Friday, April 17, 2015

விடுவித்தலும் காத்தலும்

என் நகர்வு சாத்தியப்படாத பொழுதுகள் எல்லாம்
ஒரு இடத்தில் தங்கியவள் அல்ல நான்.
வீடு துறந்து வீதிகடந்து ஊர் ஊராய்……
நாடு நாடாய்
சில பொழுதுகளில்
அண்டவெளியும் கடந்து போன பொழுதுகள் அவை.

நகர்வுக்கு சாத்தியமான
அத்தனை வழிகளும் திறந்துள்ளன
நகர முடியாதவளாய்….
எங்கும் நகரமுடியாதபடி…
நொடிப்பொழுதுகளே நீழும் யுகங்களாக
உயிர் தேடி தோற்கும் கணங்கள்.
ஆடை உருவப்பட்ட உடல்
உயிரின் சுமையாய்……
வலிதாங்கா உயிரை விடுவிக்க
வழி ஏதும் இல்லை.
தேடித் தேடி தோற்றவளாய்….
‘அவன்களது’ தோட்டாக்கள்
உடல் குதறி உயிர் தேடியும்
அகப்படாது பிதுங்கி நின்ற உயிர்!
இதை காக்கவா
இத்தனை கோயில்களும்???

வைத்தியசாலைகளும்????

No comments: