொருவரினதும் உணர்வை மதித்து, புரிந்து, அறிந்து செய்படுதல் வளமான வாழ்வுக்கு வழியாகும்.

No comments: